வயதாக ஆக,  இயேசுவின் பிரியமான சீஷனாகிய யோவானுடைய உபதேசங்களின் எல்லை குறுகிக்கொண்டே போய், அவருடைய மூன்று கடிதங்களிலும் தேவனுடைய அன்பைக் குறித்தே முழு கவனத்தையும் செலுத்தினார். ‘தேவனுடைய அன்பைக் குறித்தான உண்மையை அறிந்துகொள்ளுதல்’ (Knowing the truth of God’s love) என்கின்ற தன்னுடைய புத்தகத்தில், பீட்டர் க்ரீஃப்ட் (Peter Kreeft) ஒரு பழமையான கதையொன்றை குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒரு நாள் யோவானுடைய இளம் சீடர்களில் ஒருவன் அவரிடம் வந்து,  “ஏன் நீங்கள் வேறொன்றைக்குறித்தும் பேசுவதில்லை” என முறையிட்டான். அதற்கு யோவான்,  “அதைத்தவிர வேறொன்றுமில்லையே” என்று கூறினார்.

நிச்சயமாக,  தேவனுடைய அன்பே,  இயேசுவினுடைய சத்தியத்திற்கும்,  அவர் மேற்கொண்ட பணிக்கும் இதயதுடிப்பாய் இருக்கிறது. யோவான் தன்னுடைய முந்தைய சுவிசேஷத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்,  “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி,  இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா. 3:16).

நம்முடைய வாழ்கை வழித்தடத்தின் மையமாய் தேவனுடைய அன்பே உள்ளது என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். மேலும்,  “மரணமானாலும்,  ஜீவனானாலும்,  தேவ தூதர்களானாலும்,  அதிகாரங்களானாலும்,  வல்லமைகளானாலும்,  நிகழ்காரியங்களானாலும்,  வருங்காரியங்களானாலும்,  உயர்வானாலும்,  தாழ்வானாலும்,  வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்” (ரோம. 8:38–39) என்று நமக்கு நினைப்பூட்டுகிறார்.

நாம் ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு அவருடைய கரத்தின் நன்மையான ஈவுகளை பெற்றுக்கொண்டு, சவால்களை சந்திக்க பெலனைக் கொடுப்பது அவருடைய அன்பே. அது பெலமுள்ளது,  நமக்குரியது,  நம்மை ஸ்திரப்படுத்துவது. நம்முடைய வாழ்நாளில்,  அவருடைய அன்பே பிரதானமானது.