குக்குவாவின் தாயாருடைய 50வது பிறந்த நாளின் கொண்டாட்டத்திற்கு நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்த பொழுது, அவளது தாயாருக்கு தலை மகளான குக்குவா அவளுக்கு அவள் தாயார் செய்த பல தியாகங்களை நினைவுபடுத்திக் கூறினாள். பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தகப்பன் இல்லாமல் தனியாக இருந்து பிள்ளைகளை வளர்த்த அவளது தாயார், அவளது விலை மதிப்புள்ள நகைகளையும், பொருட்களையும் விற்று குக்குவாவை உயர்நிலைக் கல்வி பயில வைத்தாள். வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தபொழுதும், அவளது தாயார் அவளையும், அவளது உடன் பிறந்தவர்களையும் ஒருபொழுதும் கைவிட்டுவிடவே இல்லை.

தேவன் அவரது ஜனங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை, ஒரு தாய் அவளது பிள்ளையின் மேல் வைத்திருக்கும் அன்பிற்கு ஒப்பிடுகிறார். இஸ்ரவேல் மக்கள் சிறைப்பட்டு போனபொழுது, தேவனால் கைவிடப்பட்டவர்கள் போல் உணர்ந்து “கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார்” (ஏசா. 49:14) என்று முறையிட்டார்கள். ஆனால் தேவன் “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (ஏசா. 49:15) என்று கூறினார்.

நாம் துன்பத்திலிருக்கும் பொழுதோ, வாழ்க்கையில் விரக்தி அடைந்த பொழுதோ, சமுதாயத்தால், குடும்பத்தால், சிநேகிதர்களால் கைவிடப்பட்டது போல உணர்வோம். ஆனால் தேவன் நம்மை கைவிடுவதில்லை “என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்” (ஏசா. 49:16) என்று தேவன் கூறுவது நமக்கு பெரிய ஆறுதலாக உள்ளது. தேவன் நம்மை முழுமையாக அறிந்து நம்மைக் காப்பாற்றுகிறார் என்பதை இது தெரிவிக்கிறது. தேவன் அவர் பிள்ளைகளை ஒருக்காலும் கைவிடமாட்டார்.