இசை மருந்து
அமெரிக்காவில் வடக்கு டகோட்டாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது பெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சையின் ஒரு பகுதியாக இசை சிகிச்சையைப் பெற்றாள். ஏன் என்று புரிந்து கொள்ளாமல், பலர் மனதளவில் இசையின் சக்திவாய்ந்த விளைவை அனுபவித்திருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் இசையின் ஒரு மருத்துவ நன்மையை ஆவணப்படுத்தியுள்ளனர். பெல்லா போன்ற புற்றுநோய் நோயாளிகளுக்கும், நடுக்குவாத நோய், மறதி நோய் மற்றும் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இசை இப்போது பரிந்துரைக்கப்படுகிறது.
சவுல் மன்னன் அவதியுற்றபோது ஒரு இசை மருந்தை அணுகினான். அவனுடைய உதவியாளர்கள் அவனுடைய அமைதியின்மையைக் கண்டு, அவனுக்காகக் கின்னரம் வாசிக்கிற ஒருவரைக் கண்டுபிடித்து, அவனுக்கு “சவுக்கியமுண்டாகும்" (1 சாமுவேல் 16:16) என்ற நம்பிக்கையில் பரிந்துரைத்தனர். அவர்கள் ஈசாயின் மகன் தாவீதை வரவழைத்தனர். சவுல், அவனது இசையால் மகிழ்ந்து, தனக்கு “முன்பாக நிற்கட்டும்" என்று கேட்டான் (வச. 22). தாவீது, சவுலின் அமைதியற்ற தருணங்களில் இசை இசைத்து, அவனுடைய வேதனையிலிருந்து அவனுக்கு நிவாரணம் அளித்தான்.
நம்மில் இசை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறித்து தேவன் அறிந்திருப்பதை நாம் விஞ்ஞான ரீதியாக கண்டுகொள்ள ஆரம்பித்து மட்டுமேயுள்ளோம். நமது உடல்களுக்கும், இசைக்கும் சிருஷ்டிகரும் காரணருமான தேவன் நமக்கு அளித்த, சுலபமாக கிடைக்கக்கூடிய ஆரோக்கியத்திற்கான சிறிய மருந்து சீட்டு இசையே. நாம் எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும், நமக்கு எத்தகைய மருத்துவ வசதிகள் இருந்தாலும், நமக்கு இது ஏற்றதாகும். இசையைக் கேட்க வழி இல்லாவிட்டாலும், நம்முடைய சந்தோஷங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் நாம் தேவனைப் பாடலாம், நம்முடைய சொந்த இசையை உருவாக்கலாம் (சங்கீதம் 59:16; அப்போஸ்தலர் 16:25).

ஊக்கமளிக்கும் நீர்
பசுமை அதிசயம்” என்றே அதை நான் அழைப்பேன். இது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் நடக்கிறது. குளிர்கால மாதங்களில் வெளியே வரும்போது, எங்கள் முற்றத்தில் உள்ள புல்தரை தூசிபடிந்து பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதைக் கடந்துபோகிறவர்கள், அது காய்ந்துவிட்டதென நினைக்கலாம். அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோ மலையில் பனிபொழியும். ஆனால் அதின் சமவெளிகளின் காலநிலை வறண்டும், பெரும்பாலான மாதங்கள் வறட்சி மற்றும் வெப்ப எச்சரிக்கைகள் நிறைந்தவை. ஆனால் ஒவ்வொரு ஆண்டு மே மாத இறுதியில், நான் தண்ணீர் இறைக்கும் குழாய்களைத் திறப்பேன். அதிகமாக அல்ல ஆனால் சிறிய, சீரான நீர்ப்பாசனம். சுமார் இரண்டு வாரங்களில் உலர்ந்த மற்றும் பழுப்பு நிறமானது பசுமையாக உருவாகும்.
