ஹென்றி மட்டீஸ் (Henry Matisse) என்னும் பிரான்ஸ் தேச கலைஞர் தன் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் தான் படைத்த படைப்புகளே தன்னை சிறப்பாக பிரதிபலிப்பதாக கருதினார். அக்காலக்கட்டத்தில், அவர் புதியதொரு பாணியை முயற்சி செய்து பார்த்தார். அதாவது, வண்ணம் தீட்டுவதற்கு பதில், காகிதங்களைக் கொண்டு பெரிய வண்ணமயமான படங்களை உருவாக்கினார். தன் அறையின் சுவர்களை இப்பிரகாசமான படங்களினால் அலங்கரித்தார். அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பெரும்பாலும் படுக்கையிலேயே கழிக்க நேர்ந்ததால், இது அவருக்கு மிக முக்கியமானதாயிற்று.
நோய்வாய்ப்படுதல், வேலையை இழந்து போதல் அல்லது தீராத மனவேதனையினால் அவதிப்படுத்தல் போன்றவை நம்மை அச்சத்தில் ஆழ்த்தும். இதை ‘பள்ளத்தாக்கின்’ அனுபவம் என சிலர் கூறுகின்றனர். தங்களை நோக்கி ஒரு சேனை படையெடுத்து வருகிற செய்தியை யூத ஜனங்கள் கேட்ட பொழுது இதை அனுபவித்தார்கள் (2 நாளா. 20:2-3). அப்பொழுது அந்த ராஜா, “எங்கள்மேல்…. தீமைகள் வந்தால்,… எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர்..,” என்று (வச. 9) ஜெபித்தார். அதற்க்கு தேவன் “நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்றார்” (வச. 17).
யூதசேனை போர்க்களத்தை அடைந்த பொழுது, அவர்களுடைய எதிரிகள் ஒருவருக் கொருவர் வெட்டுண்டு மடிந்து போனதைக் கண்டார்கள். பின்பு, தேவ ஜனங்கள் கைவிடப்பட்ட பொருட்களை மூன்று நாட்களாக சேகரித்தார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்படும்முன், அவ்விடத்திலே ஒன்று கூடி தேவனைத் துதித்து, அவ்விடத்திற்கு “பெராக்கா பள்ளத்தாக்கு” என பெயரிட்டார்கள். ‘பெராக்கா’ என்றால் ‘ஆசீர்வாதம்’ என்று அர்த்தம்.
நம்முடைய வாழ்வின் தாழ்வான சமயங்களிலும் தேவன் நம்மோடு நடந்து வருகிறார். பள்ளத்தாக்குகளிலும் ஆசீர்வாதங்களை கண்டுகொள்ள தேவன் வழிசெய்வார்.
நம்முடைய பாரங்களை ஆசீர்வாதங்களாக மாற்ற வல்லவர் நம் தேவன்.