
சரியான தீர்ப்பு
பதினான்கு வயது சிறுவனைக் கொலைசெய்த குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். “சிறுவனின் தடகள சட்டைக்காய் அவன் சுடப்பட்டான்” என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதுசெய்யப்பட்ட இந்த மூன்று வாலிபர்களும் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்படுவதற்குள் அவர்கள் 36 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்கு பின்பாக செலவிடவேண்டியிருந்தது. ஆம், அந்த கொலையை செய்தது வேறொரு நபர். அந்த மூவரையும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து அவர்களை விடுவிக்குமுன், அந்த நீதிபதி அவர்களிடம் மன்னிப்புகேட்டார்.
எவ்வளவுதான் நாம் முயற்சிசெய்தாலும் (நம்முடைய அதிகாரிகள் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும்) மனிதனுடைய நீதி பெரும்பாலும் குறைவுள்ளதாகவே இருக்கிறது. நாம் எப்போதும் எல்லா விவரங்களையும் தெரிந்தவர்கள் அல்ல. சிலநேரங்களில் நேர்மையற்றவர்கள், நிஜத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கின்றனர். சிலநேரங்களில் நாமே தவறு செய்கிறோம். தவறுகளை சரிசெய்வதற்கு பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆனால், இந்த சிக்கலான மனிதர்களை போலல்லாமல், தேவன் சரியான நீதியை வழங்குகிறார். “அவர் கிரியை உத்தமமானது” என்றும் “அவர் வழிகளெல்லாம் நியாயம்” என்றும் மோசே கூறுகிறார் (உப. 32:4). தேவன் உள்ளதை உள்ளதென்று பார்க்கிறார். சிலவேளைகளில் நாம் தவறிழைத்தாலும் கடைசியில் தேவன் அவைகளை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார். அது எப்போது என்பது துல்லியமாய் தெரியவில்லை என்றாலும், நாம் நம்பிக்கையோடு சேவிக்கிற தேவன், “நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்” (வச. 4).
எது சரி, எது தவறு என்று தீர்மானிக்கமுடியாத ஒரு குழப்பமான பாதையில் நாம் நடக்கலாம். நமக்கு அல்லது நம்மை சார்ந்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை காலத்திற்கும் சரிசெய்யமுடியாதோ என்று ஒருவேளை நாம் பயப்படலாம். ஆனால் இம்மையிலோ அல்லது மறுமையிலோ, நமக்கான நீதியை நிச்சயமாய் நிலைநாட்டும் நம்முடைய நீதியின் தேவனை முழுமையாய் நம்ப முற்படுவோம்.

புலம்புவது தவறில்லை
நான் முழங்கால்படியிட்டு கண்ணீர் சிந்தினேன். “தேவனே, ஏன் என்னை நீர் கவனித்துக்கொள்வதில்லை?” என்று அழுதேன். அது கோவிட்-19 தொற்று வெகுவாய் பரவிய 2020ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட ஒருமாத காலமாய் நான் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தேன். என்னுடைய வேலையில்லா விண்ணப்பத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. அமெரிக்க அரசு அறிவித்திருந்த ஊக்கத் தொகையும் வந்து சேர்ந்தபாடில்லை. தேவன் எல்லாவற்றையும் சரிசெய்வார் என்று என் இருதயத்தின் ஆழத்தில் நம்பியிருந்தேன். அவர் என்னை உண்மையாய் நேசிக்கிறார்; என்னை பாதுகாப்பார் என்று நம்பினேன். ஆனாலும் அந்த தருணத்தில் நான் கைவிடப்பட்டதுபோல் உணர்ந்தேன்.
புலம்புவது ஒருவிதத்தில் சரியென்று புலம்பல் புத்தகம் நமக்கு காட்டுகிறது. இப்புத்தகம் கி.மு. 587இல் பாபிலோனியர்கள் எருசலேமை அழிக்கும்போதோ அல்லது அதற்கு பின்னரோ எழுதப்பட்டது. இது மக்கள் சந்தித்த பாடுகள் (3:1,19) அடக்குமுறை (1:18) மற்றும் பட்டினி (2:20; 4:10) போன்றவற்றை விவரிக்கிறது. ஆயினும், புத்தகத்தின் இடையில் நம்பிக்கையை ஏன் இழக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை ஆசிரியர் நினைவுகூறுகிறார்: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது” (வச. 22-23). இந்த கடினமான பேரழிவின் மத்தியிலும், தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்று ஆசிரியர் நினைவுகூறுகிறார்.
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிறவர்களுக்கும் கர்த்தர் நல்லவர் (வச. 25) என்பதை நம்புவது சிலநேரங்களில் கடினமாய் தெரிகிறது. குறிப்பாய், நம்முடைய பாடுகளுக்கு முடிவேயில்லை என்று கருதும் நேரங்களில் தேவனை நம்புவது கடினம். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்னும் நம்பிக்கையுடன் அவரிடத்தில் புலம்பலாம். அவர் நம்மை நிச்சயமாய் கண்ணோக்கிப் பார்ப்பார்.

