வகை  |  odb

மாயைகளை எரிப்போம்

1497ம் ஆண்டு, கிரோலாமா ஸவனரோலா என்கிற ஒரு துறவி, நெருப்பு ஒன்றைத் துவக்கினார். பிறகு, மக்களை பாவம் செய்யத்தூண்டுவதாக அல்லது மதக்கடமைகளைப் புறக்கணிக்கச் செய்வதாக தாங்கள் கருதிய பொருட்களை எல்லாம் சேகரிப்பதில் அவரும் அவருடைய சீடர்களும் பல மாதங்கள் செலவிட்டார்கள். அவற்றில் கலைபடைப்புகள், அழகுசாதனங்கள், பிறசாதனங்கள், துணிமணிகள் போன்றவை அடங்கும். குறிப்பிட்ட ஒரு நாளில், ஆயிரக்கணக்கான மாயை பொருட்களை இத்தாலியின் ஃபிளாரன்ஸ் என்கிற இடத்திலுள்ள ஒரு பொது சதுக்கத்தில் குவித்து, தீக்கொளுத்தினார்கள். அந்த நிகழ்வுதான் மாயை பொருட்களின் எரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

மலைப்பிரசங்கத்தின் சில அதிர்ச்சி தரும் செய்திகளால் உந்தப்பட்டு, ஸவனரோலா இப்படிப்பட்ட தீவிரப்போக்கில் இறங்கியிருக்கலாம். “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு” என்று இயேசு சொன்னார். மத்தேயு 5:29-30. இயேசு சொன்னவற்றிற்கு மேற்போக்காக அர்த்தம் கண்டால் முக்கியமான செய்தியைக் காணத் தவறிவிடுவோம். மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக அர்த்தங்காணும்படிதான் மலைப்பிரசங்கம் முழுவதுமே அமைந்துள்ளது.  அதாவது நம்முடைய இருதயங்களின் நிலை எப்படியிருக்கிறது என்பது முக்கியம், ‘என் கவனம் சிதறியதால், பாவச்சோதனையால் அவ்வாறு செய்தேன்’ என்று சொல்வதில் பயனில்லை.

பொருட்களையும் கலைப்படைப்புகளையும் எரித்தது, காண்பதற்கு பிரமாண்டமான காட்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்த மக்களுடைய இருதயங்கள் மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். தேவனால் மட்டுமே இருதயத்தை மாற்றமுடியும். அதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபிக்கிறார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” சங்கீதம் 51:10. நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சந்தோஷமாக விளையாடுங்கள்

எங்களுடைய மகன்களில் ஒருவரான பிரையன் ஓர் உயர்நிலை பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியாளராக இருக்கிறான். ஓர் ஆண்டு நடைபெற்ற வாஷிங்டன் மாகாண கூடைப்பந்து போட்டியில் அவனுடைய பள்ளி அணி தொடர் வெற்றியைக் குவித்தது. எனவே அங்கிருந்த நல்லெண்ணம் கொண்ட சிலர் வந்து, “இந்த வருட கோப்பையை வென்றுவிடுவீர்களா?” என்று கேட்டார்கள்.  அது விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களில் அழுத்தத்தை உண்டாக்கியது. அப்போது பிரையன் கையாண்ட ஒரு குறிக்கோள்:”சந்தோஷமாக விளையாடுங்கள்!”

எபேசுவின் மூப்பர்களுக்கு பவுல் எழுதின கடைசி வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன்: “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க...  விரும்புகிறேன்” (அப் 20:24.) இயேசு தன்னிடம் ஒப்படைத்திருந்த பணிகளை முடிப்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. நானும் என்னுடைய குறிக்கோளாகவும் ஜெபமாகவும் வைத்திருக்கிற வார்த்தைகள் என்னவென்றால், “என் ஓட்டத்தை சந்தோஷமாக முடிக்க... விரும்புகிறேன்” அல்லது பிரையன் சொல்வதுபோல, “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும்” பிரையனின் அணியானது அந்த வருடத்தில், வெற்றிபெற்று அந்தக் கோப்பையைக் கைப்பற்றினார்கள்.

