“உன்னை நேசிக்கின்றேன்—முழு உலகளவிற்கு”
என்னுடைய உறவினளான, மூன்று வயது ஜென்னா வெளிப்படுத்தும் ஒரு காரியம் என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒரு வாழைப்பழ கிரீம் பை, டிராம்பொலின் விளையாட்டு அல்லது ஃப்ரிஸ்பீ விளையாட்டு, ஏதோ ஒன்றை அவள் மிகவும் நேசித்தால், அதை வெளிப்படுத்த “உலகளவுக்கு உன்னை நேசிக்கின்றேன்” என்று தன் கரங்களை விரித்து அசைத்து தெரிவிப்பாள்.
இந்த அளவுக்கு நான் எதையாகிலும் நேசித்திருக்கின்றேனா என்று நான் நினைத்துப் பார்த்ததுண்டு. அப்படி ஒன்றும் நினைவிலில்லை.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” (1 யோவா. 4:8,16) என யோவான் திரும்பத் திரும்ப எழுதுகின்றான். நம்முடைய கோபம்,பயம் அல்லது வெட்கம் போல அல்லாமல் உண்மையின் ஆழ்ந்த அடித்தளமாகிய, தேவனுடைய அன்பை, வளர்ந்தவர்களாகிய நமக்கு புரிந்து கொள்வது கடினமாயிருக்கின்றது. எதைக் குறித்து நாம் மிகவும் அஞ்சுகின்றோமோ அதன் அடிப்படையில், இவ்வுலகு நம்மை சில குழுக்களாக பிரித்து வைத்துள்ளது. நாம் எதை உண்மை எனக்கருதுகின்றோமோ அதைக் குறித்து எச்சரிக்கின்ற குரலை நாம் அலட்சியப்படுத்தி, அல்லது குற்றப்படுத்தி விட்டு, நாம் ஏதோ ஒன்றில் இணைந்து விடுகிறோம்.
வஞ்சகங்கள், அதிகார போராட்டங்களின் மத்தியில், தேவனுடைய அன்பு, இருளில் பிரகாசிக்கின்ற ஒளியாக, நம்மை தாழ்மை, நம்பிக்கை, மற்றும் அன்பின் பாதையைக் கற்றுக் கொள்ளும் படி, அழைக்கின்றது. (1:7-9; 3:18) .இந்த ஒளி காட்டும் உண்மைகள் வருத்தத்தை தருவதாக இருந்தாலும், நாம் இன்னும் நேசிக்கப்படுகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம் (4:10,18; ரோம. 8:1). ஜென்னா என் மீது சாய்ந்து கொண்டு, மென்மையாக என்னுடைய காதுக்குள் “உலகளவுக்கு உன்னை நேசிக்கிறேன்” என்றாள், நானும் “நான் உன்னை உலகளவு நேசிக்கிறேன்” என்றேன். ஒவ்வொரு கணமும் நான் அளவற்ற அன்பிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இருப்பதை நினைப்பதற்கு கிடைத்த தருணத்திற்காக நன்றி கூறுகிறேன்.

ஒரு போதும் நம்பிக்கையை இழக்காதே
என்னுடைய சிநேகிதியின் மருத்துவ அறிக்கை, அவளுக்கு புற்று நோய் என்று தெரிவித்த போது, அவளுடைய காரியங்களை ஒழுங்கு படுத்தும் படி மருத்துவர் ஆலோசனை கூறினார். தன்னுடைய கணவனையும்,சிறு குழந்தைகளையும் நினைத்து கவலை கொண்டவளாய், அழுகையோடு என்னை அழைத்தாள். நான், அவளுடைய அவசர ஜெபத் தேவையை என்னுடைய மற்ற நண்பர்களுக்கும் தெரிவித்தேன். மற்றொரு மருத்துவர் அவள் நம்பிக்கையை விடாதிருக்குமாறு அவளை ஊக்கப்படுத்தியதோடு, அவருடைய குழுவினர், அவளுக்குத் தேவையான அனைத்து உதவியையும் செய்வதாகவும் வாக்களித்தைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். சில நாட்கள் கடினமானதாக இருந்த போதிலும், தனக்கு எதிராக நடந்த காரியங்களை யெல்லாம் தள்ளி விட்டு, தேவனையே நோக்கிப் பார்த்தாள். தன் நம்பிக்கையை விடாதிருந்தாள்.
என்னுடைய சிநேகிதியின் விடாப்பிடியான நம்பிக்கை, லூக்கா 8ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, மனிதரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணை எனக்கு நினைவு படுத்துகின்றது. பன்னிரண்டு ஆண்டுகளாக சகித்து வந்த வேதனையால் சோர்வுற்று, ஏமாற்றமடைந்து, புறக்கணிக்கப்பட்ட அவள், இயேசுவின் பின் பக்கமாக வந்து, தன் கையை நீட்டி, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவளுடைய விசுவாசத்தினாலும், இயேசுவின் பேரில் கொண்டிருந்த விடாப்பிடியான நம்பிக்கையாலும், மனிதரால் கொடுக்கமுடியாத சுகத்தை, சூழ்நிலைகள் அவளுக்கு எதிராக அமைந்த போதிலும் உடனேப் பெற்றுக் கொண்டாள் (வச. 43-44).
நாம் முடிவில்லாத வேதனைகளை அநுபவித்துக் கொண்டிருக்கலாம், சூழ்நிலைகள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்யலாம், காத்திருத்தல் தாங்க முடியாததாக இருக்கலாம், நமக்கு எதிரான காரியங்கள் தொடர்ந்து பெரிதாகிக் கொண்டேயிருக்கலாம், நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்திருந்தும், நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் சுகத்தை இன்னும் பெறாமலிருக்கலாம். எதுவாயினும், இயேசு நம்மை அவரண்டை வரவும், அவர் மீது விசுவாசமாயிருக்கவும் அழைக்கின்றார். அவராலே கூடும் எனவும், அவர் நம்பத்தகுந்தவர், நம்மருகிலிருக்கிறார் என்பதையும் நம்பும் படியும் அழைக்கின்றார்.

அடுத்த காரியத்தை உடனே செய்
சமீபத்தில், எப்பொழுது பிறருக்கு உதவும் படி உணர்ந்தாய்? அத்தகைய சந்தர்ப்பத்தில் செயல்படாமல் இருந்து விட்டாயா? கிளார் டி கிராஃப் தரும் 10 வினாடி சட்டத்தில், நம்முடைய வாழ்வில் கொடுக்கப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பமும், ஆவியில் அவரோடு நெருங்கி வாழவும், அவருடைய அன்பினால் கீழ்படிதலுள்ள வாழ்வுக்கு நம்மை அழைக்கும் தேவனுடைய வழிகள் என குறிப்பிடுகின்றார். மேலும், இந்த 10 வினாடி சட்டம் கூறுவது, ”நீ இதைச் செய்யும் படி இயேசு விரும்புகின்றார் என்பதை திட்டமாக உணரும் போது, அதை உடனே செய், உன்னுடைய மனது மாறுவதற்கு முன்பு செய்து விடு” என்பதாகும்.
“ நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்” என்று இயேசு கூறுகின்றார் (யோவா. 14:15) நான் இயேசுவை நேசிக்கிறேன், ஆனால், இது அவருடைய சித்தம், இதனை நான் பின்பற்ற வேண்டும் என்பதனை நான் எப்படி உறுதியாகக் கூற முடியும்? என்று நாம் நினைக்கலாம். வேதாகமத்தில் நாம் காணும் ஞானத்தை நாம் புரிந்து கொண்டு அதன் படி நடக்கத் தேவையான ஞானத்தை இயேசு தருகின்றார். அவர், “நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” (வச. 16) பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணி, நமக்குள்ளே இருப்பதால், நாம் இயேசுவுக்கு கீழ்ப்படிய கற்றுக் கொள்கின்றோம், அவருடைய “கற்பனைகளையும் கைக் கொள்வோம்” (வச. 15) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்கு போதித்து, பிதா கூறிய எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார் (வச. 26).
பிதாவை கனப்படுத்தும் பெரிய காரியங்களையும், சிறிய காரியங்களையும் விசுவாசத்தோடு தைரியமாக செய்யும் படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்கப்படுத்துவார், இதன் மூலம் நாம் பிதாவிடமும், மற்றவர்களிடமும் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவோம். (வச. 21).

இனி பயமில்லை
எத்தியோப்பியாவில் ஏழு மனிதர்கள் சேர்ந்து, ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை, காட்டுக்குள் கடத்திச் சென்று, துன்புறுத்தினர். அவளுடைய கூக்குரலைக் கேட்ட ஒரு சிறு சிங்கக் கூட்டம், ஓடி வந்து, கடத்தல் காரர்களைத் துரத்தி விட்டு, அவளைப் பாதுகாத்தது. எத்தியோப்பியா காவல் துறையினர், ஏழு நாட்கள் கழித்து அவளைக் கண்டு பிடித்த போது, மூன்று கருப்பு பிடரி முடியைக் கொண்ட சிங்கங்கள், அவளைக் காவல் காத்துக் கொண்டிருந்தன. காவல் துறையினரைக் கண்ட சிங்கங்கள், அவளை அவர்களுக்கு ஒரு பரிசாக விட்டு விட்டு, ஓடி மறைந்தன. காவல் துறை சார்ஜென்ட் வொண்டிமு, இதனை ஒரு பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
இந்த இளம்பெண்ணிற்கு ஏற்பட்டதைப் போன்று வன்முறைகளும், தீமைகளும் நம்மையும் மேற்கொள்ளலாம், நம்பிக்கையற்ற நிலையில் பயங்கரத்துக்குள் நம்மை கொண்டு செல்லலாம். முற்காலத்தில், யூத ஜனங்கள் இத்தகைய நிலையில் தான் இருந்தனர். மூர்க்கமான படைகளால் கவிழ்த்துப் போடப்பட்டனர். தப்பிக் கொள்ள ஒரு வழியும் இல்லாதிருந்தது. பயம் அவர்களைக் கவ்விக் கொண்டது. தேவன் தனது மாறாத பிரசன்னத்தை தம் ஜனங்களுக்கு மீண்டும் கொடுத்தார். “இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்” (செப். 3:15) நம்முடைய சொந்த கலகங்களால், நாம் குழப்பங்களை உருவாக்கிக் கொண்டாலும் தேவன் நம்மை மீட்க வருகின்றார்.” உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்” (வச. 17).
