உண்மையுள்ளவன், ஆனால் மறக்கப்படவில்லை
சீன், வளர்ந்தபோது குடும்பம் என்றால் என்ன என்பதைக் குறித்து குறைவாகவே அறிந்திருந்தான். அவனுடைய தாயார் மரித்துவிட்டார். அப்பாவும் எப்போதும் வீடு தங்குவதில்லை. அவன் எப்போதும் தனிமையாகவும் ஒதுக்கப்பட்டவனாகவும் உணர்ந்தான். அவனுக்கு அருகாமையில் வசித்த ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர். அவனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று, தங்களுடைய பிள்ளைகளை அண்ணன் என்றும் அக்கா என்றும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அது அவன் மற்றவர்களால் நேசிக்கப்படுகிறான் என்னும் உணர்வை அவனுக்கு தந்தது. அவனை அவர்கள் திருச்சபைக்கு அழைத்துச் சென்றனர். சீன் தற்போது, ஒரு உறுதியான இளைஞனாகவும், வாலிபர் கூட்டத் தலைவனாகவும் செயல்படுகிறான்.
இந்த தம்பதியினர் தங்களை சுற்றியிருக்கும் இளம் வாலிபர்களின் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான கருவியாய் செயல்பட்டாலும், அவர்கள் செய்த அந்த மேன்மையான செயல் அவர்களின் திருச்சபையில் இருந்த பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. ஆனால் விசுவாச வீரர்களின் விசுவாசத்தை கனப்படுத்திய தேவன், அவர்களையும் நிச்சயமாய் ஒரு நாளில் கனப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். எபிரெயர் 11ஆம் அதிகாரம் நமக்கு நன்றாய் தெரிந்த பிரபல விசுவாச வீரர்களை பட்டியலிடுவதில் துவங்கி, நம் அறிவிற்குட்படாத பலரை “இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்(றவர்கள்)” (வச. 39) என்று வரிசைப்படுத்துகிறது. “உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை” (வச. 38) என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
நம்முடைய கிரியைகளை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றாலும், தேவன் அதைப் பார்க்கிறார். அதை அறிவார். நாம் சொன்ன சில ஆறுதலான வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ சிறியதாயிருக்கலாம்; ஆனால் தேவன் அதை குறித்த காலத்தில் தன்னுடைய நாமத்திற்கு மகிமையாய் பயன்படுத்துவார். யாருக்கும் தெரியவில்லையென்றாலும், உன்னையும் உன் கிரியைகளையும் தேவன் அறிவார்.
சிவப்பு ஆடை திட்டம்
சிவப்பு ஆடைத்திட்டம் பிரிட்டிஷ் கலைஞரான கிர்ஸ்டி மேக்லியோட் என்பவரால் உருவாக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சியகங்களில் ஒரு முக்கிய அங்கமாய் மாறியுள்ளது. பதின்மூன்று ஆண்டுகளாக, எண்பத்து நான்கு பர்கண்டி பட்டுத் துண்டுகள் உலகம் முழுவதும் பயணம் செய்து முந்நூறுக்கும் மேற்பட்ட பெண்களால் (மற்றும் ஒரு சில ஆண்களால்) எம்ப்ராய்டரி செய்யப்பட்டன. அந்த துண்டுகள், அந்த திட்டத்தில் பங்கேற்ற, அடையாளம் தெரியாமல் ஒதுக்கப்பட்டிருந்த பல கலைஞர்களின் கதைகளைச் சொல்லும்வண்ணம் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.
இந்த சிவப்பு ஆடையைப் போலவே ஆரோனுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்ட வஸ்திரம் “விவேகமான இருதயமுள்ள” (யாத்திராகமம் 28:3) பலரால் வடிவமைக்கப்பட்டது. ஆசாரியர்களின் அந்த பிரத்யேகமான வஸ்திரத்தில், இஸ்ரவேலின் வாழ்க்கை சரிதைகள், அதிலுள்ள கற்களில் கோத்திரங்களின் பெயர்கள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அதை ஆரோன் “கர்த்தருக்கு முன்பாக… ஞாபகக்குறியாகச் சுமந்துவர” (வச. 12) அறிவுறுத்தப்படுகிறார். அங்கிகள், இடைக்கச்சைகள் மற்றும் குல்லாக்கள் ஆகியவைகள் தேவனை சேவித்து மக்களை ஆராதிக்க தகுதிப்படுத்திய ஆசாரியர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாயிருக்கும்பொருட்டு கொடுக்கப்படுகிறது (வச. 40).
