ஜேக்கப் டேவிஸ் 1800ல் வாழ்ந்த ஒரு தையல்காரர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தது. அந்த நாட்களில் அமெரிக்க மேற்கு மாகாணத்தில் தங்க சுரங்க வியாபாரம் ஓங்கியிருந்தது. அதில் வேலை செய்யும் வேலையாட்களின் கால் சட்டை (பாண்ட்) சீக்கிரத்தில் கிழிந்து போய்க்கொண்டிருந்தது, அதற்கு ஓர் தீர்வை காணவேண்டும் என்று துடித்தார். அதனால் அவர் ‘லெவி ஸ்டிராஸ்’ (Levi Strauss) நடத்திவரும் கம்பெனிக்கு சென்று, அவரிடம் இருந்து கூடாரம் செய்ய பயன்படும் துணியை வாங்கினார். அந்தத் துணி எளிதில் கிழியாத கனமான துணியாக இருந்தது. அத்துணியில் வேலையாட்களுக்கு ஏற்ற கால் சட்டையை தைத்துகொடுத்தார். அன்று தான் நீல நிற ஜீன்ஸ் பிறந்தது. இன்றைக்கு லெவியைத் தவிர்த்து பல வகையான ஜீன்ஸ் துணிகளை உலக சந்தையில் பார்க்கலாம். அதை பலர் மிகவும் விரும்பி அணியும் ஆடையாகவும் மாறிவிட்டது. ஒரு மனிதன் ஓர் சாதாரண கூடார துணிக்கு புது வடிவம் கொடுத்ததினால் இது நடந்தது.
சீமோனும் அவன் நண்பர்களும் கலிலேயா கடலில் மீன் பிடிக்கும் சாதாரண மீனவர்கள் தான். இயேசு வந்து, அவர்களை அழைத்து, அவர்களுக்கு ஒரு புதிய நோக்கத்தையும், தொடக்கத்தையும் கொடுத்தார். இனிமேல் அவர்கள் மீன்களை பிடிக்கப் போவதில்லை. ஏனெனில் “என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” ( மாற். 1:17) என்று இயேசு சொன்னார்.
இந்தப் புதிய நோக்கம் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றிப் போட்டது. இயேசுவே அவர்களுக்கு எல்லாவற்றையும் போதித்தார். அதனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற போது அவர்கள் மூலமாக தேவன் மக்களின் மனங்களை தொட்டார். இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் இவர்கள் உலகுக்கு எடுத்துச் சென்றனர். இன்று நாமும் அவர்களைப் போல கிறிஸ்துவின் அன்பையும், இரட்சிப்பையும் உலகுக்கு நற்செய்தியாய் எடுத்துச் செல்கிறோம்.
நம் வாழ்வில் இந்த தெய்வீக அன்பு வெளிப்படட்டும். ஏனெனில் அது பிறருடைய வாழ்க்கையையும், நோக்கங்களையும் நித்திய வாழ்வின் தீர்மானங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாய் ஆகும் பொழுது புதிய நோக்கத்தை பெறுகிறோம்.