சபையிலே பிரசங்கம் செய்து கொண்டிருந்த போதகரையே உற்றுக் கவனிக்கும் விதமாக நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்தால் அவர் சொல்வதை எல்லாம் நன்றாக கவனிப்பது போல் இருக்கும். அப்பொழுது தீடீரென எல்லோரும் கைதட்டிச் சிரித்தனர். ஆச்சரியத்துடன் நான் அங்கும் இங்கும் பார்த்தேன். அந்தப் பிரசங்கியார் நகைச்சுவையாக எதையோ கூறியிருக்க வேண்டும். ஆனால் அது எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் அவர் சொல்வதைக் கவனிக்கவேயில்லை. பார்ப்பதற்கு நன்றாகக் கவனிப்பதுபோல் காட்சியளித்தாலும், உண்மையில் என் மனம் அங்கில்லை.
இதைப்போலத் தான் நாமும் பல நேரங்களில் காது கொடுப்போம்; ஆனால் கேட்கமாட்டோம். கண்களினால் பார்ப்போம்; காண மாட்டோம், வெளியரங்கமாய் ஓர் இடத்தில் இருப்போம்; ஆனால் மனதோ வேறொரு இடத்தில் இருக்கும். இப்படியே வாழ்ந்து வந்தால், நாம் பல முக்கியமான செய்திகளை அறிந்து கொள்ளாமல் போய் விடுவோம்.
தேவனுடைய கட்டளைகளை யூத ஜனங்களின் முன்பாக எஸ்றா படித்தார். “சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்” (நெ. 8:3). வாசித்ததின் அர்த்தத்தை விளக்கிய பொழுது, அவர்கள் புரிந்து கொண்டார்கள் (வச. 8). அதன் விளைவாக மனந்திரும்பி வாழ்வில் எழுப்புதல் அடைந்தனர். இது போலவே சமாரியாவில் பிலிப்பு மூலமாக எழுப்புதல் ஏற்பட்டது (அப். 8:1). எருசலேம் விசுவாசிகள் உபத்திரவப்பட்டபொழுது, பிலிப்பு சமாரிய மக்களை நோக்கி சென்றார். அந்த ஜனங்கள் அவர் செய்த அற்புத அடையாளங்களை மட்டும் பார்க்கவில்லை, “அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்” (வச. 6). அதனால் “அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று” (வச. 8).
ஊரைச் சுற்றும் வாலிபன்போல் நம் மனம் செயல்படும் பொழுது, நாம் நம் பக்கத்தில் இருக்கும் பல முக்கியமான நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளத்தவறிவிடுகிறோம். பரலோக பிதாவைப் பற்றி நாம் கேட்கும் பொழுது அளவில்லாத மகிழ்ச்சியையும், அதிசயத்தையும் உணர்கிறோம். இதை அனுபவிக்காமல் தடுக்கும் கவனச்சிதைவை தவிர்த்து அவரை அறிந்து கொள்ளும் ஜீவ வார்த்தைகளை நாம் அதிகக் கவனத்துடன் கேட்க வேண்டும்.
வார்த்தையை நாம் பெற்றுக் கொள்ள இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும். மனதால் கவனிப்பது மாத்திரமல்ல, முழு சுயசித்தத்தோடும் கவனிப்பதும் தான் - வில்லியம் அம்ஸ்