கிறிஸ்துவின் மூலம் உடன்படிக்கை உறவில் அங்கத்தினராய் சேர்க்கப்பட்ட நாம், ஆசாரியக்கூட்டமாய் அழைப்பைப் பெற்று, ஒருவரையொருவர் தேவனை ஆராதிக்க ஊக்கப்படுத்துவோம் (1 பேதுரு 2:4-5,9). இயேசுவே நமது பிரதான ஆசாரியர் (எபிரெயர் 4:14). ஆசாரியர்களாக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த ஒரு பிரத்யேகமான ஆடையையும் நாம் அணியாவிட்டாலும், அவருடைய கிருபையால், “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு” வாழ்கிறோம் (கொலோசெயர் 3:12).

ஏதாகிலும் கேள்வி?
ஆன், பல ஆண்டுகளாக அறிந்திருந்த வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணரை ஆரம்ப பரிசோதனைக்காக சந்தித்தார். அவர் அவளிடம், “உனக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா?” என்று கேட்டார். அவள், “ஆம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்குச் சென்றீர்களா?” என்று கேட்டாள். அவளுடைய கேள்வி அவரை குற்றப்படுத்தும் நோக்குடன் கேட்கப்பட்டதில்லை, மாறாக, விசுவாசத்தைக் குறித்த உரையாடலைத் துவக்குவதற்காக கேட்கப்பட்ட கேள்வியாயிருந்தது.
அந்த மருத்துவரின் திருச்சபை அனுபவங்கள் அந்த அளவிற்கு சொல்லும்படியாக இருக்கவில்லை. ஆனின் உரையாடலுக்கு பின்னர், அவருடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் பங்களிப்பையும் திருச்சபையின் முக்கியத்துவத்தையும் அறிய நேரிட்டது. அதன் பின்பு, அந்த மருத்துவரின் பெயர் பதிக்கப்பட்ட வேதாகமத்தை ஆன் அவருக்கு பரிசாகக் கொடுத்தபோது, அவர் கண்கலங்கினார்.
சில நேரங்களில் நாம் விவாதிக்கவோ அல்லது நம் விசுவாசத்தை ஆக்ரோஷமாக பகிர்ந்து கொள்வதையோ விரும்புவதில்லை. ஆனால் இயேசுவைப் பற்றி அறிவிப்பதற்கு ஒரு நேர்த்தியான வழி இருக்கிறது – கேள்வி கேட்டு உரையாடலைத் துவக்குங்கள்.
அனைத்தும் அறிந்த தேவனாய் இருந்த ஒரு மனிதனாய் இயேசு அநேக கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவருடைய நோக்கங்கள் நமக்குத் தெரியாவிட்டாலும், அவருடைய கேள்விகள் மற்றவர்களை பதிலளிக்கத் தூண்டியது என்பது தெளிவாகிறது. அவர் தனது சீஷனான அந்திரேயாவிடம், “என்ன தேடுகிறீர்கள்” (யோவான் 1:38) என்று கேட்கிறார். பார்வையற்ற பர்திமேயுவிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51; லூக்கா 18:41) என்று கேட்கிறார். அவர் வியாதியஸ்தனிடம், “சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவான் 5:6) என்று கேட்கிறார். இயேசு இந்த ஆரம்ப கேள்விகளைக் கேட்ட அத்தனை பேருடைய வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
யாரிடத்தில் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறீர்கள்? சரியான கேள்விகளை அவர்களிடத்தில் கேட்கும் ஞானத்தை தேவனிடம் கேளுங்கள்.

