
மிகவும் கவலை தோய்ந்த வாத்து
வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஏன் இந்த கால்பந்து உள்ளது? நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் நான் அருகில் சென்ற போது தான், அந்த சாம்பல் நிற உருண்டை, பந்து அல்ல; அது ஒரு வாத்து என தெரிந்து கொண்டேன் – இதுவரைக் கண்டிராத அளவு மிகவும் கவலை தோய்ந்த வாத்து அது.
நான் வேலை செய்யும் இடத்துக்கு அருகிலுள்ள புல் தரையில் குளிர் கால மாதங்களில், வாத்துக்கள் கூட்டமாக வரும், ஆனால் இன்றைக்கு ஒன்றே ஒன்று, தன்னுடைய கழுத்தை வளைத்து, தன்னுடைய தலையை இறக்கைக்குள் திணித்துள்ளது. உன்னுடைய நண்பர்கள் எங்கே? என நான் கேட்டுக் கொண்டேன். பாவம், தனியாக உள்ளது. மிகவும் தனிமையில் உள்ளது. நான் அதனை அணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.
இந்த தனிமையான இறகுள்ள நண்பனைப் போல, ஒரு வாத்து தனிமையில் இருப்பதைக் காண்பது மிகவும் அரிது. வாத்துக்கள் கூட்டமாக வாழும். பறக்கும் போது, காற்றைக் கிழிப்பதற்கு வசதியாக, அவை v வடிவத்தில் பறக்கும். அவை சேர்ந்து வாழ்வதற்கென்றே படைக்கப் பட்டுள்ளன.
மனிதர்களாகிய நாமும் கூட்டமாக வாழும்படி படைக்கப் பட்டுள்ளோம் (ஆதி. 2:18). பிரசங்கி 4:10ல் தனிமையாக இருப்பது எத்தனை பாதுகாப்பற்றது என்று சாலமோன் அரசன் விளக்குகின்றார். “ஒருவன் விழுந்தால், அவன் உடனாளி அவனைத் தூக்கி விடுவான்; ஒண்டியாய் இருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே” என்கின்றார். அ நேகர் சேர்ந்திருப்பது பெலனைத்தரும் எனவும் கூறுகிறார், “ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12) என்று சொல்கின்றார்.
இது நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருத்தமானது. தேவன் நம்மை தனிமையில், பாதுகாப்பற்றவகையில் பிரிக்கப்பட்டவர்களாய் “பறக்கும்படி” விரும்பவில்லை. நமக்கு உறவுகள் அவசியம், நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தவும், புதுப்பித்துக் கொள்ளவும் வளரவும் அது உதவியாய் இருக்கும்.
(1 கொரி. 12:21)
வாழ்க்கைப் பாதையில் பலத்த எதிர் காற்று வீசும் போது, இணைந்து நாம் உறுதியாக நிற்போம், இணைந்து வாழ்வோம்.

தேவையான பொருட்களைத் தரும் இவ்வுலகு
நடு இரவு தாண்டிய வேளையில், ஜேம்ஸ் என்ற மீனவன் மீன்களைப் பிடிப்பதற்காக கடலில் படகைச் செலுத்திக் கொண்டிருக்கின்றான். அந்த அதிகாலை வேளையையும் அவன் பொருட்படுத்தவில்லை. “நான் மீன் பிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு என்னுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது, எனக்கு வருமானம் தரக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை” என்று அவன் கூறினான். இப்பொழுது கடல் பாதுகாப்பு இயக்கத்தில், ஒரு உறுப்பினராக இருப்பதால், அவனுடைய வருமானமும் அதிகரித்துள்ளது, நிலையான வருமானமும் வருகின்றது, “இந்த செயல் திட்டத்தைத் துவக்கித் தந்த தேவனுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்” என்றும் கூறினான்.
இந்த திட்டம் பெரிய அளவில் உருவானது, ஏனெனில், இந்த திட்டத்திற்குத் தேவையானவற்றை தேவனுடைய படைப்புகள் கொடுத்தன – அவை இயற்கையில் கிடைக்கும் கடல் உயிரினங்கள். எல்லாம் தருகின்ற தேவனை துதித்து, “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்” (சங்.104:14). “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும், பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு (வச. 25).
தேவனுடைய ஆச்சரியமான படைப்புகள் நமக்குத் தேவையானவற்றைத் தருகின்றன, இது எத்தனை அற்புதமானது! எடுத்துக் காட்டாக மீன்கள் ஒரு சுகாதாரமான கடல் உணவைத் தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்த மீன்களைப் பாதுகாப்பாக பிடிப்பதன் மூலம், ஜேம்ஸ் மற்றும் அவனுடைய சுற்றத்தாருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கின்றது.
தேவனுடைய படைப்புகள் எல்லாமே ஒரு நோக்கத்தோடு தான் படைக்கப்பட்டுள்ளன, அவை எல்லாவற்றையும் தேவன் தன்னுடைய மகிமைக்காகவும் நம்முடைய நன்மைக்காகவும் பயன்படுத்துகின்றார். இவ்வாறு சங்கீதக்காரன், “நான் உயிரோடு இருக்கும் மட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்” (வச. 33) என்கின்றார், நாமும் தேவன் நமக்குத் தந்துள்ள யாவற்றையும் நாம் சிந்தித்துப் பார்த்து, நாமும் அவரைப் போற்றுவோம்.

மீண்டும் நண்பர்களாயினர்
ஒரு நாள், ஒரு தாயும் அவளுடைய இளம் மகளும் ஆலயத்தில் அமர்ந்திருந்தனர். ஆராதனையின் போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு, வெளிப்படையாக தேவனுடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளும் படி வாய்ப்பு கொடுக்கப் பட்டது. அவ்வாறு செய்ய, ஒவ்வொரு முறையும் யாரேனும் முன்னோக்கிச் செல்லும் போது, அந்த சிறுமி கரங்களைத் தட்ட ஆரம்பித்து விடுவாள். ஆராதனை முடிந்ததும், அவளுடைய தாய், “நான் மிகவும் வருந்துகிறேன், ஒப்புரவாகுதலின் மூலம் நாம் தேவனுக்கு நண்பர்களாகின்றோம் என நான் என்னுடைய மகளிடம் சொல்லியிருந்தேன், அதனாலேயே அவள் அனைவரையும் உற்சாகப் படுத்தினாள்” என்று சபையின் தலைவர்களிடம் தெரிவித்தாள்.
அந்தச் சிறுமியின் மனதில், சுவிசேஷத்தைக் குறித்து ஒரு எளிய கருத்தை, அவளுடைய தாயார் கொடுத்திருந்தது நல்லது தான். முன்பு தேவனுக்கு சத்துருக்களாக இருந்த நாம், கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம், தேவனோடு கூட ஒப்புரவானோம் (ரோம. 5:9-10). இப்பொழுது நாம் தேவனுக்கு நண்பர்களாக இருக்கின்றோம். முன்பு இந்த நட்புறவை முறிப்பதற்கு நாம் தான் காரணமாயிருந்தோம் (வ.8), எனவே, ஒப்புரவாகுதலை முழுமையாக்க, நாம் தான் மனந்திரும்ப வேண்டும். அந்த சிறுமியின் செயல் மிகவும் பொருத்தமானது, ஒரேயொரு பாவி மனந்திரும்பினாலே பரலோகம் முழுவதும் ஆர்ப்பரிக்கின்றது (லூக். 15:10) .அந்தச் சிறுமியும் தான் அறியாமலேயே பரலோகத்தின் ஆர்ப்பரிப்பை கரகோஷத்தினால் பிரதிபலித்தாள்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஒப்புரவாகுதலின் வேலையை, “ஒருவன் தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை (யோவா. 15:10) என்பதாகத் தெரிவிக்கின்றார். அவர் நம்மீது கொண்டுள்ள நட்பின் காரணமாக, நிறைவேற்றிய தியாகச் செயலின் விளைவாக, நாம் இப்போது தேவனோடு நண்பர்களாக இருக்கின்றோம், அவர், “இனி நான் உங்களை ஊழியக்காரன் என்று சொல்லுகிறதில்லை,… நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்” (15:15) என்றார்.
முன்பு தேவனுக்குப் பகைவராக இருந்த நாம் இப்போது அவருக்கு நண்பர்களாக இருக்கிறோம். இந்த எண்ணம் நம்மை வியக்கச் செய்கின்றது, இது கைத் தட்டுவதற்கு உகந்தது.

பாடல்கள் வழியான புரட்சி
ஒரு புரட்சியைத் துவக்கி விட தேவையானது என்ன? துப்பாக்கிகளா? வெடிகுண்டுகளா? கொரிலா யுத்தமா? 1980 ஆம் ஆண்டு இறுதியில், எஸ்டோனியா நாடு பாடல்களால் நிரம்பியது. பல ஆண்டுகளாக சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்த அந்நாட்டு மக்கள் சுமைகளைத் தாங்கி வந்தனர், இப்பொழுது, தேசபக்தி பாடல்களை பாடுவதன் மூலம் ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பாடல்கள் வழியாக “பாடல் வழி புரட்சி” பிறந்தது, இதுவே, 1991 ஆம் ஆண்டில் எஸ்டோனியா சுதந்திரம் பெறுவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது.
“இது ஒரு வன்முறையான ஆக்கிரமிப்பைத் தூக்கி எறிந்த ஓர் அஹிம்சை வழிபுரட்சி” என இந்த இயக்கத்தைக் குறித்து ஒரு வலைதளம் விளக்கியது. மேலும், “ஐம்பது ஆண்டுகள் சோவியத்தின் அரசாட்சியைப் சகித்துக் கொண்டிருந்த எஸ்டோனியர்களை ஒன்றிணைத்த வலிமையான விசையாக பாடல்கள் திகழ்ந்தன” என்றும் கூறியது.
நம்முடைய வாழ்விலும் கடினமான வேளைகளைக் கடந்து செல்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால் தான் நாம் நம்மை எளிதாக சங்கீதங்களோடு இணைத்துக் கொள்ள முடிகின்றது. தன்னுடைய ஆன்மாவின் ஒரு இருண்ட இரவில் இந்தப் பாடலை சங்கீதக்காரன் பாடுகின்றார். “என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்” (சங். 42:5). ஆராதனை தலைவனான ஆசாப், தான் பெரும் ஏமாற்றத்தைக் கண்டபோது, “சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்” (73:1) எனப் பாடுகின்றார்.
நம்முடைய சோதனை நேரங்களிலும், நாம் சங்கீதக்காரனோடு இணைந்து பாடி, நம் இருதயங்களில் பாடல் வழிப் புரட்சியை ஏற்படுத்துவோம். இத்தகைய புரட்சி, நம்முடைய விரக்தியின் கொடுமையையும் குழப்பத்தையும், தேவனுடைய மிகப் பெரிய அன்பு, உண்மையின் மீதுள்ள விசுவாசத்தோடு கூடிய நம்பிக்கையினால் மேற்கொள்ளும்.
