
எப்படி சமாதானம் பெறுவது?
மதியம் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, என்னுடைய நண்பன் என்னிடம், “சமாதானம் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான். “சமாதானமா... என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஏன் கேட்கிறாய்?” என்று சற்றுக் குழப்பத்தோடு அவனிடம் கேட்டேன். உடனே அவன், “ஆராதனையின்போது காலால் தரையில் கோலமிட்டவண்ணம் இருந்தாய். உன் மனது ஏதோ சஞ்சலத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு தேவன் தருகிற சமாதானம் பற்றி யோசித்திருக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டான்.
சில வருடங்களுக்குமுன் ஒரு நாளில், என் நண்பன் கேட்ட அந்தக் கேள்வி உண்மையிலேயே என் மனதில் ஆழமாகக் குத்தியது. புதிய ஒரு பாதையில் நான் பயணிக்க உதவியது. சந்தோஷமாகவும் சமாதானமாகவும் வாழ்வது ஓர் ஈவு. அதை கஷ்டங்களுக்கு மத்தியிலும் தேவ பிள்ளைகள் எவ்வாறு தங்களுக்குச் சொந்த மாக்கினார்களென வேதாகமத்தில் ஆராயத் துவங்கினேன். கொலோசெயருக்கு பவுல் எழுதும் நிருபத்தில், தேவ சமாதானம் அவர்களுடைய இருதயங்களில் ஆளவேண்டுமென அவர் சொல்கிறார். அதுபற்றித் தியானித்தேன் (கொலோ. 3:15).
கொலோசெ சபைக்கு பவுல் சென்றதில்லை, தன் நண்பனாகிய எப்பாப்பிரா மூலம்தான் அதைப்பற்றி அறிந்துகொண்டார். பொய்ப்போதகங்களை அவர்கள் கேட்க நேரிட்டால், கிறிஸ்துவின் சமாதானத்தை இழந்துபோவார்களென வருந்தினார். ஆனால் அவர்களைக் கடிந்துகொள்வதற்கு பதிலாக, இயேசுவை நம்பும்படியும், நம்பிக்கையையும் நிச்சயத்தையும் கொடுக்க அவர் வல்லவர் என்றும் அவர்களை ஊக்கப்படுத்துகிறார் (வச. 15).
கிறிஸ்துவின் சமாதானம் நம் இருதயங்களில் ஆளும்படி அதை அனுமதிப்பதா அல்லது மறுப்பதா என்று நம்மைக் குழப்புகிற பல சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்கிறோம். நாம் அவரிடம் சென்று, நமக்குள் வசிக்கும்படி அவரிடம் கேட்டால், நம்மைப் பாரப்படுத்துகிற சஞ்சலத்தையும் கவலைகளையும் அன்போடு அவர் அகற்றிப் போடுவார். அவருடைய சமாதானத்தை நாம் தேடினால், அவர் அன்போடு நம் தேவைகளைச் சந்திக்கிறார் என்று நம்புவதை வெளிப்படுத்துகிறோம்.

இப்போது உங்களுக்குப் பசிக்கிறதா?
இந்தியாவில் மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் தாமஸ். அமெரிக்க தம்பதியர் அவரைத் தத்தெடுத்தார்கள். ஒரு சமயம் அவர் இந்தியாவிற்கு வந்திருந்தபோது, தன்னுடைய நகரத்திலிருந்த சிறுவர்கள் அதிகமான தேவையில் இருப்பதைக் கண்டார். அவர்களுக்கு உதவவேண்டியது தன்னுடைய கடமை என்று புரிந்தது. அமெரிக்காவிற்கு திரும்பிச் சென்று, படிப்பை முடித்து, நிறைய பணம் சேர்த்துவிட்டு, மறுபடியும் இந்தியாவுக்குத் திரும்பிவந்து உதவிசெய்யவேண்டுமென நினைத்தார். அதற்கான திட்டங்களைப் போடத் துவங்கினார்.
பிறகு, யாக்கோபு 2:14-18ஐ வாசித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் சிறுமி ஒருத்தி தன் அம்மாவிடம், “அம்மா, இப்போது எனக்குப் பசிக்கிறது!” என்று அழுவது அவருடைய காதில் தொனித்தது. “ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?” என்று அப்போஸ்தலர் அதில் கேட்டிருப்பார். தானும்கூட மிகவும் பசியோடு, ஏதாவது கிடைக்குமா என்று குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்த காலம் அவருடைய நினைவுக்கு வந்தது. உதவிசெய்வதற்கு இன்னும் பல வருடங்களைக் கடத்துவதற்கு அவர் விரும்பவில்லை. “இப்போது ஆரம்பிக்கப் போகிறேன்!” என்று தீர்மானித்தார்.
திக்கற்ற பிள்ளைகளுக்காக அவர் ஆரம்பித்த இல்லத்தில் இன்று 50 பிள்ளைகள் சிறந்த கவனிப்புடன் வயிறார சாப்பிடுகிறார்கள், இயேசுவைப் பற்றி அறிந்துகொள்கிறார்கள், கல்வி பயில்கிறார்கள். இயேசு சொல்லியிருக்கிறார், அதைச் செய்வதற்கு காலந்தாழ்த்தக்கூடாது என்று ஒருவர் செய்த தீர்மானம்தான் அதற்கெல்லாம் காரணம்.
யாக்கோபு சொல்கிற செய்தி நம் எல்லாருக்குமே பொருந்தும். இயேசு கிறிஸ்துவிலான விசுவாசத்தால் மிகப் பெரிய பல அனுகூலங்களைப் பெற்றிருக்கிறோம். அதாவது, அவரோடு உறவுகொள்ள முடிகிறது, பரிபூரணமான வாழ்க்கையைப் பெறமுடிகிறது, எதிர்காலத்திற்கான நம்பிக்கையைப் பெறமுடிகிறது. ஆனால், உதவி தேவைப்படுவோரைத் தேடிச்சென்று, அவர்களுக்கு உதவாவிட்டால், இவற்றால் ஏதாவது நன்மை இருக்கிறதா? “இப்போது எனக்குப் பசிக்கிறது” என்று மக்கள் அழுவது உங்கள் காதில் விழுகிறதா?
புதிய பார்வை தேவை
“வெறுமனே பச்சைபசேலென்று மங்கலாக ஒரு உருவத்தைப் பார்ப்பதைவிட மரத்தையும் அதன் ஒவ்வொரு இலைகளையும் பார்ப்பது அற்புதமாக இருக்கும்” என்று என் அப்பா சொன்னார். அது எவ்வளவு உண்மையென்பது எனக்குத் தெரியும். அப்போது எனக்கு பதினெட்டு வயது; புதிதாக கண்ணாடி அணிந்திருந்தேன், அது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொன்றையும் ஒரு புதிய விதத்தில் பார்க்கமுடிந்தது; மங்கலாகக் தெரிந்தவை எல்லாம் தெளிவாக அழகாகத் தெரிந்தன!
கண்ணாடி அணியாமல் மரங்களைப் பார்ப்பதுபோலத்தான் சிலசமயங்களில் வேதாகமத்தின் சில புத்தகங்களை வாசிக்கும்போதும் உணர்கிறேன். அவற்றில் அறிந்துகொள்வதற்கு அதிகம் இல்லாததுபோலத் தோன்றுகிறது. ஆனால் சலிப்பூட்டுவதுபோலத் தெரிகிற வசனங்களில் உள்ள விபரங்களைக் கவனிக்கும்போது, ஆச்சரியமான விஷயங்கள் வெளிப்படுகின்றன.
யாத்திராகமப் புத்தகத்தை வாசிக்கும்போது இத்தகைய அனுபவத்தைப் பெற்றேன். இஸ்ரவேலர் மத்தியில் தாம் வாசஞ்செய்வதற்கு தற்காலிகமாக ஆசரிப்புக்கூடாரம் ஒன்றை தேவன் கட்டச்சொல்கிறார். அதன் கட்டுமான விவரங்களைச் சொல்லுகிறார். அதை வாசிக்கும்போது சற்று சலிப்புத் தட்டுகிறது. 25ம் அதிகாரத்தில் குத்துவிளக்கு குறித்த விவரங்களை தேவன் கொடுக்கிறார். அதை சற்று ஆராய்ந்து பார்த்தேன். அதன் தண்டு, கிளைகள், மொக்குகள், பழங்கள், பூக்கள் அனைத்தையும் ‘பசும்பொன்னினால்’ அடிப்புவேலையாய்ச் செய்யச் சொல்லுகிறார். வச 31. அதன் கிண்ணங்கள் “வாதுமை பூக்களை” போல இருக்கவேண்டுமாம். வச 34.
வாதுமை மரங்கள் அற்புதமானவை. அதே இயற்கை அழகு தம்முடைய ஆசரிப்புக்கூடாரத்திலும் காணப்பட தேவன் சொன்னார்!
“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப் பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்” என்று பவுல் எழுதினார். ரோமர் 1:20. தேவனுடைய அழகைக் காண சிலசமயங்களில் சிருஷ்டிப்பையும், சலிப்புத்தட்டுகிற சில வசனங்களையும் புதிய பார்வையோடு பார்க்கவேண்டும்.
சுறாக்களும்கூட கடிக்காமல் இருக்கலாம்
விடுமுறை சயமத்தில் என் பிள்ளைகளை ஒரு நீர்வாழ் காட்சிசாலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அவர்கள் சந்தோஷமாக விளையாடினார்கள், எனக்கு சற்று
கவலையிலிருந்தது. அங்கு விசேஷமாகச் செய்யப்பட்டிருக்கும் தொட்டிகளில் உள்ள சிறிய சுறாக்களிடம் மக்கள் விளையாடலாம். அங்கிருந்த உதவியாளரிடம், அந்தச் சுறாக்கள் எப்போதாவது யாருடைய விரலையாவது கடித்திருக்கின்றனவா என்று கேட்டேன். சுறாக்களுக்கு சற்றுமுன்னரே இரையளித்திருப்பதாகவும், அதுவும் கூடுதலாக இரை கொடுத்திருப்பதாகவும் கூறினார். அவற்றிற்கு பசி இருக்காது என்பதால் கடிக்காது என்றார்.
சுறாக்களுடன் பழகுவது குறித்து நான் கற்றுக்கொண்டதை ஒரு நீதிமொழியும் நினைவூட்டுகிறது: “திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.” நீதி 27:7. பசியானது, அதாவது உள்ளுக்குள் வெறுமையாக இருப்பதுபோன்ற உணர்வானது, நாம் தீர்மானங்களைச் செய்யும்போது நம்முடைய பகுத்தறிவை மழுங்கச்செய்யலாம். அந்த வெறுமையைப் போக்க எதையும் செய்வதற்கு அது நம்மைச் சம்மதிக்கவைக்கிறது, ஏன் அடுத்தவருக்கு அது பாதிப்பையே உண்டாக்கினாலும் செய்யவைக்கிறது.
பசிகள் நம் வாழ்க்கையைக் கட்டுப்படுத்த தேவன் விரும்புவதில்லை. கிறிஸ்துவின் அன்பு நம்மில் நிறைந்திருக்க அவர் விரும்புகிறார், அப்போதுதான் நாம் செய்கிற ஒவ்வொன்றிற்கும் அவர் தருகிற சமாதானமும் உறுதியும் அடித்தளமாக இருக்கும். தேவன் நம்மேல் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறார் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கும்போது, நம்மில் நம்பிக்கை உண்டாகும். சாதனைகள், உடைமைகள், உறவுகள் போன்ற வாழ்க்கையின் “இனிமையான” விஷயங்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க அது நம்மைப் பெலப்படுத்தும்.
இயேசுவோடான உறவு மட்டுமே நமக்கு மெய்யான நிம்மதியைக் கொடுக்கிறது. தேவன் நம்மேல் காட்டுகிற ஈடுஇணையற்ற அன்பை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் “தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட” முடியும். எபேசியர் 3:19.
வழிகளை மாற்றும் தேவன்
மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய தேவன் நமக்கு ஒரு வாசலைத் திறந்திக்கிறார் என்று உணர்ந்தாலும், அந்தச் சமயத்தில் 'வேண்டாம்," அல்லது 'இப்போது வேண்டாம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்னுடைய ஊழியக்காலத்தின் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகள் எனக்கு வந்தன் இரண்டுமே என்னுடைய திறமைகள், வரங்கள் மூலம் சபையின் தேவைகளைச் சந்திப்பதற்கேற்ற வாய்ப்புகள்தாம். ஆனால், கடைசியில் இரண்டு வாசல்களுமே அடைபட்டன. இந்த ஏமாற்றமான
அனுபவங்களுக்கு பிறகு, இன்னொரு பொறுப்பு தேடி வந்தது; அதற்கு நான் தேர்வுசெய்யப்பட்டேன். அந்த ஊழிய அழைப்புமூலம் வாழ்க்கையை மாற்றத்தக்க ஊழியங்களை பதின்மூன்று வருடங்கள் செய்ய முடிந்தது.
