எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

அலிசன் கீடாகட்டுரைகள்

இணைந்து இயேசுவை சந்தித்தல்

நான் என்னுடைய வாழ்க்கையின் கடினமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்நிலையின் ஊடாய் கடந்துசென்றபோது, திருச்சபைக்குப் போவதை நிறுத்தக்கொள்வது எளிதாயிருந்திருக்கும் (சில வேளைகளில் “நான் ஏன் கவலைப்படவேண்டும்” என்று யோசித்ததுண்டு). ஆனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருச்சபைக்கு செல்வது எனக்கு அவசியமாய் தோன்றியது. 

பல வருடங்களாக என்னுடைய நிலைமை மாறாமல் அப்படியே இருந்தபோதிலும், மற்ற விசுவாசிகளுடன் இணைந்து ஆராதனை செய்வது, ஜெபக்கூட்டங்கள், வேதபாட கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதின் மூலம் நான் ஊக்கம்பெற்றேன். பல வேளைகளில் ஆறுதலான வார்த்தைகள் கேட்கவும், என்னுடைய குமுறலை அவர்கள் கேட்கவும், அவர்களின் அரவணைப்பை அவ்வப்போது பெறவும் இது வழிவகுத்தது. 

எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்” (எபிரெயர் 10:25) என்கிறார். நாம் கடினமான வாழ்க்கை அனுபவங்களுக்குள் கடந்துசெல்லும் வேளைகளில் நமக்கு மற்றவர்களின் ஆதரவும், அவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அவசியப்படும் என்பதை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். ஆகையால், “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்றும் “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்” (23-24) தாங்கும்படியாகவும் ஆசிரியர் நமக்கு அறிவுறுத்துகிறார். இதுவே ஆரோக்கியமான ஓர் ஊக்கமாகும். ஆகையினால் தான் தேவன் நமக்கு அவ்வப்போது சபையோடு ஐக்கியங்களை ஏற்படுத்தித் தருகிறார். யாரேனும் ஒருவருக்கு உங்களுடைய ஊக்கம் தேவைப்படலாம், மற்றவர்களின் ஊக்கமான வார்த்தைகள் உங்களுக்கு ஆச்சரியமானதாய் இருக்கும். 

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

படப்பிடிப்பின் போது, ​​கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன.

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது.

ஜெபத்திற்கான அழைப்பு

ஆபிரகாம் லிங்கன் தன் சிநேகிதரிடம், “நான் சில வேளைகளில் யாரிடத்திலும் செல்லமுடியாது என்று எண்ணும் இக்கட்டான தருணங்களில் முழங்காலில் நிற்ப்பதற்கு உந்தப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னாராம். அமெரிக்க உள்நாட்டுப் போரின் கொடூரமான காலகட்டங்களில், ஜனாதிபதி லிங்கன் உருக்கமான ஜெபத்தில் நேரத்தை செலவழித்தது மட்டுமல்லாமல், தன்னுடைய நாட்டு மக்களையும் தன்னோடு சேர்ந்து ஜெபிக்குமாறு அறைக்கூவல் விடுத்திருக்கிறார். 1861 இல், “மனத்தாழ்மை, ஜெபம், மற்றும் உபவாசத்தின் நாள்” என்று ஒன்றை அறிவித்தார். 1863இல் அதை மீண்டும் செயல்படுத்தி, “தேவனுடைய பெரிதான வல்லமையை சார்ந்திருப்பது தேசம் மற்றும் மக்களின் கடமை. நம்முடைய மனந்திரும்புதல் தேவனுடைய இரக்கத்திற்கு வழிவகுக்கும் என்ற விசுவாசத்தோடும் மனத்தாழ்மையோடும் தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுதல் அவசியம்” என்று அறிவித்தார். 

