கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு வரும் வாரங்கள் அமெரிக்காவிலுள்ள வியாபாரிகளுக்கு மிகவும் பரபரப்பான நாட்கள் ஆகும். ஏனெனில் தாங்கள் பெற்ற வேண்டாத பரிசுப் பொருட்களை திரும்ப கொடுத்து அதற்கு மாறாக வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ள அநேகர் வருவார்கள். ஆனாலும், நிறைவான பரிசுப் பொருளை கொடுக்கக்கூடிய சிலரை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு நபர் விரும்பும் பொருளை ஏற்ற தருணத்தில் அளிக்க அவர்களுக்கு மாத்திரம் எப்படி தெரியும்? நிறைவான சிறந்த பரிசை அளிப்பதற்கு பணம் பிரதானமானதல்ல; மாறாக தனிப்பட்ட விதத்தில் அவர்கள் மேல் அக்கறை கொண்டு, அவர்களுடைய விருப்பங்களைக் கவனித்து அறிந்து கொள்வதே முழுநிறைவான பரிசளிப்பதற்கான திறவுகோல்.
இது நம்முடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பொருந்தும். ஆனால் தேவனுக்கும் இது பொருந்துமா? அர்த்தமுள்ள அல்லது மதிப்புமிக்க பரிசை அவருக்கு நாம் கொடுக்க முடியுமா? அவரிடம் இல்லாததென்று ஏதேனும் உள்ளதா?
தேவனுடைய அளவற்ற ஞானம், அறிவு மற்றும் மகிமையை எண்ணி அவரை ஆராதிக்கும்படியாய் ரோமர் 11:33-36 வசனங்களும் அதைத் தொடர்ந்து, “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (12:1). இந்த உலகத்தினால் நாம் வனையப்படாமல், “மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்றும் கூறுகிறது (வச. 12).
இன்று தேவனுக்கு நாம் அளிக்கக் கூடிய சிறந்த பரிசு எது? மனத்தாழ்மையோடும், நன்றியுள்ள இருதயத்தோடும் நம்முடைய மனம், சிந்தை, சித்தம் என்று நம்மையே முழுமையாக அவருக்கு ஒப்புக்கொடுக்கலாம். நம் ஒவ்வொருவரிடமிருந்து தேவன் பெற விரும்பும் பரிசு இதுவே.
தேவனுக்கு நாம் அளிக்கக்கூடிய சிறந்த பரிசு நாமே.