அதை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது
ஒரு சபையை சார்ந்த உதவியாளர்கள் ஒரு சாயங்கால வேளையில் ஒன்று கூடி, குறைந்த வருமானம் உள்ள மக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று உணவு பொருட்களை வழங்கினர். அப்படி உணவை பெற்றுக்கொண்ட ஒரு பெண் மிகவும் சந்தோஷமடைந்தாள். அவளுடைய வெறுமையான அலமாரியை திறந்து காட்டி, அந்த உதவியாளர்களே அவளுடைய ஜெபத்திறகான பதில் என்று கூறி நன்றி தெரிவித்தாள்.
உதவியாளர்கள் சபைக்குத் திரும்பிய போது, அவர்களில் ஒரு பெண் அழ ஆரம்பித்தாள். “நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது, அந்தப் பெண்மணி தான் என்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியை. அவர் இந்த சபையில் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தது எங்களுக்கு தெரியவில்லையே!” என்று மனம் வருந்தினார்.
இந்த அன்பான உதவியாளர்கள் தங்களால் முடிந்த வகையில் பிறருடைய பாரங்களை சுமக்க முயன்றனர். இதைத் தான் பவுல் கலாத்தியர் 6:2ல் கூறியிருக்கிறார். ஆனால் எப்படியோ அவர்கள் அந்தப் பெண்மணியின் நிலையை அறியாமல் இருந்தனர். ஒவ்வொரு வாரமும் அப்பெண், சபைக்கு வந்தபோதும், அவள் யாரிடமும் தன்னிலையைச் சொல்லவில்லை. நம்மை சுற்றியுள்ள மக்களின் நிலையை அறிந்து கொள்வதைக் குறித்து, இந்த சம்பவம் நமக்கு நினைவுபடுத்துகின்றது. “யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10) என்று பவுல் கூறுகிறார்.
ஒன்றாய்க் கூடி ஆராதிக்கும் மக்களின் பெரும் பாக்கியம் என்னவென்றால் ஒருவருக்கொருவர் உதவியாய் இருப்பதே. இப்படி செய்யும் போது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையினர் கஷ்டத்தில் இருக்கும்பொழுது, ஒருவர்கூட உதவி செய்ய ஆளில்லாமல் தவிக்க வேண்டியது இல்லை. சபையில் ஒருவரை ஒருவர் நாம் சந்தித்து, பேசி, பழகி, அறிந்து அவர்கள் துன்பத்தில் உதவும் பொழுது, “அவர்களுக்கு பிரச்சனையா? அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாதே” என்று சொல்வது இல்லாமல் போகும்.
ஒரு கடினமான மலை
இடாஹோ (Idaho) என்னும் இடத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு மேற்கில் ஜூக்கான்டால் (Jughandle) சிகரத்தின் மலைமடிப்புகளின் மத்தியில் ஒரு பனிப்பாள ஏரி உள்ளது. இந்த உறைந்த ஏரிக்குச் செல்லும் பாதை மிகவும் செங்குத்தான, பாதுகாப்பற்ற வழி. அதுமட்டுமன்றி வழியெங்கும் கற்பாறைகளும், சிதறுண்டு கிடக்கும் கற்களும் இருக்கும். அது ஒரு கடினமான மலையேற்றமாகும்.
ஆனால், இந்த மலையின் அடிவாரத்தில் ஒரு ஓடை உள்ளது. பாசிபடர்ந்த லேசான மணற்பரப்பிலிருந்து நீருற்று கசிந்து ஒரு பசுமையான புல்வெளியின் ஊடாய் ஓடுகின்றது. இது கடினமான மலையேற்றத்திற்குமுன் நன்கு நீர் அருந்தி, நம்மை தயார்படுத்திக் கொள்ள ஏற்ற ஒரு அமைதியான இடம்.
கிறிஸ்தவ வாழ்வை சிறப்பாக உருவகப்படுத்திய ஜான் பனியனின் “மோட்சப் பிரயாணம்” (The Pilgrim’s Progress) என்னும் இலக்கியத்தில், ‘கடின மலை’ என்று அழைக்கப்படும்; செங்குத்தான மலையின் அடிவாரத்திற்கு கிறிஸ்தியான் வருகிறான். “அந்த அடிவாரத்தில் ஓர் ஓடை இருந்தது. கிறிஸ்தியான் அந்த ஓடைக்கு சென்று நீர் அருந்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மலையேறத் தொடங்கினான்.”
ஒரு வேளை நீங்கள் எதிர்கொள்ளும் அந்தக் கடினமான மலை உங்கள் முரட்டாட்டமான பிள்ளையாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கியமான மருத்துவ சோதனையின் முடிவாக இருக்கலாம். நீங்கள் எதிர்கொள்ளும் சவால் உங்களால் தாங்க முடியாத ஒன்றாகத் தோன்றலாம்.