உலகு தரும் செய்திகள், அனுதின அழுத்தங்கள், உடல்நலப் பிரச்சனைகள் போன்ற பல விஷயங்கள் நம்முடைய நிம்மதியைப் பறிக்கலாம். ஆனாலும் நாம் தேவனிடம் கேட்டால், இவற்றையும் கடந்த மேலான ஒரு சந்தோஷத்தை அவர் தருவார். “என்னுடைய சந்தோஷம்” (யோவான் 15:11) என்று தேவன் சொல்லுகிறார் அல்லவா, அந்தச் சந்தோஷத்தைப் பெறலாம்.

இயேசுவினுடைய ஆவியின் கனிதான் சந்தோஷம். (கலா 5:22). எனவே ஒவ்வொரு நாள் காலையிலும், “நான் சந்தோஷமாக விளையாடவேண்டும், அதற்கு உதவும்” என்று அவரிடம் கேட்க மறக்கக் கூடாது. ஆசிரியரான ரிச்சர்ட் ஃபாஸ்டர் பின்வருமாறு சொல்கிறார்: “ஜெபிப்பது நம்மை மாற்றுகிறது. இது மிகப்பெரிய ஒரு கிருபை. நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிப்பதற்கான ஒரு பாதையை தேவன் தருகிறாரென்றால், அவர் எவ்வளவு நல்லவரென்பது தெரிகிறது.”

தேவன் சந்தோஷமாய் மகிழ்கிறார்

என்னுடைய பாட்டி சமீபத்தில் ஒரு கோப்பு நிறைய பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.  நான் இரண்டு வயது சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டில் நெருப்புமூட்டுகிற இடத்தில், ஓர் ஓரத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். மறுபக்கத்தில் என் அம்மாவின் தோள்களில் என் அப்பா கைபோட்டவாறு அமர்ந்திருக்கிறார். இருவரும் அன்போடும் சந்தோஷத்தோடும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை என் துணிமணிகள் இருந்த அலமாரியில் ஒட்டிவைத்தேன், தினமும் காலையில் அதைப் பார்ப்பேன். அவர்கள் என்மேல் வைத்திருந்த அன்புக்கு ஓர் அருமையான அடையாளம் அது. அந்தப் படத்தை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கான காரணம்
என்னவென்றால், சிலசமயங்களில் மனிதர்களுடைய அன்பு தோற்றாலும்கூட தேவ அன்பு ஒருபோதும் மாறாதது என்பதை அது நினைவூட்டுவதால்தான். அந்தப் படத்தில் என் பெற்றோர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது போலவே தேவன் என்னைப் பார்ப்பதாக வேதாகமம் கூறுகிறது.

தேவனுடைய அன்பைப் பற்றி செப்பனியா தீர்க்கதரிசி விவரிக்கிற விதமானது என்னைப் பிரமிக்கச் செய்கிறது. தேவன் தம் மக்கள்மேல் களிகூர்ந்து, மகிழ்ச்சியுடன் பாடுவதாகக் கூறுகிறார். தேவ பிள்ளைகள் அந்த அன்பைச் சம்பாதித்து வாங்கவில்லை. அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமலும் ஒருவர்மேல் ஒருவர் மனதுருக்கமாக நடக்காமலும் இருந்தார்கள். ஆனால் இந்தத் தோல்விகளுக்கு மத்தியிலும் தேவ அன்பே இறுதியில் மேலானதாக விளங்குமென செப்பனியா வாக்குரைக்கிறார். தேவன் அவர்களுடைய தண்டனையை நீக்கி (செப்பனியா 3:15), அவர்கள்மேல் சந்தோஷப்பட்டுக் களிகூருவார். வசனம் 17.  தம் மக்களாகிய அவர்களை தம் கரங்களுக்குள் கூட்டிச்சேர்த்து, அவர்களை சொந்தத் தேசத்திற்கு வழிநடத்திச் சென்று, புது வாழ்வைக் கொடுப்பார். வசனம் 20.

ஒவ்வொரு நாள் காலையிலும் தியானிப்பதற்கு தகுதியான அன்பு அது.

