புகழ்மிக்க டச்சு ஓவியக் கலைஞர் ரெம்ப்ராண்ட் தன் 63ம் வயதில் எதிர்பாராத விதத்தில் மரித்த பொழுது அவர் படம் வறையும் திரையில் முற்றுப்பெறாத ஓர் ஓவியம் இருந்தது. இயேசு பிறந்த 40 நாட்களில் அவர் எருசலேம் தேவாலயத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பொழுது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சிமியோன் அக்குழந்தையை ஏந்தியிருந்ததை மையமாகக் கொண்டு அவரது ஓவியம் அமைந்திருந்தது. சிமியோனைப் போல ரெம்ப்ராண்ட் தன் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று அறிந்து, இவ்வுலகைக் கடந்து செல்ல ஆயத்தமாக இருந்தார் என்று சில கலை வல்லுநர்கள் கருதினார்கள் (லூக்கா 2: 29).

சிமியோன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார் (லூக்கா 2: 25). மரியாளும் யோசேப்பும் தங்கள் முதல் பேறான குமாரனை கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்க தேவாலயத்திற்கு வந்திருந்த பொழுது சிமியோனும் வந்திருந்தது தற்செயலாக நிகழ்ந்த ஓர் நிகழ்ச்சியல்ல. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிமியோன் அவரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு தேவனை ஸ்தோத்தரித்து “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான் (லூக்கா 2: 29-32).

இஸ்ரவேலின் வரலாற்றில் மகிமையான நாட்களை சிமியோன் வாஞ்சிக்கவில்லை. ஆனால், எல்லா ஜாதிகளையும் மீட்டு இரட்சிக்க வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியாவின் வருகையை எதிர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிமியோனைப் போல நமக்கும் முன்னோக்கிப் பார்க்கும் ஓர் எதிர்பார்ப்புண்டு. அது ஓர் நாள் நாம் கிறிஸ்துவை சந்திப்போம் என்பதே.