உண்மையாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? முக்கியமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயல்கிறது, த வெல்வடீன் ரேபிட் என்கிற ஒரு சிறுவர் கதை. ஒரு சிறுவனுக்கு பல பொம்மைகள் இருக்கின்றன, அவற்றில் வெல்வெட் துணியால் செய்யப்பட்ட ஒரு முயல் பொம்மையும் உண்டு; அது அந்தச் சிறுவன் தன்னை நேசித்து, அதன் மூலம் தான் உண்மையான முயலாக மாறுவதற்கு முயற்சியெடுக்கிற பயணம்தான் அந்தக் கதை. அந்தப் பொம்மைகளில் துணியாலான ஒரு குதிரைபொம்மையும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றிலும் பழையது, அறிவானது. அது “புதுப்புது எந்திரப் பொம்மைகள் வருவதையும், அவை பெருமையாகத் தம்பட்டம் அடித்து, பிறகு உடைந்து, தூரே எறியப்படுவதையும் பார்த்திருக்கிறது.”  அந்தப் பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அட்டகாசமாகத் தான் இருந்தன; ஆனால், அன்புக்கு எதிரே அவற்றின் பெருமையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

வீறாப்புடன் துவங்குகிற பெருமை போகப்போக ஆட்டம் கண்டுவிடும். மூன்று விஷயங்களில் இந்த உண்மையைக் காணமுடியுமென எரேமியா பட்டியலிடுகிறார். “ஞானம்… பராக்கிரமம்… ஐசுவரியம்.”
(எரே. 9:23). ஞானமுள்ள அந்த முதிய தீர்க்கதரிசி, தன்னுடைய காலத்திலேயே இவற்றில் ஒன்று இரண்டு உண்மைகளை தன் கண்ணாலேயே கண்டிருக்கலாம். அதனால்தான் அவ்வாறு பெருமைபாராட்டுவதற்கு பதிலாக ஆண்டவருடைய சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி கூறுகிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.” (வச. 24).

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய நல்ல பிதாவாகிய தேவனைப் பற்றியே பெருமைபாராட்டக்கடவோம். அவருடைய மாபெரும் அன்பு எவ்வளவுக்கு நம் அறிவுக்குப் புலப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக உண்மையானவர்களாக நாம் வளரமுடியும்.