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி விளையாடினோம். நான் ஒளிந்துகொண்டேன். என்னுடைய ஐந்து வயது மாமா மகன் என்னை நெருங்கி வந்து கேட்டது. ‘இப்போது கண்டுபிடித்துவிடுவான்’ என்று நினைக்கும்போதே என்னுடைய இருதயம் படபடவென அடித்துக்கொண்டது. மிகவும் நெருங்கிவிட்டான். இன்னும் ஐந்து எட்டுதான். “கண்டுபிடித்து விட்டேன்!” என்றான்.

கண்ணாமூச்சி விளையாட்டு, சிறுவயதில் எல்லாருமே இந்த விளையாட்டை விளையாடியிருப் போம். கண்டுபிடிக்கப்படுவது என்பது வாழ்க்கையில் சிலசமயம் விளையாட்டான அனுபவமாக இருக்காது, எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்கிற உள்ளுணர்வுதான் மேலோங்கி இருக்கும். தங்களுடைய நிலையை மக்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைக்கிறவர்கள் அவ்வாறு ஓடுவார்கள்.

விழுந்துபோன உலகின் பிள்ளைகளாகிய நாமும் கண்ணாமூச்சி விளையாடுகிற நிலையில்தான் இருக்கிறோம். என்னுடைய நண்பன் அதை நமக்கும் தேவனுக்கும் இடையிலான “ஒரு வகையான கண்ணாமூச்சி விளையாட்டு” என்று சொல்லுவான்.  அதில் ஒளிந்துகொள்வதுபோல நாம் நடிக்கத்தான் முடியும். ஏனெனில் நம்முடைய சகல எண்ணங்களையும் தவறான தீர்மானங்களையும் அவர் நன்றாகவே அறிவார். அது நமக்கும் தெரியும், ஆனால் அவரால் அதைப் பார்க்க முடியாததுபோல நாமும் நடந்துகொள்கிறோம்.

ஆனாலும் தேவன் தொடர்ந்து நம்மைத் தேடிவருகிறார். “வெளியே வா. உன்னுடைய அவலட்சணமிக்க பகுதியைக்கூட நான் பார்க்க விரும்புகிறேன்” என்று தேவன் அழைக்கிறார். இதே சத்தம்தான் நம்முடைய முதல் பெற்றோரையும், அவர்கள் பயத்தால் ஒளிந்திருந்த போதும் அழைத்தது: “நீ எங்கே இருக்கிறாய்?” (ஆதி. 3:9). அது ஓர் அன்பான அழைப்புதான், ஆனாலும் அந்தக் கேள்வி அவர்களுக்கு குத்தலாக இருந்திருக்கவேண்டும். “அன்பு பிள்ளையே, நீ ஒளிந்திருக்கிற இடத்தைவிட்டு வெளியே வா. மீண்டும் என்னோடு உறவுவைத்துக்கொள்.”

இது மிகவும் அபாயகரமானதாகவும், ஆபத்தானதாகவும்கூட தோன்றலாம். ஆனால் நாம் யாரானாலும், எப்படிப்பட்ட தவறைச் செய்திருந்தாலும் அல்லது செய்யவேண்டியதைச் செய்யத் தவறியிருந்தாலும், நம்முடைய பிதாவின் அரவணைப்பில், அவருடைய அன்பையும் பாதுகாப்பையும் பெறலாம்.

பொறாமைக்கு முற்றுப்புள்ளி

பிரபல ஃப்ரெஞ்ச் ஓவியரான எட்கார் டேகாஸ் என்பவர், பாலே நடனக்குழு மங்கைகளின் ஓவியத்திற்காக உலகப்புகழ் பெற்றவர்.  ஆனால் தன் சகஓவியரும் நண்பருமான எட்வர்ட் மேனட் மீது அவர் எவ்வளவுக்கு பொறாமை கொண்டிருந்தார் என்பது யாருக்கும் அதிகம் தெரியாது. மேனடைப் பற்றி, “அவன் எதைச் செய்தாலும் உடனே நன்றாக வந்துவிடுகிறது, ஆனால் நான் எவ்வளவுதான் பாடுபட்டாலும் சரியாக வருவதில்லை” என்று டேகாஸ் சொன்னார்.

பொறாமை உணர்வுதான் இதற்கு காரணம். மோசமான குணங்களில் பொறாமையையும் பவுல் பட்டியலிடுகிறார். “அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம்” போன்றவை கேடான சிந்தையால் உண்டாவதாகச் சொல்கிறார் (ரோம. 1:29). தேவனைத் தொழுதுகொள்ளாமல் விக்கிரகங்களைத் தொழுவதால் இத்தகைய சிந்தைகள் உண்டாகின்றன (வச. 28).

விசுவாசிகள் மத்தியில் பொறாமை உருவானால் “மெய்யான ஒரே அன்பைவிட்டு நம்முடைய இருதயங்கள் திசைதிரும்புவதே” அதற்கு காரணமென்கிறார் கிறிஸ்டினா ஃபாக்ஸ்.  நாம் பொறாமை கொள்ளும்போது, “இயேசுவைப் பார்க்காமல் இவ்வுலகின் கீழ்த்தரமான இன்பங்களை நாடி ஓடுகிறோம். உண்மையில், நாம் யாரென்பதையே மறந்துபோகிறோம்” என்று அவர் சொன்னார்.

ஆனாலும் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. தேவனிடம் திரும்புங்கள். “உங்களை ஒட்டுமொத்தமாக தேவனிடம் அர்ப்பணியுங்கள்” என்று பவுல் வலியுறுத்துகிறார். பார்க்கவும்: ரோமர் 6:13. குறிப்பாக, உங்களுடைய வாழ்க்கையையும் வேலையையும் அர்ப்பணியுங்கள். தன்னுடைய மற்றொரு நிருபத்தில் பவுல், “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்” என்று எழுதுகிறார். கலாத்தியர் 6:4.

தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி.  குறிப்பாக, அவருடைய கிருபையின் விடுதலைக்காக நன்றி. தேவன் நமக்குத் தந்திருக்கும் ஈவுகளை வைத்து, நாம் மனரம்மியமாக வாழலாம்.

புயலிலும் அவர் பிரசன்னம்

எங்களுடைய சபையைச் சேர்ந்த ஒருவருடைய வீடு தீ விபத்தில் சிக்கியது.  அந்தக் குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர்.  கணவனும் மகனும் பிழைத்துக் கொண்டார்கள்; மனைவியும் அம்மாவும் இரண்டு சிறிய குழந்தைகளும் அந்த விபத்தில் மரித்துப் போனார்கள்.  மனதைப் பிளக்கிற இத்தகைய சம்பவங்களை ஓயாமல் கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரிடும் போதெல்லாம் எழும்புகிற கேள்வி, “நல்லவர்களுக்கு ஏன் மோசமான சம்பவங்கள் நேரிடுகின்றன?” என்பதுதான்.  எல்லாக் காலத்திலும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காமல்தான் இருந்திருக்கிறது.

சங்கீதம் 46ல் சங்கீதக்காரன் வலியுறுத்துகிற சத்தியமும்கூட எல்லாக் காலங்களிலும் பேசப்படுகிறது, வாக்குத்தத்தமாகப் பார்க்கப்படுகிறது, மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.  “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” வசனம் 1. பூமியும் மலைகளும் அதிர்வது, சமுத்திரம் கொந்தளிப்பது என்று பேரழிவுகள் பற்றி 2,3ம் வசனங்கள் பேசுகின்றன. இதுபோன்ற பேரழிவில் சிக்குவதை நினைத்தாலே நமக்கு நடுக்கம் ஏற்பட்டு விடும். சிலசமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நாம் உண்மையிலேயே சிக்கிக்கொள்கிறோம். மரணத்தைக் கொண்டுவரும் நோய்கள், கொடிய பணப்பிரச்சனை, நமக்கு பிரியமானவர்களின் மரணம் போன்றவை பேரழிவுகளாக அமைகின்றன.

இப்படிப்பட்ட பிரச்சனைகள் நேரிடும்போது, தேவன் உண்மையில் இருக்கிறாரா என்று யோசிக்கத் தூண்டப்படுகிறோம். அப்படி யோசிக்க அவசியமில்லையென வேதாகமம் கூறுகிறது. “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.” வசனங்கள் 7,11. நம்மால் தாங்கமுடியாத சூழ்நிலைகளின் மத்தியிலும் அவருடைய பிரசன்னம் நம்மோடுகூட இருக்கும்.  அவர் நல்லவராகவும், அன்புள்ளவராகவும், நம்பிக்கைக்கு பாத்திரராகவும் இருப்பதால் நாம் ஆறுதலடையலாம்.

நம்முடைய பலவீனங்களில்

அனி ஷீஃப் மில்லர் என்கிற பெண்மணி தன்னுடைய 90வது வயதில் 1999ம் ஆண்டு மரித்தார். ஆனால், 1942ம் ஆண்டிலேயே அவர் மரித்திருக்க வேண்டியவர். அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, இரத்தத்தொற்று உண்டானது. அனைத்து சிகிச்சைகளும் தோல்வியடைந்தன. அப்போது அதே மருத்துவமனையிலிருந்த நோயாளி ஒருவர், தனக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் அற்புதமான ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வருவதாகக் கூறினார், அந்த மருந்தில் கொஞ்சத்தை அனிக்கு வாங்கித் தரும்படி அரசாங்கத்தை அனியின் மருத்துவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த மருந்தைக் கொடுத்ததும், ஒரே நாளில் அவருக்கு ஜுரம் நீங்கி, உடல் நிலை சாதாரணமானது! பெனிசிலின் மருந்து அனியின் உயிரைக் காப்பாற்றியது.

விழுதலுக்கு பிறகு, மனிதர்கள் அனைவருமே நாசகரமான ஓர் ஆவிக்குரிய நிலையை அனுபவித்திருக்கிறார்கள். அதற்கு காரணம் பாவம். ரோமர் 5:12. இயேசு மரித்ததும், உயிர்த்தெழுந்ததும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுமே நாம் அதிலிருந்து மீளுவதைச் சாத்தியமாக்கியுள்ளன.ரோமர் 8:1-2. பூமியில் நாம் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழவும், நித்திய வாழ்வில் தேவனுடைய பிரசன்னத்தில்வாழ்ந்து மகிழவும் பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருள்செய்கிறார். வசனங்கள் 3-10. “இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” வசனம் 11.

உங்களுடைய பாவ இயல்பானது உங்களிடமிருந்து வாழ்க்கையை உறிஞ்சி எடுத்துவிடும் போலத் தோன்றும்போது, இரட்சிப்பின் ஆதாரமாகிய இயேசுவை நோக்கிப்பார்த்து, அவருடைய ஆவியின் வல்லமையால் பெலப்படுங்கள். வசனங்கள் 11-17. “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்;” கூடவே “தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறார்.” வசனங்கள் 26-27.

வில்லன்களை விடுவித்தல்

காமிக் புத்தக ஹீரோக்கள் எப்போதுமே பிரபலம்தான். 2017ல் மட்டும் ஆறு சூப்பர்ஹீரோ படங்கள், 4 பில்லியன் அமெரிக்க டாலர் தொகைக்கு பாக்ஸ்  ஆபீஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளன. ஆக்சன் ஹீரோ படங்கள் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெறுவதற்கான காரணம் என்ன?

அப்படிப்பட்ட கதைகள் எல்லாமே தேவனுடைய மாபெரிய சரித்திரம் ஒத்திருப்பதே அதற்கு ஒரு காரணமாகும். ஒரு ஹீரோ இருப்பார், ஒரு வில்லனும் இருப்பார், மக்களை அவரிடமிருந்து காப்பாற்றவேண்டும், எனவே பரபரப்பான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்தச் சம்பவத்தில், முக்கிய வில்லன், நம் ஆத்துமாக்களின் சத்துருவாகிய சாத்தான். ஏராளமான “குட்டி” வில்லன்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, தானியேல் புத்தகத்திலுள்ள நேபுகாத்நேச்சார் அப்படிப்பட்டவர்தான். அன்றைய உலகின் பெரும்பகுதியை ஆட்சிசெய்தவர், அவர் ஒரு மாபெரும் சிலையை நிறுவி, அதைத் தொழுதுகொள்ளாத அனைவரையும் கொன்றுபோடத் தீர்மானித்தார். தானி 3:1-6. தைரியமிக்க மூன்று யூத அதிகாரிகள் அதற்கு மறுத்தார்கள். வசனங்கள் 12-18. எரிகிற அக்கினி சூளையிலிருந்து அற்புதமாக தேவன் அவர்களை விடுவித்தார். வசனங்கள் 24-27.

