சிறப்பு அங்காடியில் (Super Market) பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தபொழுது, நொறுக்குத் தீனியைப் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலையுடன் மூக்குத்தி அணிந்த சில இளைஞர்களை கவனித்தேன். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் வாலிபன் ஒருவன் இறைச்சித் துண்டு, கீரை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்குவதையும், வயதான பெண்மணி ஸ்டராபெரி மற்றும் ‘பீச்’ பழங்களை (Peaches) வாங்குவதையும் பார்த்து கொண்டிருந்தேன். இவர்களை எல்லாம் தேவன் அறிந்திருக்கிறாரா? இவர்களுடைய பெயர்கள் அவருக்குத் தெரியுமா? உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் அவருக்கு முக்கியமானவர்களா? என்றெல்லாம் என் மனதில் கேள்விகள் எழுந்தது.
எல்லாவற்றையும் படைத்தவர் தான் மனிதனையும் படைத்தார். நாம் ஒவ்வொருவரும் அவருடைய தனிப்பட்ட அன்பையும், கவனத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரவான்களாகப் படைக்கப்பட்டிருக்கிறோம். மனிதனாகப் பிறந்து தேவன் தம்முடைய அற்புதமான அன்பை இஸ்ரேல் மலைகளின் மத்தியில் வாசம் செய்து வெளிப்படுத்தினார். பின்னர் முற்றிலுமாக அதை சிலுவையில் நமக்கு காண்பித்தார்.
இயேசு பூமிக்கு ஓர் சாதாரண ஊழியக்காரரைப் போல் வந்தார். எந்த ஒரு சூழ்நிலையில் இருக்கும் எளிய மனிதனையும் அவர் கனப்படுத்தினார். அவரது பலத்த கரம் சிறுமைப்பட்ட எளியவரையும் அணைத்துக் கொண்டது. அவரது கரத்தில் ஒவ்வொருவருடைய பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. அதை அவர் தம் தழும்புகளினாலும், காயங்களினாலும், எழுதியுள்ளார். அப்படிபட்ட விலை செலுத்தி தேவன் நம்மில் அன்பு கூர்ந்தார்.
யோபு மற்றும் பிரசங்கி புத்தகங்களில் எழுதப்பட்டது போல நான் சுய-பரிதாபத்தால் வாடும் பொழுதும், தனிமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பொழுதும் நான் சுவிஷேச புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ள இயேசுவைப்பற்றிய செய்திகளை படித்து தியானிப்பேன். பிரசங்கி புத்தகத்தில் சொன்னது போல “சூரியனுக்குக் கீழே” (பிர. 1:3) வசிக்கும் மனிதனின் வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்தால், தேவன் பூமிக்கு வந்த முக்கியமான நோக்கத்தையே நான் அறியவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. நான் முக்கியத்துவம் பெற்றவனா? நான் விசேஷித்தவனா? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் உண்டு. இயேசுதான் அதற்கு பதில்.
நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனையே தருகிறான் - இயேசு