ஊக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்பதை அந்தப் பச்சைப்புல் எனக்கு நினைவூட்டியது. அது இல்லாமல், நம் வாழ்க்கையும் நம் விசுவாசமும் கிட்டத்தட்ட உயிரற்ற ஒன்றை ஒத்திருக்கும். ஆனால் நிலையான ஊக்கம் நம் இதயங்கள், எண்ணங்கள் மற்றும் ஆன்மாக்களுக்குச் செய்யக் கூடியது ஆச்சரியமானதாக இருக்கிறது. தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதம் இந்த உண்மையை வலியுறுத்துகிறது. மக்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் போராடினர். அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று பவுல் நினைத்தார். ஒருவரையொருவர் ஊக்குவித்தல் மற்றும் ஒருவரையொருவர் கட்டியெழுப்புதல் (1 தெசலோனிக்கேயர் 5:11) போன்ற நற்கிரியையை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார். அத்தகைய புத்துணர்ச்சி இல்லாவிட்டால், அவர்களுடைய விசுவாசம் வாடிவிடும் என்பதை அவர் அறிந்திருந்தார். பவுல் இதை நேரில் அனுபவித்தார், ஏனென்றால் அதே தெசலோனிய விசுவாசிகள் அவருக்கு ஒரு ஊக்கமாக இருந்தார்கள், அவரை கட்டியெழுப்பினார்கள். உங்களுக்கும் எனக்கும் ஊக்கமளிக்க அதே வாய்ப்பு உள்ளது

கதவு சட்டகத்தில் ஆறுதல்
2016 ஆம் ஆண்டு தெற்கு லூசியானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, எனது சமூக ஊடகத்தை அலசுகையில், ஒரு நண்பரின் இடுகையைக் கண்டேன். அவளுடைய வீடு அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, என் தோழியின் அம்மா அவளை மனமடிவுண்டாக்கும் சுத்தமாக்கும் வேலையின் மத்தியிலும் தேவனைத் தேடும்படி ஊக்குவித்தார். எனது தோழி பின்னர் வீட்டின் கதவு சட்டகங்களில் வெளிப்பட்ட வேதவசனங்களின் படங்களை வெளியிட்டார். அவ்வசனம் வீடு கட்டப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. மரப்பலகைகளில் வசனங்களை வாசிப்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.
வேதவசனங்களை கதவு சட்டகங்களில் எழுதும் பாரம்பரியம் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து உருவாயிருக்கலாம். தேவன், தான் யார் என்பதை நினைவில் கொள்வதற்காக கதவு சட்டகங்களில் தம் கட்டளைகளை இடும்படி இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் இதயங்களில் கட்டளைகளை எழுதுவதன் மூலம் (உபாகமம் 6:6), அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மூலம் (வ.7), குறியீடுகள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி தேவன் கட்டளையிடுவதை நினைவுபடுத்துதல் (வ.8), மற்றும் கதவு சட்டகங்களில் மற்றும் நுழைவு வழிகளில் வார்த்தைகளை வைப்பது (வ.9) ஆகியவற்றின் மூலம் இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டார்கள். அவர் சொன்னதையோ அல்லது அவருடன் செய்த உடன்படிக்கையையோ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
தேவனுடைய வார்த்தைகளை நம் வீடுகளில் வைப்பதும், அவற்றின் அர்த்தத்தை நம் இதயங்களில் விதைப்பதும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய உண்மைத்தன்மையை நம்பியிருக்கும்படியான அடித்தளத்தை உருவாக்க உதவும். சோகமான அல்லது இதயத்தை நொறுக்கும் இழப்பின் மத்தியிலும் கூட நமக்கு ஆறுதலளிக்க அவர் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

தேவனின் வல்லமையுள்ள பிரசன்னம்.
2020 ஆம் ஆண்டு அமெரிக்க அரசியலமைப்பில் பெண்கள் ஓட்டளிப்பதற்கான வாக்குரிமை கொடுக்கப்பட்ட நூறாவது வருஷ நினைவாண்டு கொண்டாடப்பட்டது. அதற்காகப் பேரணியில் சென்றவர்கள் "ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி" (சங்கீதம் 68:11) என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துச் செல்வது பழைய புகைப்படங்களில் காண முடிந்தது.
சங்கீதம் 68இல் தாவீது, தேவன் கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் (வ.6), சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணி; இளைத்துப்போன அவரது சுதந்தரத்தைத் திடப்படுத்தி, தம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறார் (வ.9,10) என்றும் குறிப்பிடுகிறார். முப்பத்தியைந்து வசனங்கள் கொண்ட இச்சங்கீதத்தில் 'தேவன்' என்ற சொல் நாற்பத்திரண்டு முறை கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர் எப்போதும் அவர்களோடிருப்பார், அவர்களை அநீதியிலிருந்தும், பாடுகளிலிருந்தும் மீட்க உதவி செய்கிறார் என்பதற்காகவும் அப்படி உபயோகிக்கப்பட்டுள்ளது. அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி (வ. 11).
