வகை  |  odb

வாழ்க்கை மிகவும் குறுகியதே

மரணம் மோசமான ஒரு நிஜம். நம் வாழ்நாளோ மிகவும் குறுகியது. பாபி மரித்தபோதுதான் இந்த உண்மை எனக்கு பளிச்செனத் தெரிந்தது. அவள் என்னுடைய சிறுபிராயத் தோழி, இருபத்து நான்கு வயதுதான், பனிமூடிய சாலையில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் அவள் பலியானாள். பிரச்சனைமிக்க ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான் அவளுடைய வாழ்க்கை சற்றே பசுமையாகி வந்தது. இயேசுவையும் அவள் ஏற்றுக்கொண்டு சிலகாலம்தான் ஆகிறது. இவ்வளவு சீக்கிரத்தில் அவள் ஏன் மரிக்கவேண்டும்?

வாழ்க்கை மிகவும் குறுகியதாகவும், முற்றிலும் வருத்தம் நிறைந்ததாகவும் சிலசமயங்களில் மாறிவிடுகிறது. சங்கீதம் 39 இல் தன்னுடைய பாடுகளை நினைத்து புலம்புகிறார் தாவீது; “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” என்று சொல்கிறார். (வச. 4-5). வாழ்க்கை குறுகியது. நாம் நூறு வருடங்கள் வாழ்ந்தாலும் என்ன, ஒட்டுமொத்த காலங்களோடும் ஒப்பிடும்போது பூமியில் நம் வாழ்க்கை ஒரு துளியளவுகூட வராதே!

தாவீதோடு சேர்ந்து நாமும் “நீரே (கர்த்தரே) என் நம்பிக்கை” என்று சொல்லலாம். வசனம் 7. நாம் வாழ்வதில் அர்த்தமிருக்கிறது என்று நம்பலாம். நம்முடைய மாமிசம் அழுகி, ஒன்றுமில்லாமல் போனாலும், “உள்ளான மனுஷன் நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறான்” என்றும், ஒருநாளில் அவரோடு நாம் நித்தியமாக வாழப்போகிறோம் என்றும் உறுதியாக விசுவாசிக்கலாம். 2கொரிந்தியர் 4:16-5:1.  இவ்வாறு நிச்சயம் நடக்குமென்று “ஆவியென்னும் அச்சாரத்தை” தேவன் நமக்குத் தந்திருக்கிறார். 2கொரிந்தியர் 5:5.

எதைக் குறித்துப் பெருமைபாராட்டலாம்?

உண்மையாக இருப்பது என்றால் என்ன அர்த்தம்? முக்கியமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முயல்கிறது, த வெல்வடீன் ரேபிட் என்கிற ஒரு சிறுவர் கதை. ஒரு சிறுவனுக்கு பல பொம்மைகள் இருக்கின்றன, அவற்றில் வெல்வெட் துணியால் செய்யப்பட்ட ஒரு முயல் பொம்மையும் உண்டு; அது அந்தச் சிறுவன் தன்னை நேசித்து, அதன் மூலம் தான் உண்மையான முயலாக மாறுவதற்கு முயற்சியெடுக்கிற பயணம்தான் அந்தக் கதை. அந்தப் பொம்மைகளில் துணியாலான ஒரு குதிரைபொம்மையும் இருக்கிறது. அதுதான் எல்லாவற்றிலும் பழையது, அறிவானது. அது “புதுப்புது எந்திரப் பொம்மைகள் வருவதையும், அவை பெருமையாகத் தம்பட்டம் அடித்து, பிறகு உடைந்து, தூரே எறியப்படுவதையும் பார்த்திருக்கிறது.”  அந்தப் பொம்மைகள் எல்லாம் பார்ப்பதற்கு அட்டகாசமாகத் தான் இருந்தன; ஆனால், அன்புக்கு எதிரே அவற்றின் பெருமையெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விட்டது.

வீறாப்புடன் துவங்குகிற பெருமை போகப்போக ஆட்டம் கண்டுவிடும். மூன்று விஷயங்களில் இந்த உண்மையைக் காணமுடியுமென எரேமியா பட்டியலிடுகிறார். “ஞானம்... பராக்கிரமம்... ஐசுவரியம்.”
(எரே. 9:23). ஞானமுள்ள அந்த முதிய தீர்க்கதரிசி, தன்னுடைய காலத்திலேயே இவற்றில் ஒன்று இரண்டு உண்மைகளை தன் கண்ணாலேயே கண்டிருக்கலாம். அதனால்தான் அவ்வாறு பெருமைபாராட்டுவதற்கு பதிலாக ஆண்டவருடைய சத்தியத்தை அறிந்துகொள்ளும்படி கூறுகிறார்: “மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்.” (வச. 24).

தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்முடைய நல்ல பிதாவாகிய தேவனைப் பற்றியே பெருமைபாராட்டக்கடவோம். அவருடைய மாபெரும் அன்பு எவ்வளவுக்கு நம் அறிவுக்குப் புலப்படுகிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக உண்மையானவர்களாக நாம் வளரமுடியும்.

தலைக்கு பின்புறமும் கண்கள் உண்டு

என் சிறுபிராயத்தில், மற்ற சிறுவர்கள் போலவே நானும் ஒரு குறும்புக்கார சிறுமிதான். யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் திருட்டுத்தனமாக சேட்டைசெய்வேன். ஆனாலும் அம்மாவிடம் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று. என் குறும்புத்தனங்களை சரியாகவும், உடனடியாகவும் அம்மா கண்டுபிடிப்பார், எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உண்மை எப்படி அம்மாவுக்குத் தெரிகிறது என்கிற பிரமிப்போடு அவரிடம் அதுபற்றிக் கேட்பேன்; உடனே அவர் “தலைக்கு பின்புறமும் எனக்கு கண்கள் உண்டு” என்று சொல்வார். அதனால் அம்மா திரும்பி நிற்கிற சமயங்களில் எல்லாம் கண்களைத் தேடிப்பார்த்திருக்கிறேன். ‘என்னுடைய பார்வைக்கு அந்தக் கண்கள் தெரியாதோ, அம்மாவின் சிவப்புநிற முடிகளுக்குள் கீழ் மறைந்திருக்குமோ?’ என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். நான் வளர்ந்தபிறகு, கண்களைத் தேடுவதை நிறுத்தினேன். அம்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது. அதாவது அவ்வளவுக்கு அவர் தன் பிள்ளைகளைக் கவனித்திருக்கிறார். அன்போடு தன் பிள்ளைகள்மேல் அவர் காட்டிய அக்கறைதான் அதற்கு காரணம்.

அம்மாவின் அன்பான கவனிப்புக்கு நான் நன்றிசொல்ல வேண்டும் (அம்மாவிடம் மாட்டிக்கொள்ளாமல் ஒரு குறும்புத்தனம்கூட செய்யமுடியவில்லையே என்று அவ்வப்போது நான் நினைப்பதும் உண்டு.) ஆனால், பரேலாகத்திலிருந்து தேவன் நம்மைப் பார்க்கிறார் , “எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்” என்பது அவர்மேல் மிகுந்த நன்றியுணர்வை உண்டாக்குகிறது (சங். 33:13). நாம் செய்கிறவற்றை மட்டுமல்ல, அதற்கும் அதிகமாக அவருக்குத் தெரியும். நம்முடைய வருத்தங்கள், சந்தோஷங்கள், ஒருவர்மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு என அனைத்தையும் அவர் அறிவார்.

தேவன் நம்முடைய மெய்யான குணத்தைப் பார்த்து, நமக்கு இன்னும் என்ன தேவைப்படுகிறது என்பதை மிகசரியாக அறிகிறார். நம்முடைய இருதயங்களின் உள்ளிந்திரியங்களையும் காண்கிற அளவுக்கு ஊடுருவி பார்க்க வல்லவர், தம்மேல் அன்புகூர்ந்து, தம்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள்மேல் கண்ணோக்கமா யிருக்கிறார் (வச. 19). நம்மேல் அன்பும் அக்கறையும் வைத்திருக்கும் பிதா அவர்.

சிறையிருப்பிலும் உண்மை

1948ம் வருடம், ஒருநாள் காலை வேளையில் வீட்டின் அழைப்புமணி ஒலிக்கவே, கதவைத் திறந்த ஹரலன் பாபோவ் என்பவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் வாழ்க்கை ஓட்டம் மாறப்போவதை அப்போது அவர் உணர்ந்திருக்கவில்லை. ஏனென்றால் அங்கு வந்திருந்தது பல்கேரிய காவலர்கள். ஹரலனுடைய விசுவாசத்தின் நிமித்தம் அவரைக் கைதுசெய்து, சிறையில் அடைத்தார்கள். அதன்பிறகு பதின்மூன்று வருடங்கள் சிறையில் கழித்தார், தனக்கு பெலத்தையும் தைரியத்தையும் தரும்படி தேவனிடம் ஜெபித்துக்கொண்டே இருந்தார். சிறையில் கொடுமை அனுபவித்தார். ஆனாலும் தேவன் தன்னோடு இருக்கிறார் என்கிற நிச்சயம் இருந்தது. இயேசுவைப் பற்றிய நற்செய்தியை சகக்கைதிகளிடம் பகிர்ந்துகொண்டார். அநேகர் விசுவாசித்தார்கள்.