இஸ்ரவேலர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தில் எழுபது ஆண்டுகள் கழித்த பின்னர், கோரேசு மன்னன் இஸ்ரவேலர்களை எருசலேமுக்கு திரும்பிப் போகும்படிக்கு கட்டளைப் பிறப்பித்தான். அவர்களும் எருசலேம் திரும்பினர். பாபிலோனிய ராஜாவுக்கு பானபாத்திரக் காரனாய் இருந்த நெகேமியா (நெகேமியா 1:6), மீண்டு திரும்பிய இஸ்ரவேலர்கள் “மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்” (வச.3) என்பதை அறிந்தமாத்திரத்தில், நெகேமியா “உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி” (வச. 4) தேவனை நோக்கி கெஞ்சினான். அவன் தன் தேசத்திற்காய் தேவனிடத்தில் மன்றாடினான் (வச. 5-11). பின்னர், அவனுடைய தேசத்து ஜனங்களையும் தன்னோடு சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறான் (9:1-37). 

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ரோமானியப் பேரரசின் நாட்களில், அப்போஸ்தலர் பவுலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக ஜெபிக்கும்படி திருச்சபை விசுவாசிகளுக்கு வலியுறுத்துகிறார் (1 தீமோத்தேயு 2:1-2). மற்றவர்களுடைய ஜீவியத்தைப் பாதிக்கும் காரணிகளுக்காக நாம் ஜெபிக்கும்போது, தேவன் அந்த ஜெபத்திற்கு பதில்கொடுக்கிறார்.

சோதனைகளை மேற்கொள்ளுதல்

ஆனி, வறுமையிலும் வேதனையிலும் வளர்ந்தார். அவளுடைய இரண்டு உடன்பிறப்புகள் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டனர். ஐந்து வயதில், ஒரு கண் நோய் அவளை ஓரளவு பார்வையற்றதாகவும், படிக்கவோ எழுதவோ முடியாமல் ஆக்கினது. ஆனிக்கு எட்டு வயதாக இருந்தபோது, அவரது தாயார் காசநோயால் இறந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவளை துஷ்பிரயோகம் செய்த அவளது தகப்பனார், மூன்று குழந்தைகளை ஆதரவற்றவர்களாய் விட்டுவிட்டார். இளைய பிள்ளை வேறு உறவினர்களுடன் தங்கிக்கொள்வதற்கு அனுப்பப்பட்டது. ஆனியும் அவளது சகோதரரும் அரசு நடத்தும் அனாதை இல்லத்திற்குச் சென்றனர். சில மாதங்களுக்குப் பிறகு, ஜிம்மியும் இறந்துவிட்டான்.

பதினான்கு வயதில், ஆனியின் சூழ்நிலைகள் பிரகாசமாகின. அவள் பார்வையற்றோருக்கான பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் பார்வையை மேம்படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள். அவள் அந்த இடத்தில் வாழ்வதற்கு சிரமப்பட்டாலும், அவள் கல்வியில் சிறந்து விளங்கி, வாலிடிக்டோரியனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஹெலன் கெல்லரின் ஆசிரியை மற்றும் தோழியான ஆனி சல்லிவன் என இன்று நாம் அவளை நன்கு அறிவோம். முயற்சி, பொறுமை மற்றும் அன்பின் மூலம், ஆனி பார்வையற்ற மற்றும் காது கேளாத ஹெலனுக்கு பேசவும், பார்வையற்றோருக்கான பிரெய்லி படிக்கவும், கல்லூரியில் பட்டம் பெறவும் கற்றுக் கொடுத்தார்.

யோசேப்பும் தன் வாழ்க்கையில் பல சோதனைகளை கடக்க வேண்டியிருந்தது. பதினேழாவது வயதில், அவர் மீது பொறாமைப்பட்ட சகோதரர்களால் அடிமையாக விற்கப்பட்டார். பின்னர் செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் (ஆதியாகமம் 37:39-41). ஆயினும் எகிப்து தேசத்தையும் அவனது சொந்த குடும்பத்தாரையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தேவன் அவனைப் பயன்படுத்தினார் (50:20).

