வகை  |  odb

மீண்டும் எழுதல்

என் இளம் பிராயத்தில், நான் பனிச்சறுக்கு விளையாட்டால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். வேகமான சுழல்கள், உயரம் தாண்டுதல் மற்றும் நேர்த்தியான தோரணைகளுடன் பனிக்கட்டி மேல் வெளிப்படும் கலைத்திறன் மற்றும் தடகளத்தின் கலவையை நான் விரும்பினேன். பல தொழில்முறை பனிச்சறுக்கு வீரர்களின் செயல் யுத்திகளைப் பார்த்த பிறகு, இறுதியாகப் பனிச்சறுக்கு விளையாடவும், குழுவாக அதைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. சறுக்குவதும் நிறுத்துவதும் எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதோடு, எந்த நிலையிலும் பனிச்சறுக்கு வீரருக்கு வேண்டிய சில முக்கியமான நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டோம்; அது விழுந்தவுடனே எழுவது எப்படி என்பதே. பின்னர், நான் தனிப்பட்ட பாடங்களில் பல சுழல்களையும் தாவல்களையும் கற்றுக்கொண்டேன், ஆனால் வீழ்ச்சிக்குப் பிறகு எப்படி எழுவது என்ற அடிப்படைகளை எப்போதும் நான் சார்ந்திருக்க வேண்டியிருந்தது.

"வீழ்ச்சி" என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை அறிய, நாம் தடகள வீரர்களாக இருக்க வேண்டியதில்லை. ஒருவேளை நாம் பாவம் செய்ததால் விழுந்திருக்கலாம், ஒரு தவற்றின் காரணமாக நாம் தடுமாறலாம் அல்லது ஒரு மிகக்கடினமான சூழ்நிலையால் நாம் வீழ்த்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை நாம் ஏதோவொரு வழியிலே பிசாசால் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். “நாங்கள்.. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (2 கொரிந்தியர் 4:8-9). காரணம் எதுவாக இருந்தாலும், நாம் அனைவரும் வாழ்க்கையில் விழுந்து தோல்வியை அனுபவிக்கிறோம்.

ஆனால் நாம் தோல்வியிலோ, அவமானத்திலோ அல்லது வருத்தத்திலோ வாழ வேண்டிய அவசியம் இல்லை. துஷ்டன் நமக்கு விரோதமாய்ப் பதிவிருந்து,  நம்மைப் பாழாக்கிப்போட முயலும்போது (நீதிமொழிகள் 24:15), தேவன் நமக்காக யுத்தம் செய்கிறார், நாம் மீண்டும் எழுந்திருக்க உதவுவார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஏனென்றால் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்" (வ.16).

நாம் விழும்போது, ​​விரைவாகத் தேவனிடம் திரும்புவோம், மீண்டும் எழுவதற்கு நமக்குப் பலத்தைத் தருகிறவர் மீது நம் கண்களைப் பதிப்போம்.

எளிய உண்மை

நானும் என் மனைவியும் சைக்கிள் ஓட்டும்போது,  ​​நாங்கள் எத்தனை மைல்கள் கடந்துள்ளோம் என்பதை அறிய விரும்பினோம். எனவே, நான் தூரமானி (தூரத்தை அளக்கும் கருவி) ஒன்றை வாங்க ஒரு சைக்கிள்  கடைக்குச் சென்று, அதனுடன் ஒரு கையடக்க கணினியையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். கணினியோடு இணைப்பது சற்று சிக்கலாயிருந்தது.

மீண்டும் சைக்கிள் கடைக்குச் சென்றேன், அதை எனக்கு விற்றவர் சிறிது நேரத்திலேயே வேலை செய்ய வைத்தார். நான் எண்ணியது போல அதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல என்பதை உணர்ந்தேன்.

வாழ்க்கையில், புதிய விஷயங்கள் மற்றும் புதிய யோசனைகள் சிக்கலானதாகத் தோன்றலாம். உதாரணமாக, இரட்சிப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். தேவனின் பிள்ளையாக மாறுவது சிக்கலானது என்று சிலர் நினைக்கலாம்.

ஆயினும்கூட, வேதாகமம் அதை எளிய வார்த்தைகளில் அறிவிக்கிறது: "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்" (அப்போஸ்தலர் 16:31). பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எதுவும் இல்லை. தீர்க்க வேண்டிய புதிர்களும் இல்லை.

