
திறந்த ஸ்தலங்களை கண்டறிதல்
டாக்டர் ரிச்சர்ட் ஸ்வென்சன் தனது “மார்ஜின்” என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “நாங்கள் சுவாசிக்க கொஞ்சம் இடம்வேண்டும். சிந்திக்க சுதந்திரமும், குணமடைய அனுமதியும் வேண்டும். எங்கள் உறவுகள் ஒவ்வொன்றும் பட்டினியால் மடிகின்றன.... நற்சிந்தனையோடு சீறிப்பாய்ந்த எங்கள் குழந்தைகள் காயப்பட்டு தரையில் வீழ்ந்தனர். கடவுள் இப்போது சோர்வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ? அமர்ந்த தண்ணீரண்டைக்கு அவர் மக்களை இப்போது வழிநடத்துவதில்லையோ? கடந்த காலத்தின் பரந்த திறந்தவெளிகளை யார் கொள்ளையடித்தார்கள்? அவற்றை நாங்கள் எவ்வாறு திரும்பப் பெறுவது?” நாம் தேவனோடு இளைப்பாறுவதற்கும் தேவனை சந்திப்பதற்கும் அமர்ந்த செழிப்பான நிலம் வேண்டும் என்று ஸ்வென்சன் கூறுகிறார்.
அது எதிரொலிக்கிறதா? திறந்த வெளிகளைத் தேடும் வாழ்க்கைமுறையை மோசே நன்றாக வாழ்ந்திருக்கிறார் எனலாம். முரட்டாட்டமும் கலகமும் செய்யும் ஜனக்கூட்டத்தை வழிநடத்தி சென்ற மோசேக்கு, அமைதியாய் இளைப்பாறி தேவனுடைய பிரசன்னத்தை உணரவேண்டியது அவசியமாய் தோன்றியது. மேலும் அவருடைய “ஆசரிப்புக் கூடாரத்தில்” (வ. 7), “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (வச. 11). இயேசுவும் அவ்வப்போது, “வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என்று வேதம் சொல்லுகிறது. அவரும் மோசேயும் பிதாவோடு தனிப்பட்ட விதத்தில் நேரம் செலவழிப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர்.
நாமும், தேவனோடு இளைப்பாறுவதற்கும் அவருடைய பிரசன்னத்தை உணருவதற்கும் இப்படிப்பட்ட ஸ்தலத்தை தெரிந்துகொள்வது அவசியம். அவரோடு நேரம் செலவழிப்பது என்பது நல்ல தீர்மானங்களை எடுக்க உதவும் - நமது வாழ்க்கையில் ஆரோக்கியமான விளிம்புகளையும் எல்லைகளையும் உருவாக்கி, அவரையும் மற்றவர்களையும் நன்றாக நேசிக்கும் அலைவரிசையை நாம் பெறுவதற்கு உதவுகிறது.
திறந்தவெளியில் தேவனைத் தேட பிரயாசப்படுவோம்.

கிறிஸ்துவின் வல்லமை
2013 ஆம் ஆண்டில், சுமார் அறுநூறு ஆன்-சைட் பார்வையாளர்கள் கிராண்ட் கேன்யன் அருகே 1500 அடி அகலமுள்ள பள்ளத்தாக்கில் ஒரு இறுக்கமான கயிற்றின் மீது நிக் வாலெண்டா நடப்பதைக் கண்டனர். வாலெண்டா 2 அங்குல தடிமன் கொண்ட இரும்பு கயிற்றில் நடக்கையில், அவருடைய தலையில் பொருத்தப்பட்ட கேமராவில் அவருக்கு முன் இருந்த பள்ளத்தாக்கு தெரிகிற வேளையில் அவர் இயேசுவுக்கு நன்றி செலுத்தினார். அவர் அந்த பயங்கரமான பள்ளத்தாக்கில் ஒரு சாதாரண நடைபாதையில் நடப்பதுபோல் நடந்துசென்று, இயேசுவுக்கு நன்றி சொன்னார். தீடீரென்று காற்று வீச, அவர் நிலைகுலைந்து பின்பு சமநிலைப்பட்டார். காற்றில் அசைந்த அந்த கயிற்றை தேவன் சமநிலைப்படுத்தியதற்காய் தேவனுக்கு நன்றி சொன்னார். அந்த இறுக்கமான கயிற்றின் ஒவ்வொரு அடியிலும், அவர் கிறிஸ்துவின் வல்லமையை சார்ந்திருப்பதை அன்றும் இன்றும் கேட்கும் அனைவருக்கும் பிரதிபலித்தார். வீடியோ உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
கலிலேயா கடலில் சீஷர்களின் படகை பெருங்காற்று சூழ்ந்தபோது, அவர்கள் உதவிக்காய் கதறும் அளவிற்கு பயம் அவர்களை சூழ்ந்துகொண்டது (மாற்கு 4:35-38). இயேசு சலசலப்பை அடக்கிய பிறகு, அவர் காற்றையும் மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தினார் என்பதை சீஷர்கள் அறிந்தனர் (வச. 39-41). மெல்ல மெல்ல அவர் மீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். அவர்களின் இந்த தனிப்பட்ட அனுபவங்கள் மற்றவர்கள் இயேசுவோடு நெருங்குவதற்கும் அவருடைய அசாதாரண வல்லமையை விளங்கிக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
வாழ்க்கையின் புயல்களை நாம் சந்திக்கும்போதோ அல்லது துன்பத்தின் ஆழமான பள்ளத்தாக்குகளில் நீட்டிக்கப்பட்ட நம்பிக்கையின் இறுக்கமான கயிற்றில் நடக்கும்போதோ கிறிஸ்துவின் வல்லமையின் மீதான நம்பிக்கையை நாம் வெளிப்படுத்த முடியும். தேவன் நம்முடைய விசுவாச நடையை பயன்படுத்தி அவர் மீது நம்பிக்கை வைக்க மற்றவர்களை தூண்டுவார்.