சோதனைகள் நம்மை மேற்கொள்ளும் போதும், என்ன துன்பம் வந்தாலும் யூதா கோத்திரத்துச் சிங்கம், இயேசு நம்மோடிருக்கிறார். (வெளிப்படுத்தல் 5:5) நாம் தனித்து விடப்பட்டாலும் நம்முடைய வல்லமையுள்ள ரட்சகர் நம்மோடிருக்கின்றார். எத்தகைய பயம் நம்மை ஆழ்த்தினாலும் தேவன் நம்மோடிருப்பதாக வாக்களித்துள்ளார்.

புதுமையான சமுதாயம்
லண்டன் பட்டணத்திலுள்ள டேட் நவீன அருங்காட்சியகத்தை நான் பார்வையிட்ட போது, ஒரு வித்தியாசமான கலை என் கண்களைக் கவர்ந்தது. இதனை பிரேஸில் நாட்டைச் சேர்ந்த சில்டோ மெரெல்ஸ் என்பவர் உருவாக்கினார். நூற்றுக்கணக்கான பழைய ரேடியோக்களால் உருவாக்கப்பட்ட இராட்சத கோபுரம் அது. ஒவ்வொரு ரேடியோவும் வெவ்வேறு அலைவரிசையில் செயல் பட்டுக்கொண்டிருந்தது. மொத்தத்தில், யாராலும் புரிந்துகொள்ள முடியாத, விரும்பத்தகாத, குழப்பமான ஓசையை உருவாக்கிக் கொண்டிருந்தது. மெரெல்ஸ், இந்த கலை கோபுரத்தை பாபேல் என்றழைத்தார்.
தலைப்பு பொருத்தமானது தான். வானத்தைத் தொடும் அளவுக்கு, முதல் பாபேல் கோபுரத்தை கட்டுவதற்கு மனிதன் முயற்சித்தபோது, தேவன் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கி, அதை தடைபண்ணிப் போட்டார் (ஆதி. 11:1-9). ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாத படியால், அவர்கள் பூமிமீதெங்கும் சிதறிப்போனார்கள். பாஷையின் அடிப்படையில் மனிதகுலம் பிரிவடைந்தது. (வச. 10-26) அதிலிருந்து ஒருவரையொருவர் புரிந்து கொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த கதையின் இரண்டாம் பகுதியில், பெந்தெகொஸ்தே நாளில், முதல் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட போது, அந்நாட்களில் எருசலேமிற்கு வந்திருந்த வெவ்வேறு ஜனங்களின் பாஷைகளில் தேவனைத் துதிக்கும் படி செய்தார் (அப். 2:1-12). இந்த அற்புதத்தின் மூலம், அங்கு கூடிவந்திருந்த வெவ்வேறு நாட்டினரும், வெவ்வேறு பாஷையினரும் அந்த செய்தியை கேட்க முடிந்தது. அன்று பாபேலில் ஏற்பட்ட குழப்பம், இங்கு அதற்கு மாறாய் நடந்தது.
இன, மற்றும் கலாச்சார அடிப்படையில் பிரிந்து காணப்படும் இவ்வுலகிற்கு இது ஒரு நல்ல செய்தி. இயேசு கிறிஸ்துவின் மூலம், தேவன் சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து வந்த ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குகின்றார்.(வெளிப்படுத்தல் 7:9) நான் அந்த டேட் நவீன அருங்காட்சியகத்தில் நின்று கொண்டிருக்கையில், திடீரென அனைத்து ரேடியோக்களும் ஒரே அலைவரிசையை எடுத்து, அந்த அறையிலுள்ள அனைவரும் கேட்குமாறு, ‘‘அமேஸிங் கிரேஸ், ஹவ் சுவீட் த சவுண்ட்” என்ற பாடலைப் பாடினால் எப்படி இருக்கும்!