ஜாண்சன் தன்னுடைய சிறுவயதிலிருந்தே தான் ஒரு கடற்படை தளபதியாக வேண்டுமென கற்பனை செய்தான். இந்த இலக்கினை அடையும்படி, வருடக்கணக்காக, கட்டுப் பாடான வாழ்க்கை முறையையும், தியாகங்களையும் மேற்கொண்டான். அவனுடைய பெலத்தைச் சோதிக்கும் அநேக சோதனைகளைச் சந்தித்தான், பயிற்சியாளர்களால் பொதுவாக “நரக வாரம்” என்று அழைக்கப் படும் பயிற்சியையும் மேற்கொண்டான்.

ஆனால் ஜாண்சனால் அந்தக் கடினமான பயிற்சியை முடிக்க இயலவில்லை. சோர்வடைந்தவனாய், தன்னுடைய காமாண்டரிடமும், பிற பயிற்சியாளர்களிடமும் தான் இந்த பயிற்சியைக் கைவிடப்போவதாக, ஒரு மணியோசையின் மூலம் தெரிவித்தான். அநேகருக்கு இது ஒரு தோல்வியாகத் தோன்றியது. ஆனால் மிகப் பெரிய ஏமாற்றதின் மத்தியிலும், ஜாண்சன் இந்த இராணுவப் பயிற்சியை, தன்னை வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதினான்.

அப்போஸ்தலனாகிய பேதுருவும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்தவன். அவன் தைரியமாக,  “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்” (லூக்.22:33) என்றான். ஆனால் பின்னர் அவன் இயேசுவை அறியேன் என்று மறுதலித்ததால் மனம் கசந்து அழுதான் (வ.60-62). ஆனாலும் அவனுடைய தோல்விகளுக்குப் பின்னால் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார். பேதுரு மறுதலிப்பதற்கு முன்பாகவே இயேசு அவனிடம், “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார் (மத். 16:18; லூக். 22:31-32).

நீயும் வாழ்க்கையில் தோல்விகளைச் சந்தித்து, உன்னைக் குறித்து எதற்கும் உதவாதவன், தகுதியற்றவன் என்று கருதி போராட்டத்தில் இருக்கின்றாயா? தோல்வியின் மணியோசை, தேவன் உனக்கு வைத்திருக்கும் மிகப் பெரிய நோக்கத்தை கண்டுபிடிக்கத் தடையாக இருக்க, அனுமதியாதே.