இதுவே எளிய உண்மை: நாம் எல்லாரும் பாவஞ்செய்து (ரோமர் 3:23), நம்முடைய பாவத்தின் தண்டனையான மரணம் மற்றும் தம்மிடமிருந்து நித்திய பிரிவினையிலிருந்து நம்மை இரட்சிக்க, இயேசு பூமிக்கு வந்தார் (மத்தேயு 1:21; 1 பேதுரு 2:24). அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் (ரோமர் 10:9). அவர் நமக்காகச் செய்ததை நம்புவதன் மூலம் நாம் ஆவிக்குரிய மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கென இரட்சிக்கப்படுகிறோம் (யோவான் 3:16)

நீங்கள் வெறுமனே இயேசுவை நம்புவதும் விசுவாசிப்பதும் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுக்கு, ஜீவனை பரிபூரணமாக (யோவான் 10:10) அருளுவாராக.

தேவனில் அன்பைக் கண்டடைதல்

சிறுவயதில், “நீ பெரியவனாகி என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்டாலே, முகில், "நான் மனோஜை போல இருக்க விரும்புகிறேன்" என்பான். முகிலின் மூத்த சகோதரன் தடகள வீரன், சகஜமாகப் பழகுபவன் மற்றும் மரியாதைக்குரிய மாணவன். மறுபக்கம் முகிலோ "நான் விளையாட்டில் மோசமானவன், பயந்தவன், கற்றல் குறைபாட்டுடன் போராடினேன். நான் எப்போதும் மனோஜுடன் நெருங்கிய உறவை விரும்பினேன், ஆனால் அவனோ விரும்பவில்லை. அவன் என்னை 'சலிப்பானவன்' என்று அழைத்தான்" என்றான்.

முகில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை, தனது மூத்த சகோதரனின் அன்பைப் பெறுவதிலேயே வீணாகச் செலவிட்டான். மாறாக, முகில் இயேசுவைப் பின்பற்றுபவனாக ஆனபோதுதான், தன் இரட்சகரின் அன்பில் இளைப்பாறிடக் கற்றுக்கொண்டான்.

யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், தன் வாழ்நாளின் பெரும்பகுதியில் தன் கணவனின் அன்பை நாடினாள் (ஆதியாகமம் 29:32-35). இருப்பினும், யாக்கோபு ராகேலிடம் பட்சமாய் இருந்தார். ஆனால் தேவன் லேயாளின் அவல நிலையைக் கண்டு அவள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதற்கு ஈடுசெய்தார். அவர் அவளை ஒரு தாயாக அனுக்கிரகம் செய்து ஆசீர்வதித்தார், அக்காலத்தில் அவளுடைய கலாச்சாரத்தில் அது ஒரு பெரிய கனம் (வ.31). தன் கணவனால் கண்டுகொள்ளப்படாதவளாக, செவிகொடுக்கப்படாதவளாக இருந்த லேயாள்,  தேவனில் அன்புடன் பார்க்கப்பட்டாள், கேட்கப்பட்டாள் (வ.32-33). அவள் ஒரு மகளையும் ஆறு மகன்களையும் பெற்றெடுத்தாள், அவர்களில் ஒருவர் யூதா, இயேசுவின் முன்னோர். அவள் அவனுடைய பிறப்பின்போது, " இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன்" (வ.35) என்று கூறினாள். லேயாள் கானானில் நீண்ட காலம் வாழ்ந்தாள், மேலும் யாக்கோபின் குடும்பத்துடன் கனத்துக்குரிய இடத்தில் அடக்கம் செய்யப்பட்டாள் (49:29-32).

நாம் நிராகரிப்பை அனுபவிக்கும் போது, ​​லேயாளின் கதையால் ஆறுதல் காண்போம். நாம் இழந்ததை ஈடுசெய்யும் தேவனின் அன்பில் நாம் இளைப்பாறலாம்.

