எனது தேசமாகிய சிங்கப்பூரில் கிடைக்கும் தட்டையான ரொட்டி வகையை சேர்ந்த முட்டை பரோட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகையால், 57 கிலோ எடையுள்ள ஒருவன் 8 கிலோ மீட்டர் வேகத்தில் 30 நிமிடங்கள் ஒடினால் 240 கலோரிகளை எரிக்கலாம் என்பதை படித்துக் கலக்கமடைந்தேன். ஏனென்றால், அது ஒரே ஒரு முட்டை பரோட்டாவுக்குச் சமம்.
நான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து, அந்த எண்களெல்லாம் எனக்கு புதிய முக்கியத்துவம் வாய்ந்ததாயிற்று. என்னையறியாமல், இவ்வளவு கலோரிகளுக்கு ஏற்ற மதிப்புடையதா இந்த உணவு, என கேட்க ஆரம்பித்தேன்.
நாம் உட்கொள்ளும் உணவில் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்கிறோமோ அதைவிட முக்கியத்துவத்தை, ஊடக காட்சிகளில் கட்டுப்பாடு காட்ட வேண்டும். நாம் காணும் காட்சி நம்முடைய மனதில் பல காலம் பதிந்து நம்முடைய நடத்தையையே பாதிக்கக் கூடும் என ஒரு ஆய்வு கூறுகிறது. அதாவது, அது “ஒட்டிக்கொள்ளும் பாதிப்பை” ஏற்படுத்துகிறது. எப்படியெனில், நாம் எவ்வளவு முயற்சி செய்தும், நம்மைவிட்டு விலகாது விடாப்பிடியாக நம் உடலில் இருக்கும் கொழுப்பு போல.
இன்று நம்மைச் சுற்றி பல்வேறு வகையான ஊடகச் செய்திகள் சூழ்ந்திருப்பதால், நாம் விவேகமுள்ள வாடிக்கையாளராக இருக்க வேண்டும். அதற்காக, நாம் கிறிஸ்தவ இலக்கியம் மட்டும் தான் படிக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவ சினிமா மட்டும் தான் காணவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நம் கண்கள் காண எவற்றை அனுமதிக்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இது நான் செலவிடும் என் நேரத்திற்கு ஏற்ற மதிப்புடையதா? என்று நாமே நம்மை பார்த்துக் கேட்டுக்கொள்ளலாம்.
பிலிப்பியர் 4:8ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் சாராம்சம் என்னவெனில், “உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் உண்மையான, ஒழுக்கமுள்ள, நீதியான, பரிசுத்தமான, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அதையே உணவாய் அளியுங்கள்.” கிறிஸ்து நமக்கு செய்ததும், செய்து கொண்டிருக்கிறதிற்கும் ஏற்ற மதிப்புள்ள “உணவு முறை” இதுவே.