எகிப்திய அரசன் துத்தன்காமனின் கல்லறை 1922ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பொழுது, அது மறுமை வாழ்க்கைக்கு தேவை என்று பண்டைய எகிப்தியர் கருதிய பொருட்களால் நிறைந்திருந்தது தங்கத்தாலான கோயில்கள், ஆபரணங்கள், தேன் நிறைந்த ஓர் பானை போன்ற பொருட்கள் காணப்பட்டன. 3200 ஆண்டுகளுக்குப்பின்னும் அத்தேன் சாப்பிடக்கூடிய நிலையில் இருந்தது.

இன்றைய காலத்தில் தேனை நாம் இனிப்புச் சுவையைக் கொடுக்கும் ஓர் பொருளாகவே கருதுகிறோம். ஆனால் பண்டைய காலத்தில் அது பலவிதங்களில் பயனளிப்பதாகக் காணப்பட்டது. மனிதன் உயிர்வாழத் தேவையான அனைத்து போஷாக்குகளும் நிறைந்த ஒரே உணவு இதுதான் என்று விளங்கியது. இதை போஷாக்குள்ள சத்துணவாக மக்கள் சாப்பிட்டார்கள். மேலும் தேனில் மருத்துவ குணமும் காணப்பட்டது. காயங்களில் ஊற்றிக் கட்டி புண் ஆறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன. ஏனென்றால், இது நோய் பரவாமல் தடுக்கும் ஆற்றல் உடையதாகவும் காணப்பட்டது.

இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்தின்று மீட்டு இரட்சித்த பொழுது அவர்களைப் பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு அழைத்துச் செல்வதாக தேவன் வாக்களித்தார் (யாத் 3:8,17). இது செல்வச் செழிப்பிற்கு ஒரு உவமேயம். அவர்கள் பாவத்தினால் வனாந்திரப் பயணம் நீண்ட பொழுது தேவன் அவர்களை மன்னாவினால் போஷித்தார். “அதன் ருசி தேனிட்ட பணியாரம் போல் இருந்தது” (16:31). நீண்ட நாட்களாக ஒரே விதமான மன்னாவையே தாங்கள் சாப்பிட்டு வருவதாக முறுமுறுத்த பொழுது தேவன் அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தில் அவர்கள் சாப்பிட்டு மகிழப் போகிற காரியங்களைக் குறித்து பரிவுடன் ஞாபகப்படுத்தினார்.

தேவனுடைய பாதைகளும், வசனங்களும் தேனிலும் மதுரமாயிருக்கும் என்று இன்னும் தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார் (சங் 19:10). நாம் சாப்பிடும் தேனைப் போல் நாம் பேசும் வார்த்தைகளும் மதுரமாக இருக்க வேண்டும். நம் வார்த்தைகள் இனிமையாக மாத்திரமல்ல, ஆரோக்கியமளிப்பதாகவும் இருக்க வேண்டும்.