போலியான மதிப்பீடுகள் அல்ல

ஒரு வாடகை பகிர்வு சவாரி வாடிக்கையாளர், ஒரு ஓட்டுநர் உலகின் மிக நாற்றமான பழத்தைச் சாப்பிடுவதையும், மற்றொரு ஓட்டுநர் காதலியுடன் சண்டையிடுவதையும், மற்றொருவர் அவரை ஒரு மோசடி திட்டத்தில் முதலீடு செய்யும்படி முயன்றதையும் சகித்துக்கொண்டதாகப் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மோசமான மதிப்பீட்டிற்குப் பதிலாக, அவர் ஓட்டுநர்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைக் கொடுத்தார். அவர், “அவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாகத் தோன்றினர். எனது மோசமான மதிப்பீட்டின் காரணமாக அவர்கள் அந்த பயன்பாட்டுச் செயலியிலிருந்து வெளியேற்றப்படுவதை நான் விரும்பவில்லை" என்றும் விளக்கமளித்தார். அவர் போலியாக விமர்சித்திருந்தார். ஓட்டுநர்களிடம் இருந்தும், பிறரிடமிருந்தும்   உண்மையை மறைத்தார்.

வெவ்வேறு காரணங்களுக்காக, நாம் பிறரிடமிருந்து உண்மையை மறைக்கலாம். ஆனால் எபேசுவின் விசுவாசிகள் கிறிஸ்துவில் புதிய சிருஷ்டிகளாக, ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசும்படி அப்போஸ்தலன் பவுல் ஊக்கப்படுத்தினார். இதற்கு "நீதி மற்றும் பரிசுத்தம்" (எபேசியர் 4:24) எனும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது அதாவது அவருக்காக பிரித்தெடுக்கப்பட்டதும் ,அவருடைய வழிகளைப் பிரதிபலிப்பதுமான ஒரு வாழ்க்கை. அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையைப் பேசுவதின் மூலம் பொய்யை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் பொய்கள் பிரித்துச் சீர்குலைக்கும், உண்மையோ நம்மை விசுவாசிகளாக இணைத்திடும். அவர், "அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்" (வ.25) என்று எழுதினார்.

மற்ற விசுவாசிகளுடனான நமது ஐக்கியத்தைச் சீர்குலைக்கக்கூடிய பொய்களையும், ஒருவருக்கொருவர் "போலி மதிப்பீடுகளை" வழங்குவதையும் எதிர்த்து நிற்கும் தைரியத்தை இயேசு நமக்கு அளிக்கிறார். அவர் நம்மை வழிநடத்துவதற்கேற்ப அன்பான ஒரு வாழ்க்கை வாழ்வது, "தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து" (வ.32) உண்மையின் வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும்.

தேவனில் ஞானமான கட்டுப்பாடு

1863 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்குப் படைகளின் பேரழிவுகரமான இழப்பைத் தொடர்ந்து, தோற்கடிக்கப்பட்ட தளபதி ராபர்ட் ஈ. லீ தனது தாக்கப்பட்ட துருப்புக்களை அவர்களின் சொந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தளபதி ஜார்ஜ் மீட் தலைமையிலான தனது படைகளைத் தாக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அவரது ஆட்கள் சோர்வாக இருப்பதைக் கண்டு, மாறாக மீட் தனது படைகளுக்கு ஓய்வளித்தார்.

அவரது வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என்று கோபமடைந்த லிங்கன், தனது இறகு மைக்கோலை எடுத்து, தனது நியாயமான கோபத்தை வெளிப்படுத்துவதைத் தவிர்த்து, ஒரு குறிப்பை எழுதினார். மாற்றாக, அதின் உறையின் மேலும் அவர்: "தளபதி மீட் அவர்களுக்கு, ஒருபோதும் அனுப்பப்படவும் இல்லை அல்லது கையொப்பம் இடப்படவுமில்லை" என்றெழுதினார்,  உண்மையாகவே, அது ஒருபோதும் பெறப்படவில்லை.

லிங்கனுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மற்றொரு சிறந்த தலைவர் நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார். எவ்வளவு நியாயமானதாக இருந்தாலும், கோபம் என்பது ஆபத்தான ஆற்றல் வாய்ந்தது. சாலொமோன் ராஜா, "தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்" (நீதிமொழிகள் 29:20) என்றார். சாலொமோன் "நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்" (வ.4) என்பதை அறிந்திருந்தார். "மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்" (வ.11) என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.

இறுதியில், அந்த கடிதத்தை அனுப்பாதது, லிங்கனை அவரது உயர்மட்ட தளபதியை மனச்சோர்வடைய செய்வதிலிருந்து தடுத்தது, தேவையான போரை வெல்ல உதவியது மற்றும் ஒரு தேசத்தின் குணமாகுதலுக்கும் பங்களித்தது. அவருடைய கனமான கட்டுப்பாடு போன்ற உதாரணங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்வது நமக்கும் நல்லது.