வகை  |  odb

இரட்சிப்பைக் காணல்

தன்னுடைய ஐம்பத்திமூன்றாம் வயதில், சோனியா தன்னுடைய தொழிலையும், தன் தேசத்தையும் விட்டு விட்டு, அடைக்கலம் தேடி, வேறு இடத்திற்கு பிரயாணம் பண்ணும் ஒரு கூட்டத்தினரோடு சேர்ந்து கொள்ளும்படி தள்ளப்பட்டாள். ஒரு தீவிரவாதக் கூட்டம் அவளுடைய உறவினரான ஒருவரைக் கொலை செய்ததோடு, அவளுடைய பதினேழு வயது மகனை, அவர்களின் கூட்டத்தில் சேரும்படி கட்டாயப் படுத்தியது. சோனியாவிற்கு அவ்விடத்தைவிட்டு தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழிதோன்றவில்லை.  “தேவனே, நான் எது தேவையோ அதைச் செய்வேன்,…..எதுவானாலும் செய்வேன், ஆனால் நானும் என்னுடைய மகனும் பட்டினியால் சாகக் கூடாது,……..அவன் அங்கே ஒரு சாக்கினுள் கட்டுண்டவனாகவோ அல்லது ஓர் ஓடையில் தூக்கி வீசப்பட்டவனாகவோ சாவதை விட, இங்கே கஷ்டப் பட்டாலும் அதையே விரும்புகின்றேன்” என்று ஜெபித்தாள்.

சோனியா மற்றும் அவளுடைய மகனுக்கும், அவளைப் போன்று அநியாயத்தையும் பேரிழப்பையும் சந்திக்கின்ற அநேகருக்கும் வேதாகமம் என்ன கூறுகின்றது? இயேசுவின் வருகையைக் குறித்து யோவான் ஸ்நானகன் அறிவித்தபோதே, நமக்கும், சோனியாவிற்கும், இந்த உலகிற்கும் நற்செய்தியைக் கூறினார், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப் படுத்துங்கள்” என்று அறிவித்தார் (லூக். 3:3). மேலும் அவர் இயேசு வரும் போது, அவர் மிகுந்த வல்லமையுள்ளவராய் நம்மை முற்றிலும் விடுவிப்பார் என்றார், இந்த விடுதலையை வேதாகமம் இரட்சிப்பு எனக் குறிப்பிடுகின்றது.

இரட்சிப்பு என்பதன் மூலம் நம்முடைய பாவம் நிறைந்த இருதயத்திற்கு சுகம் கொடுப்பதோடு, ஒரு நாள் இவ்வுலகின் அத்தனை கொடுமைகளிலிருந்தும் விடுதலையைக் கொடுப்பார். அனைத்து சரித்திரமும் மாறும், ஒவ்வொரு மனித அமைப்பும் மாற்றம் பெறும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவன் தரும் மாற்றம் வரும். “மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்” (வச. 5) என்று யோவான் கூறினார்.

நாம் எத்தகைய கொடுமைகளைச் சந்தித்தாலும், கிறிஸ்துவின் சிலுவையும் உயிர்த்தெழுதலும், நாம் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வோம் என உறுதியளிக்கின்றன. ஒரு நாள், அவர் தரும் பூரண விடுதலையை நாம் அநுபவிப்போம்.

மீண்டும்…. ஜெபிக்கும் நேரம்

என் வீட்டின் அருகில் காரை ஓட்டிச் சென்ற போது, எங்களுக்கருகில் வசிக்கும் மிரியாம், மற்றும் அவளுடைய சிறுபெண் குழந்தை எலிசபெத் ஆகியோருக்குக் கையசைத்தேன். கடந்த ஆண்டுகளில், எங்களுடைய சிறிய உரையாடல்கள்- “சில நிமிடங்கள்” என்பதையும் தாண்டி தொடர்ந்து கொண்டேயிருப்பதையும், ஒரு ஜெபக் கூடுகையையும் சமாளித்துக் கொள்ள எலிசபெத் பழகிக் கொண்டாள். நானும் அவளுடைய தாயாரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அவள், எங்கள் வீட்டின் முற்றத்திலுள்ள மரத்தில் ஏறி, கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள், சற்று நேரத்தில் அந்தக் கிளையிலிருந்து குதித்து, எங்களிடம் ஓடி வருவாள். எங்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு, சிரித்துக் கொண்டே, “இது மீண்டும் ஜெபிக்கும் நேரம்” என்ற பாடலைப் பாடுவாள். நண்பர்களுக்கிடையே ஜெபம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்டதைப் போல, அந்தச் சிறு வயதிலேயே செயல் படுவாள்.

“கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (எபே. 6:10) என்று விசுவாசிகளை உற்சாகப் படுத்திய அப்போஸ்தலனாகிய பவுல், இடைவிடாத ஜெபத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகின்றார். ஆவிக்குரிய வாழ்வில் தேவனோடு நடக்கும் போது, அவருடைய பிள்ளைகளுக்குத் தேவையான சர்வாயுதவர்க்கத்தைக் குறித்து விளக்குகின்றார். இவை பாதுகாப்பையும், பகுத்தறியும் ஞானத்தையும், அவருடைய உண்மையின் மீதுள்ள நம்பிக்கையையும் நமக்குத் தருமென குறிப்பிடுகின்றார் (வச. 11-17). நமக்கு வாழ்வு தரும் ஈவுகளைத் தரும் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருந்தால் மட்டுமே தேவன் தரும் பெலத்தில் நாம் வளரமுடியும் என அப்போஸ்தலனாகிய பவுல் வலியுறுத்துகின்றார் (வச. 18-20).