ஆராதனை பண்டிகை
பெரிய கூட்டங்களில் பங்கேற்பது என்பது உங்களை ஆச்சரியமான விதங்களில் மாற்றமடையச் செய்யும். அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற தேசங்களில் பல நாள் கூட்டங்களில் 1,200க்கும் மேற்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு, ஆராய்ச்சியாளர் டேனியல் யூட்கினும் அவரது சகாக்களும், இதுபோன்ற பெரிய கூட்டங்கள் நம்முடைய ஒழுக்கரீதியான வாழ்க்கையையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கைமுறையையும் பாதிக்கும் என்பதைக் கற்றுக்கொண்டனர். திருவிழாவில் பங்கேற்பவர்களில் 63 சதவீதம் பேர் மறுரூபமாக்கபட்ட அனுவத்தை பெற்றதாக அவர்களின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
ஆயினும் தேவனை ஆராதிக்க மற்றவர்களுடன் நாம் ஒன்றுகூடும்போது, ஒரு மதச்சார்பற்ற பண்டிகையின் சமூக மாற்றத்தை விட அதிகமாக நாம் அனுபவிக்க முடியும்;. நாம் தேவனோடு தொடர்புகொள்கிறோம். பண்டைய நாட்களில் ஆண்டு முழுவதும் பண்டிகைகளுக்காக எருசலேமில் மக்கள் கூடிவந்தபோது, தேவனுடைய பிள்ளைகள் தேவனுடனான தொடர்பை முழுமையாய் அனுபவித்தனர்;. “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகை” (உபாகமம் 16:16) ஆகிய நாட்களில் ஆலயத்தில் தங்கும் நவீன வசதிகள் இல்லாதபோதிலும், வருடத்திற்கு மூன்றுதரம் கூடிவந்தார்கள். இந்த கூடுகைகள், நினைவுகூருதல், ஆராதனை, குடும்பம், வேலைக்காரர்கள், அயல்நாட்டவர் மற்றும் பலருடன் தேவனுடைய சமூகத்தில் மகிழ்ச்சியடைவது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்தது (வச. 11).
அவரைத் தொடர்ந்து ஆராதிக்கவும், அவருடைய உண்மைத்தன்மையில் நம்பிக்கை வைக்கவும் ஒருவருக்கொருவர் உதவிசெய்ய மற்றவர்களுடன் நாமும் ஒன்றாகக் கூடுவோம்.

விளம்பர தூதுவர்களுக்கும் மேல்
இந்த இன்டர்நெட் உலகத்தில் போட்டி மனப்பான்மை என்பது மிகவும் கடுமையாகிவிட்டது. பெரும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கி வருகின்றன. உதாரணமாக, சுபாரு வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம். சுபாரு உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை விளம்பரப்படுத்தும்பொருட்டு நம்பிக்கைக்குரிய அதின் ரசிகர்களை அழைப்பித்து அவர்களையே “பிராண்ட் தூதுவர்களாக” பயன்படுத்துகின்றனர்.
அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது: “சுபாரு தூதர்கள் சுபாருவைப் பற்றிய புகழைப் பரப்புவதற்கும், பிராண்டின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுவதற்கும் தங்கள் ஆர்வத்தையும் ஆற்றலையும் தன்னார்வத்துடன் வழங்கும் திறமைமிக்க பிரத்யேகமான குழுவாகும்.” சுபாரு வாகனங்களை பயன்படுத்துகிறவர்கள் மக்களின் மத்தியில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதினால் அவர்களைக் கொண்டு அதின் புகழானது பரப்பப்படுகிறது.
2 கொரிந்தியர் 5 இல், இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் ஒரு வித்தியாசமான துதுவர் திட்டத்தை விவரிக்கிறார். “ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்” (வச. 11). “தேவன்... ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” (வச. 19-20).
இன்று பல தயாரிப்புகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும், மகிழ்ச்சி, முழுமை மற்றும் நோக்கம் ஆகியவற்றின் உணர்வை வழங்குவதாகவும் உறுதியளிக்கின்றன. ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஒப்புரவாக்குதலின் செய்தி, நற்செய்தி. அந்த நற்ச்செய்தியை ஒரு அவிசுவாசமான உலகிற்கு கொடுப்பதற்கான பாக்கியம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது
