ஆடு-புலி ஆட்டம்போல பலகைகளை வைத்து விளையாடுகிற விளையாட்டுகள் ஏராளம் உள்ளன. அப்படியொரு விளையாட்டு பலகை ஒன்று கிடைத்ததும் என் ஆறு வயது மகன் ஓவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் அரைமணிநேரம் விளையாட்டு விதிகளை வாசித்தபிறகு, அவனுக்கு சலிப்புத்தட்டிவிட்டது. எவ்வாறு அந்தப் பலகையை வைத்து விளையாடுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு அதில் விளையாடி அனுபவமுண்டு.  அவர் விளையாடிக் காண்பித்த பிறகுதான், தனக்கு பரிசாகக் கிடைத்த அந்தப் பலகை அவனுக்கு முக்கியமானதாகத் தெரிந்தது.

அவர்கள் இருவரும் விளையாடியதைப் பார்த்தபோது, அனுபவமுள்ள ஆசிரியர் ஒருவர் இருந்தால் புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பது புரிந்தது.  விதிமுறைகளை வாசித்தும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் செயல்முறையோடு யாராவது விளக்கிச் சொன்னால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதை நன்றாகப் புரிந்திருந்தார். சபையானது விசுவாசத்தில் வளருவதற்கு தீத்து எவ்வாறு உதவியாக இருக்கமுடியும் என்று எழுதும்போது, அனுபவமிக்க விசுவாசிகளின் பங்கு அதில் மிகவும்  முக்கியமானதென பவுல் வலியுறுத்துகிறார். ‘ஆரோக்கியமான உபதேசம்” முக்கியம்தான்; ஆனால் வெறுமனே அதைப் போதிப்பது மட்டும் போதாது, அதன்படி வாழ்ந்துகாட்டவேண்டியதும் முக்கியம். முதிர்வயதுள்ள ஆண்களும் பெண்களும் தன்னடக்கமுள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமென பவுல் எழுதுகிறார் (தீத்து 2:2-5). “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி” என்று சொன்னார். வசனம் 7.

ஆரோக்கியமான உபதேசத்திற்காக நன்றிசொல்லுகிறேன், ஆனால் அவற்றின்படி வாழ்ந்து போதிக்கிறவர்களுக்காகவும் நன்றிசொல்லுகிறேன். கிறிஸ்துவின் சீடன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று அவர்கள் தங்களுடைய வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்; நானும் அந்தப் பாதையில் எவ்வாறு நடக்கலாமென எளிதில் கண்டுகொள்ளவும் உதவியிருக்கிறார்கள்.