நம்முடைய ஜெபங்களில் நாம் கதறினாலும் சரி, மனதுக்குள்ளே புலம்பினாலும் சரி, தேவன் அவற்றைக் கேட்கிறார், நம்மீது கரிசனை கொண்டுள்ளார். அவர் தம்முடைய வல்லமையினால், நம்மை பெலப்படுத்த ஆயத்தமாயிருக்கிறார் எனவே, அவர் நம்மை மீண்டும், மீண்டும், மீண்டும் ஜெபிக்க அழைக்கின்றார்.

மணியோசை

ஜாண்சன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தான் ஒரு கடற்படை தளபதியாக வேண்டுமென கற்பனை செய்தான். இந்த இலக்கினை அடையும்படி, வருடக்கணக்காக, கட்டுப் பாடான வாழ்க்கை முறையையும், தியாகங்களையும் மேற்கொண்டான். அவனுடைய பெலத்தைச் சோதிக்கும் அநேக சோதனைகளைச் சந்தித்தான், பயிற்சியாளர்களால் பொதுவாக “நரக வாரம்” என்று அழைக்கப் படும் பயிற்சியையும் மேற்கொண்டான்.

ஆனால் ஜாண்சனால் அந்தக் கடினமான பயிற்சியை முடிக்க இயலவில்லை. சோர்வடைந்தவனாய், தன்னுடைய காமாண்டரிடமும், பிற பயிற்சியாளர்களிடமும் தான் இந்த பயிற்சியைக் கைவிடப்போவதாக, ஒரு மணியோசையின் மூலம் தெரிவித்தான். அநேகருக்கு இது ஒரு தோல்வியாகத் தோன்றியது. ஆனால் மிகப் பெரிய ஏமாற்றதின் மத்தியிலும், ஜாண்சன் இந்த இராணுவப் பயிற்சியை, தன்னை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதினான்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தவன். அவன் தைரியமாக,  “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்றான். ஆனால் பின்னர் அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்ததால் மனம் கசந்து அழுதான் (வ.60-62). ஆனாலும் அவனுடைய தோல்விகளுக்குப் பின்னால் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பேதுரு மறுதலிப்பதற்கு முன்பாகவே இயேசு அவனிடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார் (மத். 16:18; லூக். 22:31-32).

நீயும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து, உன்னைக் குறித்து எதற்கும் உதவாதவன், தகுதியற்றவன் என்று கருதி போராட்டத்தில் இருக்கின்றாயா? தோல்வியின் மணியோசை, தேவன் உனக்கு வைத்திருக்கும் மிகப் பெரிய நோக்கத்தை கண்டுபிடிக்கத் தடையாக இருக்க, அனுமதியாதே.

மீண்டும் இணைதல்

இராணுவத்திலிருக்கும் தன்னுடைய தந்தையிடமிருந்து வ ந்த பெட்டியை, ஆர்வத்தோடு திறந்தான் அந்தச் சிறுவன். அவனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவனுடைய தந்தையால் வரமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். அந்தப் பெட்டிக்குள்ளே மற்றொரு பெட்டி, அதற்குள்ளே மற்றொரு பெட்டி இரு ந்தது. அதனுள்ளே ஒரு காகிதத்தில், “ஆச்சரியம்” என்றிருந்தது. குழப்பமடைந்தவனாய் அச்சிறுவன் மேலே நோக்கிப் பார்த்தான், அவனுடைய தந்தை உள்ளே நுழைகின்றார். ஆனந்தக் கண்ணீரோடு, தந்தையின் கரங்களில் பாய்ந்தான், ஆச்சரியத்தில், “அப்பா, நான் உங்களை நினைத்தேன், நான் உங்களை நேசிக்கிறேன்!” என்றான்.

அந்தக் கண்ணீரோடு கூடிய மகிழ்ச்சி நிறைந்த சந்திப்பு, வெளிப்படுத்தல் 21ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, அவருடைய பிள்ளைகள் தேவனை முகமுகமாய், புதிய வானம், புதிய பூமியில் சந்திக்கின்ற அந்த மகிமை பொருந்திய கணத்தை எனக்கு நினைவு படுத்தியது. “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்”, இனிமேல் துக்கமுமில்லை, வேதனையுமில்லை, ஏனெனில் நம்முடைய பரலோகத் தந்தை எப்பொழுதும் நம்மோடு இருப்பார். வெளிப்படுத்தல் 21ல் குறிப்பிட்டுள்ள ஒரு பெருஞ்சத்தம் தெரிவித்ததைப் போன்று, “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்” (வச. 3-4).

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய மென்மையான அன்பையும், அவர் தரும் மகிழ்ச்சியையும் அநுபவித்துக் கொண்டிருக்கின்றனர். 1 பேதுரு 1:8 கூறுவது போல் “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூருங்கள்”. நம்மை நேசித்து, நம்மை வரவேற்கும்படி, ஏக்கத்தோடு தன்னுடைய கரங்களை விரித்தவராய் காத்திருக்கும் நம் தேவனை நாம் முகமுகமாய் சந்திக்கும் போது, நம் உள்ளத்தில் பொங்கி வழியும் அந்த வியத்தகு மகிழ்ச்சியை உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா!