வகை  |  odb

தேவனின் வல்லமையுள்ள பிரசன்னம்.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் பெண்கள் ஓட்டளிப்பதற்கான வாக்குரிமை கொடுக்கப்பட்ட நூறாவது வருஷ நினைவாண்டு கொண்டாடப்பட்டது. அதற்காகப் பேரணியில் சென்றவர்கள் "ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி" (சங்கீதம் 68:11) என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துச் செல்வது பழைய புகைப்படங்களில் காண முடிந்தது.

சங்கீதம் 68இல் தாவீது, தேவன் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் (வ.6), சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணி; இளைத்துப்போன அவரது  சுதந்தரத்தைத் திடப்படுத்தி,  தம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார் (வ.9,10) என்றும் குறிப்பிடுகிறார். முப்பத்தியைந்து வசனங்கள் கொண்ட இச்சங்கீதத்தில் 'தேவன்' என்ற சொல் நாற்பத்திரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் எப்போதும் அவர்களோடிருப்பார், அவர்களை அநீதியிலிருந்தும், பாடுகளிலிருந்தும் மீட்க உதவி செய்கிறார் என்பதற்காகவும் அப்படி உபயோகிக்கப்பட்டுள்ளது. அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (வ. 11‌).             

ஓட்டுரிமை கிடைத்ததற்காகப் பேரணி சென்ற பெண்கள் சங்கீதம் 68ல் உள்ள வசனத்தைப் புரிந்திருந்தார்களா என்பதை‌விட, பதாகைகளிலிருந்த வசனங்கள் காலத்தை வென்ற தேவனுடைய உண்மையை வெளிக்காட்டியது. திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் தகப்பனாகிய தேவன் (வ.5‌) அவர்களுக்கு முன்னே சென்று, அவர்களை வழிநடத்தி ஆசீர்வாதமும், நிம்மதியும், சந்தோஷமும் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.                   

தேவனுடைய பிரசன்னம் அவருடைய ஜனங்களுடன் எப்பொழுதுமிருந்து, அவர்களைச் சிறந்த வழியில் நடத்தி, ஆபத்துக்கும், துன்பங்களுக்கும் விலக்கிக் காக்கிறதென்பதை நினைக்கும் போது  இன்று நாம் ஊக்கமடைவோமாக‌. தமது ஆவியானவர் மூலமாகத் தேவன் இன்றும் நம்முடன் கடந்த காலத்தைப்போலவே வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

தூரம் அல்லவே அல்ல

ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான்  (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.

பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: " நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து" (லூக்கா 22:32).

ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.

முற்றிலும் தனிமையா?

ஸ்வேதாவின் குடும்பம் பிரிவதை அவள் தன் கண்முன்னே பார்த்தாள். அவளுடைய கணவர் ஒருநாள் திடீரென வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் அவளும், அவளுடைய குழந்தைகளும், குழப்பத்துடனும் கோபத்துடனும் இருந்தனர்‌. அவள் அவனைத் திருமண ஆலோசகரிடம் செல்லுமாறு கூற, அவன் தவறு முழுவதும் மனைவியிடம்தான் இருக்கிறதென்று சொல்லி, அதை மறுத்து விட்டான். அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை நினைக்கும்போது, அவள் பயத்தாலும் நம்பிக்கையின்மையினாலும் பாதிக்கப்பட்டாள். அவளால் தன்னையும், தன்னுடைய குழந்தைகளையும் தனியே கவனித்துக் கொள்ள முடியுமோ?