நாம் அனைவரும் சோதனைகளையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறோம். ஆனால் யோசேப்பு மற்றும் ஆனி ஆகியோருக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த தேவன் உதவியது போல, நமக்கும் உதவிசெய்து நம்மை பயன்படுத்த அவரால் கூடும். உதவிக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் அவரை சார்ந்துகொள்வோம். அவர் நம்மை பார்க்கிறார், கேட்கிறார்.

விலையேறப்பெற்ற விளைவு

மூன்று வருடங்களாக, ஒவ்வொரு பள்ளி நாளிலும், கொலீன் என்று அழைக்கப்படும் ஒரு ஆசிரியை, ஒவ்வொரு மதியவேளையிலும் பள்ளிப் பேருந்தில் இருந்து பிள்ளைகள் வெளியேறும் போது, வித்தியாசமான உடைகள் அல்லது முகமூடிகளை அணிவித்து அவர்களை வரவேற்கிறார். பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் உள்ள அனைவரின் நாளையும் இது பிரகாசமாக்குகிறது. அந்த பேருந்தின் ஓட்டுநர், “பேருந்தில் பயணிக்கும் குழந்தைகளுக்கு அது மகிழ்ச்சியைத் தருகிறது. அது ஆச்சரியமான ஒரு செய்கை. எனக்கு அது பிடித்திருக்கிறது” என்று சொல்லுகிறார். பிள்ளைகளும் அதை ஆமோதிக்கின்றனர். 

கொலீன் குழந்தைகளை பராமரிக்கத் தொடங்கியபோது இதுவும் தொடங்கியது. பெற்றோரைப் பிரிந்து புதிய பள்ளிக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த அவர், குழந்தைகளை வித்தியாசமான உடையில் வாழ்த்தத் தொடங்கினார். மூன்று நாட்கள் அவ்வாறு செய்தபின்பு, பிள்ளைகளும் அதை விரும்ப ஆரம்பித்தனர். எனவே கொலின் அதைத் தொடர்ந்துசெய்தார். இது சிக்கனக் கடைகளில் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வதுபோல “விலைமதிப்பற்ற விளைவையும் மகிழ்ச்சியையும்" கொண்டு வந்தது என்று ஒரு நிருபர் விவரிக்கிறார். 

மிகவும் ஞானமான ஆலோசனையை உள்ளடக்கிய புத்தகத்தின் ஆசிரியரான சாலமோன் தன் மகனுக்கு ஓர் தாய் ஆலோசனை கொடுப்பதுபோல ஒரே வரியில் “மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதிமொழிகள் 17:22) என்று சொல்லுகிறார். மனமகிழ்ச்சி என்னும் தாய் தன்னுடைய அனைத்து குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதின் மூலம் நொருங்குண்ட ஆவிகளை அவள் தடுக்க விரும்பினாள். 

உண்மையான மற்றும் நிலையான மகிழ்ச்சியின் ஆதாரம், தேவன் நமக்கு தந்தருளிய பரிசுத்த ஆவியானவரே (லூக்கா 10:21; கலாத்தியர் 5:22). சோதனைகளை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையையும் பலத்தையும் வழங்கும் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு நாம் கொடுக்க பிரயாசப்படும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். 

தோட்டத்தில்

என் அப்பா, கடவுளுடைய இயற்கையான படைப்புகளில் முகாமிடுதல், மீன்பிடித்தல் மற்றும் மலை ஏறுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை விரும்பினார். அவர் தனது தோட்டத்தையும் அதை செப்பனிடுவதிலும் அதிக மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அது பெரிய வேலையாக தெரிந்தது. அவர் கத்தரித்தல், மண்வெட்டி, விதைகள் அல்லது பூக்களை நடுதல், களைகளை இழுத்தல், புல்வெளியை வெட்டுதல் மற்றும் முற்றத்திலும் தோட்டத்திலும் தண்ணீர் பாய்ச்சுதல் ஆகியவற்றில் பல மணி நேரங்களை செலவுசெய்தார். அதன் பலம் மிகவும் நேர்த்தியாயிருந்தது: ஒரு நிலப்பரப்பு புல்வெளி, சுவையான தக்காளி மற்றும் அழகான ரோஜாக்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர் ரோஜாக்களை தரையில் நெருக்கமாக கத்தரித்து செப்பனிடுவார். அவைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வளர்ந்து அவற்றின் நறுமணத்தையும் அழகையும் பரப்புகின்றது. 