அப்போஸ்தலர் 16ல், பவுலையும் அவரோடு இருந்தவர்களையும் இரண்டுமுறை தேவன் தடைசெய்து, வேறுபக்கம் அனுப்புகிறார். முதலாவது அவர்கள், 'ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்கள்" (வச. 6). பிறகு அவர்கள், 'மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்" (வச. 7). தம்முடைய ஊழியத்திற்கும், ஊழியக்
காரர்களுக்கும் எது சரியாக இருக்கும் என்பது தேவனுக்குத் தெரியும், அது அவர்களுக்குத் தெரியாது. முந்தின திட்டங்களை தேவன் தடைசெய்ததால்தான், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கமுடிந்தது, தேவனுடைய உறுதியான வழிநடத்துதலைப் பெறமுடிந்தது (வச. 9-10).
இது உண்மையிலேயே பெரிய இழப்புதான் என்கிற எண்ணம் முதலில் வந்ததுமே யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் போகும்போதும், செய்த வேலைக்கு போதுமான வருமானம் கிடைக்காதபோதும், வேறிடத்திற்கு மாறவேண்டும் என்கிற எண்ணம் தடைபடும்போதும் பெரிய வேதனையாக இருக்கும். இத்தகைய விஷயங்கள் அந்த நேரத்தில் நமக்கு அதிக மனப்பாரத்தைக் கொடுக்கலாம்;. ஆனால், அவை உண்மையிலேயே தேவன் மாற்றிவிட்ட பாதைகள் என்பதும், தாம் விரும்புகிற இடத்தில் நம்மை வைப்பதற்கு தேவன் கிருபையாகக் கையாண்ட வழிகள் என்பதும் பிறகுதான் தெரியவரும்; அப்போது நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம்.
கயிற்றை அவிழ்த்துவிடுங்கள்
மன்னிப்பதால் கிடைக்கிற சுகத்தை எல்லாரும் அறிந்துகொள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் முயன்று வருகிறார்கள். அந்த ஊழியத்தின் ஒரு பகுதியாக குறுநாடகம் ஒன்றை நடத்துவார்கள். அதில், தவறுசெய்த ஒருவரையும் அவரால் பாதிக்கப்பட்டவரையும் முதுகோடு முதுகாகச் சேர்த்துக் கட்டிவிடுவார்கள். அந்தக் கட்டிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்தான் கட்டை அவிழ்க்கவேண்டும். அவர் எவ்வளவுதான் முயன்றாலும் கட்டை அவிழ்க்க முடியாது; கட்டை அவிழ்க்காமல் தப்பிக்கவும் முடியாது.
தாங்கள் தவறுசெய்துவிட்டதாக ஒருவர் நம்மிடம் வந்து வருத்தம் தெரிவிக்கும்போது, அவரை மன்னிக்கவேண்டும். அப்போதுதான் நாம் அனுபவித்த வேதனை, கசப்பிலிருந்து நம்மையும் நம்மைப் பாடுபடுத்தியவரையும் விடுவித்துவிட முடியும். ஏசாவின் சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபு ஏமாற்றி வாங்கிவிட்டார், அதன்பிறகு இரு சகோதரர்களும் இருபது வருடங்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்தச் சம்பவத்தை ஆதியாகமத்தில் வாசிக்கலாம். பல வருடங்கள் கடந்த நிலையில், பிதாக்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்செல்லும்படி யாக்கோபிடம் தேவன் கூறுகிறார். ஆதி 31:3. யாக்கோபு உடனே கீழ்ப்படிந்தார்; ஆனால், அதற்கு முன்னரே ஏராளமான மிருக ஜீவன்களை வெகுமானமாக ஏசாவுக்கு அனுப்பிவைக்கிறார். ஆதி 32:13-15. சகோதரர்கள் இருவரும் சந்தித்த போது, ஏழுவிசை தன் சகோதரனை குனிந்து, வணங்குகிறார். ஆதி 33:3. ஏசா ஓடிச்சென்று, தன் சகோதரனைக் கட்டியணைக்கிறார்; மீண்டும் சேர்ந்ததை எண்ணி, இருவரும் அழுகிறார்கள் (வச. 4). தன் சகோதரனுக்கு விரோதமாக தான் செய்த பாவத்தின் பிடியிலிருந்து இப்போது யாக்கோபு விடுவிக்கப்பட்டார்.