ஆபிரகாம் மற்றும் சாராளின் வேலைக்காரியாகிய ஆகாரும் இத்தகைய சூழலை எதிர்கொண்டாள். தேவன் தாம் வாக்குப்பண்ணினபடி (ஆதியாகமம் 12,15) ஒரு குமாரனைத் தருவாரென்பதற்குப் பொறுமையாய் காத்திராமல், சாராய் தன்னுடைய வேலைக்காரியாகிய ஆகாரை தன்னுடைய கணவருக்குக் கொடுத்தமையால், ஆகாருக்கு இஸ்மவேல் பிறந்தான் (ஆதியாகமம் 16:1-4,15). ஆனால் தேவனுடைய வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஈசாக்கு பிறந்தபோது, குடும்பத்திலுள்ள பதற்றம் அதிகரித்து, ஆபிரகாம் ஆகாரையும், இஸ்மவேலையும், சிறிது உணவு மற்றும் தண்ணீரைக் கொடுத்து அனுப்ப வேண்டியதாயிற்று (ஆதியாகமம் 21:8-21). அவளுடைய விரக்தியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? சீக்கிரத்தில் அவ்வுணவெல்லாம் தீர்ந்து வனாந்தரத்தில் தவித்தனர். ஆகார் செய்வதறியாமல் இஸ்மவேலை ஒரு புதரின் அடியில் வைத்துவிட்டு, தன் மகன் சாவதை காணவேண்டாமென்பதற்காக தூரமாக நடந்து சென்றாள். இருவரும் அழுதனர். ஆனால் தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வ.17). தேவன் அவர்களுடைய அழுகையைக் கேட்டு, அவர்கள் தேவைகளைச் சந்தித்து, அவர்களோடே இருந்தார்.               

தனிமையான நேரங்களில் விரக்தியுற்று நாம் தேவனிடம் அழுகிறோம். அப்படிப்பட்ட தருணங்களில் நம்முடைய வாழ்வில் அவர் கேட்கிறவராகவும், தேவைகளைச் சந்திப்பவராகவும், நம்முடன் கூட இருப்பவராகவும் இருக்கிறாரென்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது.

தேவன் நம்மை அறிவார்

சமீபத்தில் மைக்கெல் ஏஞ்சலோவின் சிற்பகலைப் புகைப்படத்தை நோக்கிய போது, அதிலுள்ள மோசேயின் வலது கையில் தசைகள் வீங்கி இருப்பதைக் கண்டேன். அந்தத் தசை முன்னங்கையில் உள்ள ஒரு மெல்லிய தசையாகையால் அதை ஒருவர் உற்று நோக்கினால் இன்றி அதை கண்டறிய முடியாது. புரிந்துகொள்ளக் கடினமான குணாதிசயங்களைப் புரிந்து கொள்ளும் கலைஞராகிய மைக்கேல் ஏஞ்சலோ, மனிதர்களை உற்று நோக்கித் தனது சிற்பக் கலைகளைச் செதுக்குவார். அக்கலையுணர்வு அவருக்கே உரியதாகும். மைக்கேல் ஏஞ்சலோ கிரானைட்டுகளில் மனிதனின் உள்ளான ஆத்துமாவை வெளிப்படுத்துவதற்கு எடுத்த முயற்சி, முழுமையாக வெற்றி பெறவில்லை.                                    

தேவன் ஒருவராலேயே மனிதனின் ஆழ்ந்த மனதின் உண்மைத்தன்மையை அறிய முடியும். எவ்வளவுதான் நாம் மனிதர்களை உற்று நோக்கினாலும், கவனித்தாலும், அவையெல்லாம் நிழலேயாகும். ஆனால் தேவன் நிழலுக்கு அப்பாற்பட்டதைப் பார்க்கிறார். அதைத்தான் தீர்க்கதரிசியாகிய எரேமியா "நீர் என்னை அறிந்திருக்கிறீர்", "என்னைக் காண்கிறீர்" எனக் குறிப்பிடுகிறார் (வ.12: 3). தேவனுடைய ஞானம் என்பது தத்துவம் சார்ந்தது அல்லது அறிவு சார்ந்ததோ அல்ல.‌ அவர் நம்மை தூரத்தில் இருந்து கவனிப்பவர் அல்ல, அவர் நமது மனதின் உண்மையான நிலையைக் காண்கிறவராய் இருக்கிறார். நம்மாலேயே புரிந்து கொள்ளமுடியாத ஆழங்களையும் தேவன் அறிகிறவராயிருக்கிறார்.   

நம்முடைய போராட்டங்கள் எதுவாயிருந்தாலும், நம்முடைய இதயங்களில் என்ன நடந்தாலும், தேவன் அதைக் காண்கிறார், அதை உண்மையிலேயே அறிந்திருக்கிறார்.           

-வின் கோலியர்