கடுமையான குளிரும், உறைபனியும் கொண்ட ஒரு காலை வேளையிலே நானும், என் மகளும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது எங்கள் சுவாசம் நீராவியாக மாறுவதைக் கண்டு, இருவரும் விதவிதமான நீராவி மேகங்களை உருவாக்கி, சிரித்து கொண்டிருந்தோம். நான் உயிரோடிருக்கவும், என் மகளோடு குதூகலமாக நேரத்தை செலவிடவும் கிடைத்த அத்தருணத்தை ஈவாக கருதி கொண்டாடுகிறேன்.

பொதுவாக கண்ணுக்குப் புலப்படாத நம்முடைய சுவாசம், அன்று அந்த குளிர்ந்த காற்றினிலே காணமுடிந்தது   . அது நம் ஜீவ சுவாசத்தின் ஊற்றாகிய நமது சிருஷ்டி கர்த்தரை நினைவுகூரச்செய்தது. ஏனெனில், பூமியின் மண்ணினாலே உருவாக்கப்பட்ட ஆதாமிற்கு ஜீவசுவாசத்தை அளித்தவர், நமக்கும், இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீவனை அளித்துள்ளார் (ஆதி. 2:7). நாம் சுவாசிக்கும் பொழுது, நாம் எண்ணிப்பார்க்காத சுவாசக்காற்று உட்பட அனைத்தும் அவரிடமிருந்தே வந்துள்ளது.

நம்முடைய ஆரம்பத்தையும், தேவனே நமக்கு ஜீவனை அளித்தவர் என்பதையும் நாம் மறந்து போகும்படி இன்றைக்கு நாம் அனுபவித்து கொண்டிருக்கும் சவுகரியங்களையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு நாம் சோதிக்கப்படலாம். ஆனால் தேவனே நம்முடைய சிருஷ்டி கர்த்தர் என்பதை நிதானித்து நினைவுகூரும் பொழுது, நம்முடைய அன்றாட வாழ்வில் நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ளலாம். அவருடைய உதவியை நாடி ஈவாக பெற்றுக்கொண்ட இவ்வாழ்வை எண்ணி தாழ்மையோடு உள்ளத்தின் ஆழத்தினின்று நன்றி கூறலாம். நம்முடைய நன்றியுணர்வு நம்மிலிருந்து வழிந்து மற்றவர்களையும் தொட்டு, அதன் மூலம் தேவனுடைய நன்மையையும், உண்மையையும் எண்ணி அவர்களும் நன்றிகூரட்டும்.