ஓட்டுரிமை கிடைத்ததற்காகப் பேரணி சென்ற பெண்கள் சங்கீதம் 68ல் உள்ள வசனத்தைப் புரிந்திருந்தார்களா என்பதைவிட, பதாகைகளிலிருந்த வசனங்கள் காலத்தை வென்ற தேவனுடைய உண்மையை வெளிக்காட்டியது. திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் தகப்பனாகிய தேவன் (வ.5) அவர்களுக்கு முன்னே சென்று, அவர்களை வழிநடத்தி ஆசீர்வாதமும், நிம்மதியும், சந்தோஷமும் பெற்றுக்கொள்ள உதவுகிறார்.
தேவனுடைய பிரசன்னம் அவருடைய ஜனங்களுடன் எப்பொழுதுமிருந்து, அவர்களைச் சிறந்த வழியில் நடத்தி, ஆபத்துக்கும், துன்பங்களுக்கும் விலக்கிக் காக்கிறதென்பதை நினைக்கும் போது இன்று நாம் ஊக்கமடைவோமாக. தமது ஆவியானவர் மூலமாகத் தேவன் இன்றும் நம்முடன் கடந்த காலத்தைப்போலவே வல்லமையுள்ளவராக இருக்கிறார்.

தூரம் அல்லவே அல்ல
ராஜ் தனது இளமை பருவத்தில் இயேசுவை இரட்சகராக நம்பினார், ஆனால் விரைவில், அவர் நம்பிக்கையிலிருந்து விலகி, தேவனை விட்டு விலகி வாழ்க்கையை நடத்தினார். ஒரு நாள், இயேசுவுடனான தனது உறவைப் புதுப்பித்து மீண்டும் தேவாலயத்திற்குச் செல்ல அவர் முடிவெடுத்தார். இத்தனை ஆண்டுகளாக சபைக்கு வராததால் ஒரு பெண்ணால் திட்டப்பட்டார். பல வருடங்களாக அலைந்து திரிந்த ராஜின் அவமானத்தையும் குற்ற உணர்வையும் இந்தத் திட்டு மேலும் கூட்டியது. நான் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவனா என அவர் சந்தேகித்தார். சீமோன் பேதுரு இயேசுவை மறுதலித்தான் (லூக்கா 22:34, 60-61) அதே வேளையில் அவனைத் தேவன் மீட்டெடுத்ததை (யோவான் 21:15-17) அவர் நினைவு கூர்ந்தார்.
பேதுரு தண்டனையை எதிர்பார்த்திருந்த போதிலும், அவர் பெற்றதெல்லாம் மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே. இயேசு, பேதுரு தன்னை மறுதலித்ததைக் குறிப்பிடவில்லை, மாறாக கிறிஸ்துவின் மீதான தனது அன்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் அவரைப் பின்பற்றுபவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் (யோவான் 21:15-17). பேதுரு அவரை மறுதலிக்கும் முன், இயேசு சொன்ன வார்த்தைகள் நிறைவேறிக் கொண்டிருந்தன: " நீ குணப்பட்டபின்பு உன் சகோதரை ஸ்திரப்படுத்து" (லூக்கா 22:32).
ராஜ், அதே மன்னிப்பு மற்றும் மறுசீரமைப்புக்காகத் தேவனிடம் கேட்டார், இன்று அவர் இயேசுவுடன் நெருக்கமாக நடப்பது மட்டுமல்லாமல் ஒரு தேவாலயத்தில் சேவைசெய்து மற்ற விசுவாசிகளையும் ஆதரிக்கிறார். நாம் தேவனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவர் நம்மை மன்னிக்கவும், நம்மை மீண்டும் வரவேற்கவும் மட்டுமல்ல, நம்மை மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார், அதனால் நாம் அவரை நேசிக்கவும், சேவை செய்யவும், மகிமைப்படுத்தவும் முடியும். நாம் ஒருபோதும் தேவனிடமிருந்து வெகுதொலைவில் இல்லை. அவருடைய அன்பான கரங்கள் நமக்காகவே திறந்திருக்கிறது.