மன்னிப்பு வழங்கமுடியாமல் சிறைபட்டிருக்கிறீர்களா? கோபத்தையும் பயத்தையும் அல்லது அவமானத்தையும் அகற்றமுடியாமல் தவிக்கிறீர்களா? நீங்கள் உதவிகேட்டால், தேவன் தம்முடைய குமாரன் மூலமாகவும் ஆவியானவர் மூலமாகவும் உங்களை விடுவிப்பார். எப்படிப்பட்ட கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும் கட்டை அவிழ்ப்பதற்கான செயல்முறையைத் துவங்குவதற்கு அவர் பெலன் தருவார்; அப்போது நீங்கள் விடுதலைபெறலாம்.
உங்களுடைய புகழ்ச்சி
உண்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணுடைய அடக்க ஆராதனைக்குச் சென்றிருந்தேன். ஏதோ மனதில் ஒரு நிறைவு. அந்தப் பெண் பிரபலமான நபர் அல்ல. சபையார், அக்கம்பக்கத்தார், நண்பர்கள் என்கிற வட்டத்திற்குள் வாழ்ந்தவர், அதைத் தாண்டி வேறு யாருக்கும் அவரைத் தெரியாது. ஆனால் இயேசுவையும், தன்னுடைய ஏழு பிள்ளைகளையும், இருபத்தைந்து பேரப்பிள்ளைகளையும் மிகவும் நேசித்தார். எப்போதும் சிரித்தமுகத்துடன் இருப்பார், எல்லாரையும் அன்பாக விசாரிப்பார், உடல் திடகாத்திராமா இருந்தார்.
“விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்” என்று பிரசங்கி சொல்கிறது. பிர 7:2. “ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்,” ஏனென்றால், வாழ்க்கையில் எது முக்கிய மென்பதை அங்கே அறிந்துகொள்ளலாம் (7:4). நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் கட்டுரையாளரான டேவிட் புரூக்ஸ், இரண்டுவித நல்லதன்மைகள் இருப்பதாகக் கூறுகிறார். ஒன்று, சுயவிபரப் பட்டியலில் சொல்லப்படுவது, இரண்டாவது, ஒருவருடைய அடக்க ஆராதனையின்போது சொல்லப்படுவது. சிலசமயங்களில் சுயவிபரப்பட்டியலில் உள்ளதுபோலவே அடக்கஆராதனையில் சொல்லப்படும், சில சமயங்களில் எங்காவது ஓரிடத்தில்தான் அவ்வாறு சொல்லப்படும் சந்தேகப்படும் நேரத்தில். புகழைத்தருகிற நல்ல குணங்களைத்தான் தேர்ந்தெடுங்கள்.
அந்தப் பெண்ணுக்கு சுயவிபரப் பட்டியலெல்லாம் கிடையாது. ஆனால் அவர் “நீதிமொழிகள் 31ன் ஸ்திரிபோல வாழ்ந்தவர்” என்று அவருடைய பிள்ளைகள் கூறினார்கள். தேவ பக்தியுள்ள ஒரு ஸ்திரியைப் பற்றி அங்கு சொல்லப்பட்டுள்ளது. பிள்ளைகள் இயேசுவிடம் அன்புகூரவும், மற்றவர்களை நேசிக்கவும் அவர் ஓர் ஊக்கசக்தியாக இருந்தார். “நான் கிறிஸ்துவைப்
பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்” என்று பவுல் சொன்னதுபோல, தங்களுடைய அம்மாவைப் போல ஒவ்வொருவரும் வாழவேண்டும் என்று சொன்னார்கள்.
உங்களுடைய அடக்க ஆராதனையில் என்ன சொல்லுவார்கள்? என்ன சொல்லப்பட விரும்புகிறீர்கள்? புகழ்தருகிற தன்மைகளை வளர்க்க காலம் பிந்தவில்லை. இயேசுவில் இளைப்பாறுங்கள். அவர் நமக்கு இலவசமாக இரட்சிப்பைத் தந்து நாம் எவ்வாறு வாழவேண்டும் என்று காட்டுகிறார்..