ஆகவே நீங்கள் உங்களுடைய அடுத்த முக்கியமான பணியை மேற்கொள்ளும் முன்பு, புத்துணர்வளிக்கும் நீருற்றுக்கு செல்லுங்கள். அதாவது தேவனிடம் செல்லுங்கள். உங்களுடைய பெலவீனம், சோர்வு, உதவியற்ற நிலை, பயம், சந்தேகம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று அவருடைய வல்லமையை, பெலத்தை, ஞானத்தை நிறைவாய்ப் பருகுங்கள். தேவன், உங்களுடைய எல்லா சூழ்நிலைகளையும் அறிவார், ஆவிக்குரிய பெலத்தையும், சமாதானத்தையும் அளவில்லாமல் அளிப்பார். அவர் உன் தலையை உயர்த்தி, நீ செல்லுவதற்கு வேண்டிய பெலத்தை உனக்களிப்பார்.
ஒரு பாதுகாப்பான இடம்
ஜப்பானிய இளைஞன் ஒருவனுக்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல பயம். மற்றவர்களை சந்திக்காமல் இருக்க பகல் முழுவதும் தூங்கி, இரவு முழுவதும் டிவி பார்த்து கொண்டிருந்தான்; அவன் ஒரு ‘ஹிக்கிகோமோரி’ (hikikomori). அதாவது, நவீன காலத் துறவி. இந்தப் பிரச்சனை அவன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திய பொழுது ஆரம்பித்ததுதான். சமுதாயத்திற்கு ஏற்றவன் அல்ல என்ற எண்ணம் மேலோங்கியது. இறுதியில் அவன் தன் குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களிடமும் முழுமையாகத் தொடர்பை துண்டித்துக் கொண்டான். இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வர டோக்கியோவில் (Tokyo) உள்ள ஐபாஷோ (Ibasho) என்னும் வாலிபர் சங்கத்திலே சேர்ந்து உதவி பெற்றுக்கொண்டான். ‘ஐபாஷோ’ என்றால் பாதுகாப்பான இடம் என்று அர்த்தம். அதாவது, சமுதாயத்திற்குள், உடைந்துபோன மக்கள் தங்களை மீண்டுமாய் சமுதாயத்தில் இணைத்துக்கொள்ள, பாதுகாப்பான ஓர் இடம்.
நம்முடைய சபையை ‘ஐபாஷோ’ போலவும், அல்லது அதற்கும் மேலாகவும் எண்ணிக் கொண்டால் எப்படி இருக்கும்? சந்தேகமின்றி உடைந்து போன மக்களைக் கொண்ட சமுதாயம் தான் நம் சமுதாயம். அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதும் பொழுது, அவர்களுடைய பழைய வாழ்வு, சமுதாயத்திற்கு எதிரானதும், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுமாயிருந்தது என்று குறிப்பிடுகிறார் (1 கொரி. 6:9-10). ஆனால் கிறிஸ்துவுக்குள் அவர்கள் புது சிருஷ்டிகளாக்கப்பட்டு முழுமையானார்கள். விடுவிக்கப்பட்ட இவர்களைப் பார்த்து பவுல், ஒருவரை ஒருவர் நேசிக்கவும், பொறுமையாயிருக்கவும், தயவு பாராட்டவும், பொறாமை, பெருமை மற்றும் கோபமின்றி இருக்கவும் உற்சாகப்படுத்தினார் (13:4-7).
எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளையோ, மனமுறிவுகளையோ எதிர்கொண்டாலும், தேவனுடைய அன்பை அறிந்து கொண்டு, அநுபவிக்கும் ஐபோஷா போன்ற இடமாக சபை இருக்க வேண்டும். காயப்பட்டிருக்கிற இந்த உலக மக்கள், கிறிஸ்துவின் மனதுருக்கத்தை அவரை பின்பற்றுகிற அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வார்களாக.
செயல்படும் அன்பு
“ஏதாவது சில துணிகள் துவைக்க வேண்டி இருந்தால், துவைத்துத் தரட்டுமா?” என லண்டனில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் பார்த்துக் கேட்டேன். உடனே அவருடைய முகம் பிரகாசமாகி, அப்பொழுது எங்களைக் கடந்து சென்ற அவருடைய மகளைப் பார்த்து, “உன் அழுக்குத் துணிகளை எல்லாம் கொண்டு வா. எமி நம்முடைய துணியையெல்லாம் துவைக்கப் போகிறாள்!” என்றார். சில துணிகள் மாத்திரமே துவைக்கும்படி உதவ நினைத்து, இப்பொழுது ஒரு அழுக்கு மூட்டையையே துவைக்க ஏற்பட்ட நிலையைக் குறித்து நான் புன்னகைத்தேன்.