இதே கதைதான் யோசேப்புக்கும். கோபங்கொண்ட தன் சகோதரர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி தன்னை எகிப்துக்குச் சென்றுகொண்டிருந்த வியாபாரிகளிடம் விற்றபோது, தன் வாழ்க்கை ஓட்டம் எப்படி இருக்குமென அவருக்கும் தெரியவில்லை. அந்த வியாபாரிகள் யோசேப்பை போத்திபார் என்கிற ஓர் எகிப்திய அதிகாரியிடம் விற்றார்கள். பலதெய்வ நம்பிக்கையுடைய மக்கள்  வாழ்ந்துவந்த ஒரு கலாச்சாரத்தில் வாழவேண்டியதாயிற்று. போதாக் குறைக்கு, போத்திபாரின் மனைவி யோசேப்பை மயக்கப்  பார்க்கிறாள். எவ்வளவோ முயன்றும் யோசேப்பு இடம் கொடுக்கவே இல்லை. உடனே பொய்க்குற்றச்சாட்டைச் சுமத்துகிறாள். அதனால் சிறையில் அடைக்கப்படுகிறார் யோசேப்பு. ஆதியாகமம் 39:16-20. ஆனாலும் தேவன் அவரைக் கைவிடவில்லை. யோசேப்போடே தேவன் இருந்தார். அதுமட்டுமல்ல, “அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப் பண்ணி(னார்).” மேலும், அதிகாரிகளின் “தயவு கிடைக்கும்படி செய்தார்” (39:3,21).

யோசேப்பு எவ்வளவு பயத்தில் இருந்திருப்பார் என்று சொல்லவேண்டியதில்லை!  ஆனாலும் உண்மையோடிருந்தார், ஒழுக்கம் தவறவில்லை. அந்த இக்கட்டான பயணத்தில் யோசேப்போடே தேவன் இருந்தார், யோசேப்புக்கு ஒரு மகத்தான திட்டத்தையும் வைத்திருந்தார். உங்களைக் குறித்தும் அவருக்கு ஒரு திட்டம் உண்டு. தைரியமாக இருங்கள், விசுவாசத்தோடு நடந்துகொள்ளுங்கள், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார், எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நம்புங்கள்.

காலந்தாழ்த்துவதே இல்லை

என்னுடைய மாமியாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் அனைவருமே மிகுந்த பதட்டத்திற்குள்ளானோம். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கமுடிந்தது. பிறகு மருத்துவரிடம் பேசியபோது, மாரடைப்பு வந்ததும் 15 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்தால் அபாயக்கட்டம் நீங்கி 33 சதவீதம்பேர் பிழைப்பதாகச் சொன்னார். 15 நிமிடங்களுக்கு பிறகு சிகிச்சை எடுப்பவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே பிழைக்கிறார்களாம்.

யவீருவின் மகள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தாள் (உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது), அவளைக் குணமாக்குவதற்காகச் சென்றுகொண்டிருந்த இயேசு, யாருமே யோசித்திராத வகையில் இடையில் நின்றுவிட்டார் (மாற். 5:30). தம்மைத் தொட்டது யார் என்பதை அறியும்படி நின்றார், தம்மைத் தொட்ட பெண்ணிடம் அன்புடன் பேசினார். யவீரு என்ன யோசித்திருப்பார்? ‘என் மகள் மரிக்கப்போகிறாள், இந்த நேரத்தில் இப்படி காலதாமதமாகிறதே?’ இயேசு அங்கு வெகுநேரம் நின்றுவிட்டார் போலும், யவீரு பயந்ததுபோலவே நடந்தது; அவனுடைய மகள் மரித்துப்போனாள். வசனம் 35.

ஆனால் இயேசு யவீருவிடம் திரும்பி, அவனுக்கு ஆறுதலான ஒரு வார்த்தையைக் கூறுகிறார்: “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” (வச. 36). பிறகு யவீருவின் வீட்டிற்குச் சென்றதும் தன்னைப் பரிகாசமாகப் பார்த்த யாரையுமே பொருட்படுத்தாமல், யவீருவின் மகளைப் பார்த்து, அவளை எழுந்திருக்கச் சொல்லி, மீண்டும் உயிரோடு கொண்டுவந்தார்! ஒருபோதும் தாம் காலதாமதம் பண்ணுவதில்லை என்பதை அங்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் வல்லமைக்கும், அவர் செய்யத் தீர்மானித்திருப்பதற்கும் காலம் தடைபோடவே முடியாது.

நான் நம்பியிருந்தபடி செய்யாமல் தேவன் காலந்தாழ்த்திவிட்டாரே என்று எத்தனை நேரம் யவீருவைப் போல நாமும் நினைத்திருப்போம். ஆனால் அவ்வாறு ஒருபோதும் செய்யமாட்டார். நம்முடைய வாழ்க்கையில் தம்முடைய நன்மையான, இரக்கமான கிரியைகளை நிறைவேற்ற அவர் காலந்தாழ்த்தவே மாட்டார்.