ஆதியாகமத்தில், ஆதாமும் ஏவாளும் வாழ்ந்து, செழித்து, தேவனோடு நடந்த ஏதேன் தோட்டத்தைப் பற்றி வாசிக்கிறோம். அங்கு தேவன் “பார்வைக்கு இன்பமும் உணவுக்கு ஏற்றதுமான மரங்களை அனைத்து வகையான மரங்களையும் தரையில் இருந்து வளரச்செய்தார்” (ஆதியாகமம் 2:9). சரியான தோட்டத்தில் அழகான, இனிமையான மணம் கொண்ட பூக்களும் அடங்கும் என்று நான் கற்பனை செய்கிறேன். ஒருவேளை முட்களில்லாத ரோஜாக்கள் கூட அங்ஙனம் வளர்ந்திருக்கக்கூடும். 

ஆதாமும் ஏவாளும் தேவனை எதிர்த்து பாவம் செய்த பிறகு, அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, அவரவர் தோட்டங்களை அவர்களே பராமரிக்கும் படி கட்டளையிடப்பட்டது. அதாவது, நிலத்தை உழுது, முட்களோடு போராடி, பல சவால்களை எதிர்கொண்டு பராமரிப்பதாகும் (3:17-19, 23-24). ஆனாலும் தேவன் அவர்களுக்கு தொடர்ந்து தேவைகளை சந்தித்தார் (வச. 21). அவர் வசமாய் நம்மை ஈர்க்கும் அவருடைய இயற்கையின் அழகை மனிதனின் பார்வையினின்று விலக்கவில்லை (ரோமர் 1:20). தோட்டத்திலுள்ள பூக்கள், நம்பிக்கை மற்றும் ஆறுதலின் அடையாளமாய் திகழும் தேவனின் தொடர்ச்சியான அன்பையும், புதுப்பிக்கப்பட்ட படைப்பைப் பற்றிய வாக்குறுதியையும் நமக்கு நினைவூட்டிக்கொண்டேயிருக்கின்றன. 

தயவான செய்கைகள்

கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள். 

வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ்,  “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான். 

போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.

ஏமாற்றத்தை சமாளித்தல்

தங்களின் வாழ்நாள் சுற்றுப்பயணத்திற்கு பணம் திரட்டிய அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா உயர்நிலைப் பள்ளியின் படித்த முதியவர்கள் குழு, விமான நிலையத்திற்கு வந்தபிறகு தான் அவர்களில் பலர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர் என்பதை அறிந்துகொண்டனர். “இது மனதிற்கு வேதனையளிக்கிறது” என்று ஒரு பள்ளி நிர்வாகி கூறினார். இதினிமித்தம் அவர்கள் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருந்தாலும், அந்த சூழ்நிலையை அவர்கள் சாதகமாய் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தனர். டிக்கெட்டுகளை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கிய அருகிலுள்ள சுற்றுலாத்தலங்களில் இரண்டு நாட்கள் அவர்கள் மகிழ்ந்திருந்தனர்.

தோல்வியுற்ற அல்லது மாற்றப்பட்ட திட்டங்களைக் கையாள்வது சற்று ஏமாற்றமாகவும், இருதயத்தை உடைக்கக்கூடியதாகவும் இருக்கும். குறிப்பாக நேரத்தையோ, பணத்தையோ அல்லது உணர்ச்சியையோ திட்டமிடுதலில் முதலீடு செய்தவர்களுக்கு இது அதிக வேதனையளிக்கக்கூடியது. தாவீது ராஜா தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று தன் மனதிலே நினைக்கிறான் (1 நாளாகமம் 28:2). ஆனால் தேவன் அவரிடம் “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்... உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்” (வச. 3,6) என்று சொல்கிறார். தாவீது விரக்தியடையவில்லை. இஸ்ரவேலின் ராஜாவாக தேவன் அவரை தேர்வுசெய்ததற்காய் தேவனை துதிக்கிறார். மேலும் ஆலயத்தை கட்டுவதற்கு தேவன் சாலொமோனுக்குத் திட்டங்களைக் கொடுத்தார் (வச. 11-13). தாவீது சாலெமோனைப் பார்த்து, “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; தேவனாகிய கர்த்தர் ... உன்னோடே இருப்பார்” (வச. 20) என்று ஊக்கப்படுத்துகிறார். 