பின்பு அத்துணிகளை கொடியிலே காயப்போட்டுக் கொண்டிருந்தபொழுது, அன்று காலை வாசித்த வேத பகுதியிலுள்ள ஒரு வசனம் என் நினைவுக்கு வந்தது. அது “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி. 2:3). பவுல், பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தை நான் படித்துக் கொண்டிருந்தேன். அதில் அவர் பிலிப்பியர்களை நோக்கி தேவனுடைய அழைப்பின் மகிமைக்கேற்ப, நாம் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழும்படியாய் உபதேசித்து உற்சாகப்படுத்துகிறார். உபத்திரவப்பட்டு கொண்டிருந்த அவர்களைப் பார்த்து பவுல் ஒரே மனதுடையவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளான அவர்களுடைய ஐக்கியத்தின் விளைவாகப் பிறக்கும் அவர்களுடைய ஒற்றுமை, ஒருவருக்கொருவர் உதவி செய்வதின்மூலம் வெளிப்பட்டு, விசுவாசத்திலே அவர்களை பலப்படச் செய்யும் என்பதை பவுல் நன்கு அறிந்திருந்தார்.
நாம் சுயநலமான நோக்கமோ அல்லது வீண் பெருமையோ இல்லாமல் பிறரை நேசிப்பதாகக் கூறலாம், ஆனால், நம் இருதயத்தின் உண்மையான நிலை, நம்முடைய அன்பை செயலில் காட்டும்பொழுது தான் வெளிப்படுகிறது. அவ்வளவு துணிகளைத் துவைக்கும்போது முறுமுறுக்கத் தோன்றியது. ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுபவளாக என்னுடைய அன்பை, சுத்த இருதயத்துடனே, செயலிலே என் நண்பர்களுக்கு வெளிப்படுத்தும்படியாகவே அழைக்கப்பட்டிருக்கிறேன்.
தேவனுடைய மகிமைக்கென்று நாம் நம்முடைய குடும்பத்தினர், நண்பர் மற்றும் அருகில் இருப்பவர்களுக்கு உதவ வழிகளை கண்டடைவோம்.
பலசாலியான வெற்றிவீரன்
நம்மில் அநேகர் ஒரு நல்ல அரசாங்கம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே நாம் நீதியென்றும், நியாயமென்றும் எண்ணும் காரியங்களுக்காக ஓட்டுப் போடுகிறோம், சேவை செய்கிறோம் மற்றும் அதற்காக குரல் கொடுக்கவும் செய்கிறோம். ஆனால் நம்முடைய இருதய நிலையை மாற்றக் கூடிய வல்லமை அரசியல் தீர்வுகளுக்குக் கிடையாது.
இயேசுவை பின்பற்றிய அநேகர், தங்களைக் கடுமையாக, தன் பலத்த கைக்குள் அடக்கி ஆண்ட ரோம சாம்ராஜ்யத்திற்கு பலமான பதிலடி கொடுக்கக்கூடிய மேசியாவையே எதிர்பார்த்திருந்தனர். பேதுருவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆகவேதான், ரோம சேவகர்கள் இயேசுவை கைது செய்ய வந்தபொழுது, பேதுரு தன்னுடைய பட்டயத்தை வீசி பிரதான ஆசாரியனுடைய வேலையாளின் காதை வெட்டி வீசினான்.
ஆனால், பேதுருவின் இந்த ‘ஒரு மனித யுத்தத்தை’ இயேசு தடுத்து, “உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ” (யோவா. 18:11) என்று கூறினார். சில மணி நேரங்கள் கழித்து, “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே” (வச. 36), என பிலாத்துவினிடம் இயேசு கூறுகிறார்.
இப்பூமியில் தேவனுடைய பணியின் தீவிரத்தை நாம் அறிந்துகொள்ளும் பொழுது, தான் மரணத்தை நெருங்கிய அவ்வேளையிலும் கூட, இயேசு காட்டிய சுயக்கட்டுப்பாடு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஒரு நாள் பரலோக சேனையை யுத்தத்திற்குள் கூட்டிச் செல்வார். “அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்” என்று யோவான் எழுதியுள்ளார் (வெளி. 19:11).
ஆனால், அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவை மரணத்தின் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த பொழுது, தன்னுடைய பிதாவின் சித்தத்தையே தன் முன் நிறுத்தியிருந்தார். சிலுவையிலே மரணத்தை தழுவினதால், உண்மையாகவே இருதயங்களை மறுரூபமாக்கும் சம்பவங்கள் சங்கிலி போல் ஒன்றன் பின் ஒன்றாக தொடரச் செய்துவிட்டார். இந்த தொடர் செயலில், நம்முடைய பலசாலியான வெற்றிவீரர் மரணத்தையே வென்று விட்டார்.