வெகுசிறப்பான வாழ்க்கை
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த மருத்துவ நிபுணரான கேத்ரீன் ஹம்லினைக் குறித்து பத்திரிக்கையில் வெளியான அவருடைய இரங்கல் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். குழந்தைப் பிறப்பின்போது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களைத் தாக்கும் ஒருவகையான மகப்பேறு வியாதிக்கு சிகிச்சையளிக்கும் உலகின் முதல் மருத்துவமனையை எத்தியோப்பியாவில் நிறுவியவர்களே இந்த கேத்ரீனும் அவருடைய கணவரும். அதில் 60,000க்கும் அதிகமான பெண்களுக்கு சிகிச்சையளித்த பெருமை இவரைச் சேரும்.
மருத்துவசேவை புரிந்துகொண்டிருந்த தன்னுடைய 92ஆம் வயதிலும், தன்னுடைய ஒவ்வொரு நாளையும் தேனீர் கோப்பையுடனும் வேதபாடத்துடனும் துவங்குவது கேத்ரீனின் வழக்கம். அவரை பேட்டியெடுத்தவர்களிடம், தான் தேவன் கொடுத்த வேலையைச் செய்யும் ஒரு சாதாரண விசுவாசி என்று பதிலளித்தார்.
அவருடைய சிறப்பான வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். ஏனெனில், தேவனை மறுதலிப்பவர்களும் நம்முடைய “நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம்... தேவனை மகிமைப்படுத்தும்படி” (1 பேதுரு 2:12), என்று வேதம் விசுவாசிகளை வாழத் தூண்டும் வெகுச் சிறப்பான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.
நம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து அவருக்கு சொந்தமாக்கிக் கொண்ட தேவனுடைய ஆவியின் வல்லமையினால், நம்முடைய சேவைகளையெல்லாம் வல்லமையுள்ள விசுவாச சாட்சிகளாக மாற்றமுடியும். தேவன் நமக்கு கொடுத்துள்ள வாஞ்சையையும் திறமைகளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றக்கூடிய வகையில், தேவ ஜனத்தை அவரண்டை திருப்புவதற்கு அவைகளை நேர்த்தியாய் பயன்படுத்துவோம்.

நீதியின் தேவன்
வரலாற்றின் மிக பிரபலமான “பலிமாடு” அநேகமாக இவளாகத்தான் இருக்கவேண்டும். அவளின் பெயர் டெய்சி, மேட்லின், அல்லது க்வெண்டோலின் (ஒவ்வொரு பெயரும் பரிந்துரைக்கப்பட்டது) போன்றவற்றில் எதுவென்று சரியாய் தெரியவில்லை. ஆனால் 1871ஆம் ஆண்டு சிகாகோ நகரத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களை வீடில்லாதவர்களாய் மாற்றிய பெரும் தீ விபத்திற்கு காரணம், ஒ லிரி என்பவருக்கு சொந்தமான இந்த பசுமாடுதான் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. வீசிய காற்றினால் மளமளவென்று மரவீடுகளில் பரவிய நெருப்பு, மூன்று நாட்கள் எரிந்து, முன்னூறுபேரை பலியாக்கியது.
மாட்டுக்கொட்டகையில் இருந்த விளக்கை இந்த பசுமாடு தட்டிவிட்டதினால்தான் தீ பற்றிக்கொண்டது என்று பல ஆண்டுகளாய் நம்பப்பட்டு வந்தது. மேற்படியான விசாரணையில், 126 ஆண்டுகள் கழித்து, இந்த பசுமாடும் அதின் உரிமையாளரும் குற்றமற்றவர்களென்று நிருபிக்கப்பட்டனர். அவர்களின் பக்கத்து வீட்டிலிருந்தே தீ பரவியுள்ளது என்று நகரத்தின் தீயணைப்பு மற்றும் காவல் துறையினரால் கண்டறியப்பட்டது.
நீதி, உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அது எவ்வளவு கடினம் என்பதை வேதாகமமும் ஒப்புக்கொள்கிறது. சங்கீதம் 13இல் “எதுவரைக்கும்?” என்னும் கேள்வி மீண்டும் மீண்டும் நான்கு தரம் இடம்பெற்றுள்ளது: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?” (வச. 1-2). தன்னுடைய புலம்பலின் இடையில் விசுவாசிப்பதற்கும் நம்புவதற்குமான காரணத்தை தாவீது கண்டறிகிறார்: “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்;. உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.” (வச. 5).
நீதி தாமதித்தாலும், தேவனுடைய கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை. அவரை நம்பி அவரில் நாம் தற்காலிகமாய் அல்ல, நிரந்தரமாய் இளைப்பாறுதலடையலாம்.
