கேம்பிரிட்ஜின் வரைபடத்தை எனது விரல்களால் தடவிப்பார்த்து, நிச்சயப்படுத்திக் கொண்டு என் மிதிவண்டியை நிறுத்தினேன். திசைகள் பற்றி தெளிவில்லாத நிலையில் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல கட்டிடங்களைக் கொண்ட அந்த சாலைகளின் வலைபோன்ற அமைப்பில் நான் எளிதாக தொலைந்து போகக் கூடிய நிலையில் இருந்தேன்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலேயரை திருமணம் செய்ததினால் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து விட்டேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் அப்புதிய இடத்தில் யாரோடும் பிணைக்கப்படாதது போல உணர்ந்தேன். நான் வாய்பேசாமல் இருந்தால் அந்த புதிய சூழ்நிலையோடு ஒத்து போவது போலிருந்தது. ஆனால் நான் பேச ஆரம்பித்தவுடன் நான் அமெரிக்க சுற்றுலாப் பயணியாக கருதப்படுவது போல உடனே உணர்ந்தேன். அந்த புதிய சூழலில் எப்படி செயல்படுவதென்று எனக்குத் தெரியவில்லை. இரண்டு வேறுபட்ட தன்மையுள்ள இருவர் இணைந்து, வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது என்பது நான் எதிர்பார்த்ததை விட மிகக் கடினமான காரியம் என்பதை அறிந்தேன்.

ஆபிரகாம் தேவனுடைய அழைப்பிற்கு கீழ்ப்படிந்து அவன் நன்கு அறிந்திருந்த சொந்த தேசத்தை விட்டு விட்டு அவன் அறியாத ஒரு புதிய தேசத்தில் அன்னியனும், பரதேசியுமாக வாழ்வதற்குப் போனது போல (ஆதி 12:1) எனது நிலைமையும் இருப்பதாக உணர்ந்தேன். அவனது தேவன் மேல் அவனுக்கு இருந்த விசுவாசத்தை பெலப்படுத்திக் கொண்டு, புதிய கலாச்சாரத்தினால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக கடந்து வந்தான். ஆகவே எபிரேயர் புத்தகத்தில் ஆக்கியோன் ஆபிரகாமை ஒரு விசுவாச வீரனாக குறிப்பிட்டுள்ளார் (எபிரே 11:9). இந்த அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள மற்ற விசுவாச வீரர்கள், வீராங்கனைகள் போல ஆபிரகாமும் விசுவாசத்துடன் கூட வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரம தேசத்தின் மேல் நம்பிக்கைவைத்து, அதற்காக ஆவலுடன் காத்திருந்தான்.

ஒருவேளை நீங்கள் ஒரே ஊரில் தொடர்ந்து வசிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் பிள்ளைகளாக நாம் அனைவரும் இப்பூமியில் அன்னியரும், பரதேசிகளுமாக இருக்கிறோம். தேவன் நம்மை வழிநடத்துவார் என்ற விசுவாசத்தினால் முன்னேறுகிறோம். தேவன் நம்மை விட்டு ஒருக்காலும் விலக மாட்டார், கைவிடமாட்டார் என்பதை விசுவாசத்தினால் நம்புகிறோம். விசுவாசத்தினால் நமது பரமகுடியிருப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.