மரங்களுக்கு நெருப்பு மிக மோசமான ஒரு எதிரி. ஆனால், அதுவே உபயோகமானதாகவும் திகழலாம். காட்டின் நிலப்பகுதியில் அடிக்கடி குறைந்த வீரியத்தில் பற்றியெரியும் நெருப்பு அங்கு கிடக்கும் காய்ந்த இலைகளையும், கிளைகளையும் சுட்டெரித்துவிடுகிறது. ஆனால், மரங்களுக்கோ ஒரு சேதமும் ஏற்படுவதில்லை. இதை வல்லுநர்கள் “குளிர்ந்த” நெருப்பு என கூறுகிறார்கள். இதன் விளைவாக ஏற்படும் சாம்பல்,  அங்கு விதைகள் வளர்வதற்கு ஏற்றதாயிருக்கிறது. ஆச்சரியம் என்னவெனில் மரங்கள் நன்கு வளர குறைந்த வீரியம் கொண்ட நெருப்பு அவசியமாயிருக்கிறது.

அதைப்போலவே, வேதத்தில் அக்கினியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள சோதனைகள், நம்முடைய ஆவிக்குரிய வாழ்வின் பெலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிக அவசியமானது (1 பேது. 1:7; 4:12). “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல்,  பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4) என யாக்கோபு எழுதுகிறார்.

பெரும்பாலும் சோதனை நேரங்களில் தேவனுடைய சித்தம் நிறைவேற்றப்படுகிறது. எப்படியெனில் நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கு அவை ஏற்ற நிலைமையாய் உள்ளது. இந்த வளர்ச்சி நம்முடைய வாழ்விற்கு மாத்திரம் நம்மை தயார்படுத்துவதில்லை, உலகத்திற்கு இன்றியமையாத தேவையான இயேசுவை நாம் துல்லியமாக வெளிப்படுத்துவதற்கும் நம்மை பெலப்படுத்துகிறது.

பிதாவின் கரங்களில் நம் சோதனைகளை ஒப்புக்கொடுக்கும் பொழுது அவை நமக்கு நன்மையையும் பிதாவின் நாமத்திற்கு மகிமையையும் உண்டாக்குகிறது. மேலும் நாம் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் மாறும்படியாக உதவுகிறது.