பாதகமான காலநிலையால் ஐந்து முறை காலதாமதமான விண்கலம் “சாலஞ்சர்”. இடிமுழக்கம் போன்ற பேரிரைச்சலையும், தீப்பிளம்புகளையும் கக்கிக் கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. அடுத்த 73 வினாடிகளில் ஏதோ குறைபாட்டினால் விண்கலம் வெடித்துக் சிதறி அதில் பயணித்த ஏழு விண்வெளி வீரர்களும் மாண்டு போயினர்.
இந்தப் பேராபத்து ‘0-ரிங்’ என்ற மிக மென்மையான பாகத்தை இறுக்க தாழிட்டு அடைக்கப்படாததால் ஏற்பட்டது என்று உள்ளிருந்தவர்கள் கூறினார்கள். பேராபத்தை உண்டாக்கிய நாச வேலையான அந்த தவறை “க்கோ ஃபீவர்” – அதாவது மாபெரும் சாதனையை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் மிக மிக முக்கியமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் செய்ய வேண்டிய காரியத்தை கவனமில்லாமலும், அசட்டையாகவும் விட்டு விட்ட செயல் என் குறிப்பிடுகின்றனர்.
மனிதனின் பேராவல் என்னும் ஜென்ம சுபாவம், தவறான ஆலோசனைகளைத் தேர்ந்தெடுக்க நம்மை கடுமையான சோதனைக்குள்ளாக்கும். ஆனாலும், அது ஓர் இனம் அறியா பயத்தை நமக்குள் ஏற்படுத்தி நாம் அதிக கவனமாக இருக்கத் தூண்டும். இந்த இரண்டு பண்புகளையும் இஸ்ரவேல் மக்கள் வெளிப்படுத்தினர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை வேவு பார்க்கச் சென்ற 12 பேரில் 10 பேர் தடைகளை மாத்திரம் பார்த்தார்கள் (எண் 13: 26-33). “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள்” என்று அந்த 10 பேர் கூறினார்கள் (எண் 13: 31) கர்த்தருக்கு விரோதமாக கலகம் பண்ணினதின் விளைவாக அந்த பத்து வேவுகாரர்களும் வாதையினால் மடிந்தபின், மக்கள் மனம் மாறி க்கோஃபியர்” என்ற மனப்பான்மைக்கு வந்தார்கள்.” கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின இடத்திற்குப் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள் (எண்ணாகமம் 14: 40). தேவன் அவர்களோடு இல்லாத நிலையில், தவறான சமயத்தில் படையெடுத்துச் சென்றதால் பயங்கரமான தோல்வியைச் சந்தித்தார்கள் (எண் 14: 41-45).
தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக அவருடைய பார்வையிலிருந்து நாம் விலகிச் சென்றால், இரண்டு காரியங்களில் ஏதாவது ஒன்றால் பாதிக்கப்படுவோம். பொறுமையின்றி தேவனை விட்டுவிட்டு, மிக வேகமாக முன்னோக்கிச் செல்வோம் அல்லது பயந்து ஒடுங்கி பயத்தினால் முறையிடுவோம். அவரையே நாம் நோக்கியிருக்கும் பொழுது, அது தைரியத்தையும், ஞானத்தின் நிறைவையும் கொடுக்கும்.