நம்முடைய திட்டங்கள் தோல்வியுறும்போது, அது எந்த பிரச்சனையாயிருந்தாலும் நம்முடைய தேவன் “உங்களை விசாரிக்கிறவரானபடியால்” (1 பேதுரு 5:7) நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடுவோம். நம்முடைய கவலைகளை கிருபையோடு கையாளுவதற்கு அவர் நமக்கு உதவிசெய்வார்.

நம் தேர்ந்தெடுப்புகள் முக்கியம்

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஒரு நீச்சல் பயிற்றுவிப்பாளர், நெவார்க் விரிகுடாவில் கார் ஒன்று மூழ்குவதைக் கண்டார். அந்த கார் தண்ணீரில் மூழ்கும்போது அதின் ஓட்டுநர் “எனக்கு நீச்சல் தெரியாது” என்று அலறும் சத்தத்தைக் கேட்டார். கரையிலிருந்து ஒரு கூட்டம் பார்த்தபோது, அந்தோனி விளிம்பில் இருந்த பாறைகளுக்கு ஓடி, தனது செயற்கை காலை அகற்றி, அறுபத்தெட்டு வயது முதியவரைக் காப்பாற்றி, அவரைக் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அந்தோனியின் துரிதமான முயற்சிக்கு நன்றி. அதின் மூலம் மற்றொரு நபர் காப்பாற்றப்பட்டார்.

நம்முடைய தேர்ந்தெடுப்புகள் முக்கியமானவைகள். யாக்கோபைப் பாருங்கள். அநேகருக்கு தகப்பனான யாக்கோபு தன்னுடைய பதினெழு வயது நிரம்பிய யோசேப்பை அதிகமாய் நேசித்தான் (ஆதியாகமம் 37:3). அதின் விளைவு? யோசேப்பின் சகோதரர்கள் அவனை நேசித்தனர் (வச. 4). அவர்களுக்கு சமயம் கிட்டியபோது அவனை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டனர் (வச. 28). யோசேப்பின் சகோதரர்கள் அவனை வெறுத்து ஒதுக்கினாலும், தேவன் யோசேப்பை எகிப்துக்கு கொண்டுபோய், அங்கே அவனுடைய ஸ்தானத்தை உயர்த்தி, ஏழு ஆண்டுகள் பஞ்சத்தின்போது தன்னுடைய குடும்பத்தை பராமரிக்கும்படி செய்தார் (50:20). யோசேப்பு அந்த மேன்மையை அடைவதற்கு போத்திபாரின் மனைவியிடத்திலிருந்து ஓடுவதை தெரிந்துகொண்டான் (39:1-12). அதின் விளைவு சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டான் (39:20), ஆனால் பார்வோனை சந்திக்கிறான் (41அதி.). 

அந்தோனி மிகவும் நேர்த்தியாய் பயிற்சிபெற்ற ஒரு நபராய் இருந்திருக்கலாம், ஆனால் அவன் துரிதமாய் தீர்மானம் எடுக்கவேண்டியது அவசியமாயிருந்தது. நாமும் தேவனை நேசித்து அவருக்கு ஊழியம் செய்வோமாகில், அவர் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துகிற மற்றும் தேவனை மகிமைப்படுத்துகிற தீர்மானங்களை எடுக்க நமக்கு உதவிசெய்வார். இதுவரை அதை நாம் செய்யாமல் இருந்திருப்போமாகில், இயேசுவை நம்புவதின் மூலம் இனி அதை நாம் துவக்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.