ஹவாய் தீவின் மக்களைக் குறித்து ஆலிஸ் கஹோலுசுனா சொல்லும்போது, அவர்கள் தங்கள் கோயில்களுக்குள் நுழையுமுன் கோயில் வாசலில் வெகுநேரம் அமர்ந்திருந்து தங்களை சுத்திகரித்துக்கொண்ட பின்புதான் உள்ளே செல்லுவார்களாம். உள்ளே நுழைந்த பின்பும் தங்கள் விண்ணப்பத்துடன் பலிபீடத்திற்கு பயபக்தியுடன் ஊர்ந்து செல்லுவார்களாம். பின்பு கோயிலின் வெளியே வந்து மீண்டும் வெகுநேரம் அமர்ந்திருந்து, தாங்கள் ஏறெடுத்த விண்ணப்பங்களை நினைத்து, அதற்கு உயிர் கொடுப்பார்களாம். 

கிறிஸ்தவ மிஷனரிகள் ஹவாய் தீவிற்கு வந்தபோது, அவர்களின் ஜெபிக்கும்முறை இந்த தீவின் மக்களை திருப்திபடுத்தவில்லை. மிஷனரிகள் எழுந்திருந்து, ஒரு சில வாக்கியங்களைச் சொல்லி, கடைசியில் ஆமென் சொல்லி முடித்துவிட்டார்கள். இந்த ஜெபத்தை ஹவாய் தீவின் மக்கள், “ஜீவனில்லாத ஜெபம்” என்று அழைக்கிறார்கள். 

இந்த சம்பவம், தேவ ஜனங்கள் “அமர்ந்திருந்து… அறியுங்கள்” (சங்கீதம் 46:10) என்னும் சத்தியத்தை முழுமையாய் அனுபவிக்கவில்லை என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடைய ஜெபங்கள் பெரியதோ அல்லது சிறியதோ, தேவன் நம் ஜெபத்தை கேட்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்முடைய வாழ்க்கை நம் இருதயத்தை பிரதிபலிக்கிறது. நம்முடைய ஜெபங்கள் மூலமாக தேவன் நம்மிடத்தில் மட்டுமல்லாது, நம்மை சுற்றிலுமிருக்கிற மக்களின் வாழ்க்கையிலும் கிரியை செய்ய அனுமதிக்கவேண்டும். இதுபோன்று எத்தனை முக்கியமான தருணங்களை இழந்து நம்முடைய ஜெபங்களை அவசரஅவசரமாய் “ஆமென்” சொல்லி முடித்திருக்கிறோம்?     

நமக்கு முன்பாக மெல்லமாய் நடந்து செல்லுபவர்களைக் கண்டாலோ அல்லது சாலை நெருக்கடிகளிலோ நாம் அடிக்கடி பொறுமையிழப்பது இயல்பு. ஆனால் தேவன் நம்மை அமர்ந்திருக்கச் சொல்லுகிறார். “நீங்கள் அமர்ந்திருங்கள், நன்றாய் மூச்சை இழுத்துவிடுங்கள், பொறுமையாக செல்லுங்கள், நானே உங்கள் அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமான தேவன் என்பதை மறந்துவிடாதீர்கள்”  என்று கர்த்தர் சொல்லுகிறார். அதை நேர்த்தியாய் செய்வதற்கு, நாம் தேவனை தேவனென்று அறிய வேண்டும்; அவரையே நம்பவேண்டும்; அவருக்காக வாழவேண்டும்.