ஆனால் இங்கு எதிர்பாரா ஒரு திருப்பம்; இந்த வில்லனுடைய மனது மாற ஆரம்பிக்கிறது. பிரமிப்பூட்டும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து நேபுகாத்நேச்சார், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று சொன்னார். வசனம் 28.

அந்த தேவனுக்கு விரோதமாகப் பேசுகிற எவனும் கொல்லப்படுவான் என்றும் மிரட்டுகிறார். வசனம் 29. உண்மையில், அவருடைய உதவி தேவனுக்கு தேவையில்லை என்பதை உணரவில்லை. தேவனைப்பற்றி நேபுகாத்நேச்சார் இன்னும் அதிகமாக அறிந்துகொண்டார் என்பதை 4ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அது வேறு கதை.

நேபுகாத்நேச்சார் ஒரு வில்லன் மட்டுமல்ல, ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஒருவரும் கூட. தேவனுடைய மீட்பின் சம்பவத்தில், நம்முடைய ஹீரோவான இயேசு, யாரையெல்லாம் காப்பாற்றமுடியுமோ அவர்களை எல்லாம் தேடிச்செல்கிறார். நம் மத்தியில் இருக்கிற வில்லன்களைக் கூட தேடிச் செல்கிறார்.

குச்சி பொம்மை ஓவியத்தின்மூலம் பாடம்

அவள் என்னுடைய தோழி, என்னுடைய ஆலோசகரும்கூட, அவள் ஓர் ஓவியம் வரைந்தாள். குச்சி பொம்மை போன்ற ஓவியம். அந்த ஓவியத்திற்கு “தனிப்பட்ட வாழ்க்கை” என்று பெயரிட்டாள். பிறகு அந்த ஓவியத்தைச் சுற்றிலும் அரை அங்குல அளவு பெரிதாக வெளிக்கோட்டை வரைந்தாள். அந்த ஓவியத்திற்கு “வெளிப்படையான வாழ்க்கை” என்று பெயரிட்டாள். இந்த இரண்டு ஓவியங்களுக்கும் இடையேயான வித்தியாசம்தான், நம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வெளிப்படையான வாழ்க்கைக்கும் இடையேயான  நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

அந்த ஓவியத்தைப் பார்த்தவாறே, “வெளிப்படையான வாழ்க்கையைப் போலவே என்னுடய தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறதா? என்னிடம் நிலைப்பாடு காணப்படுகிறதா?” என்று சிந்தித்தேன்.

கொரிந்துவிலிருந்த சபைக்கு பவுல் நிருபங்களை எழுதினார். இயேசுவைப் போல் வாழும்படி அன்பையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்துகிறார். பிறகு, தன்னை எழு பலமுள்ளவன் என்றும், தோற்றத்தில் பலவீனன் என்றும் குற்றஞ்சாட்டினவர்களுக்கு (2 கொரி. 10:10) அந்த நிருபத்தின் இறுதியில் அவர் பதிலளிக்கிறார். இவ்வாறு விமர்சித்தவர்கள் சிறந்த பேச்சால், பணம்வாங்கி போதிப்பவர்களாக இருந்தார்கள். பவுல் கல்வித்திறனில் சிறந்து விளங்கினாலும், மக்கள் புரிந்துகொள்கிற விதத்தில், எளிமையாகப் போதித்தார். கொரிந்தியருக்கு  எழுதின முதலாம் நிருபத்தில் “என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது” என்று எழுதியிருந்தார் (1 கொரி. 2:4). ஆனால் இரண்டாவது நிருபத்தில் அவர் எழுதுகிற ஒரு விஷயம் அவருடைய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது: “அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன்” (2 கொரி. 10:11).

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படியோ, அப்படியே தன்னுடைய வெளிப்படையான வாழ்க்கையும் இருப்பதாக பவுல் கூறினார். நாம் எப்படி இருக்கிறோம்?