இயேசுவைப் போல
2014 ஆம் ஆண்டில், உயிரியலாளர்கள் பிலிப்பைன்ஸில் ஒரு ஜோடி ஆரஞ்சு பிக்மி கடல் குதிரைகளை கைப்பற்றினர். அவர்கள் கடல்வாழ் உயிரினங்களையும், ஆரஞ்சு பவள கடல் விசிறி என்னும் ஒரு உயிரினத்தையும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸ{க்கு அழைத்துச் சென்றனர். பிக்மி கடல் குதிரைகள் தங்கள் பெற்றோரின் நிறத்துடனோ அல்லது அவற்றின் சுற்றுச்சூழலுடனும் ஒன்றிணைகிறதா என்று கண்டறிய விரும்பினர். பிக்மி கடல் குதிரைகள் மந்தமான பழுப்பு நிறக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, விஞ்ஞானிகள் ஒரு ஊதா நிற பவளக் கடல் விசிறி உயிரினத்தை தொட்டியில் விட்டனர். ஆரஞ்சு நிற பெற்றோரின் குழந்தைகள், ஊதா நிற கடல் விசிறிக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக்கொண்டது. அவைகளுக்கு இயல்பாகவே இருக்கும் பெலவீனமான சுபாவத்தை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிறமாற்றிக்கொள்ளும் தேவன் கொடுத்த திறனைக்கொண்டு மாற்றியமைத்துக்கொண்டது.
சூழ்நிலையோடு ஒத்துப்போவது என்பது அவசியப்படக்கூடிய ஒரு சுபாவம். இருப்பினும், இரட்சிப்பைப் பெறவும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதன் மூலம் உலகில் தனித்து நிற்கவும் தேவன் நம் அனைவருக்கம் அழைப்புக் கொடுக்கிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனை கனப்படுத்தும்படிக்கு கிறிஸ்தவ விசுவாசிகளை அப்போஸ்தலர் பவுல் வலியுறுத்துகிறார். நம்முடைய சரீரத்தை “ஜீவபலியாக” (ரோமர் 12:1) செலுத்துவதின் மூலம் அவருக்கு நாம் ஆராதனை செய்யமுடியும். பாவத்தால் நம்முடைய சரீரம் பெலவீனமடைந்ததால், நம்முடைய சிந்தையை புதுப்பித்து, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” தேவனை மறுதலித்து பாவத்தை மகிமைப்படுத்தாமல் நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஆவியானவர் எடுத்துக்கொள்கிறார் (வச. 2).
இவ்வுலகத்திற்கு ஒத்த வாழ்க்கை வாழுவது என்பது வேதத்திற்கு புறம்பாய் வாழும் வாழ்க்கையாகும். ஆகிலும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் நாம் இயேசுவைப்போல பார்க்கவும் ஜீவிக்கவும் முடியும்.

தீர்க்கதரிசிகளின் செய்தி
1906ஆம் ஆண்டு நடைபெற்ற பேஸ்பால் உலகத் தொடருக்கு முன், விளையாட்டு எழுத்தாளர் ஹக் புல்லர்டன் ஒரு புத்திசாலித்தனமான கணிப்பை முன்வைத்தார். வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சிகாகோ கப்ஸ் அணி முதல் மற்றும் மூன்றாவது ஆட்டங்களில் தோல்வியடைந்து இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று சொன்னார். மேலும் நான்காம் ஆட்டத்தில் மழைபெய்யும் என்றார். அவர் சொன்னதுபோலவே நடந்தது. பின்னர், 1919 இல், அவரது பகுப்பாய்வுத் திறன் மூலம் சில வீரர்கள் ஆட்டமிழப்பார்கள் என்று சொல்லியதும் நிறைவேறியது. அவர்கள் சூதாட்டக்காரர்களால் லஞ்சம் பெற்றதாக புல்லர்டன் சந்தேகித்தார். அதிலும் அவர் சொன்னபடியே நடந்தது.
புல்லர்டன் ஒரு தீர்க்கதரிசி கிடையாது. ஆனால் ஆதாரங்களை நன்றாக ஆராய்ந்தவர். எரேமியா தீர்க்கதரிசி நிஜத்தில் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்ன அனைத்து தீர்க்கதரிசனங்களும் நிறைவேறிற்று. எருதின் நுகத்தை கழுத்தில் பூண்ட எரேமியா, யூதா பாபிலோனியர்களுக்கு அடிபணிந்து வாழும் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார் (எரேமியா 27:2,12). ஆனால் அனனியா என்னும் கள்ளத் தீர்க்கதரிசி அவனுக்கு விரோதமாய் பேசி, நுகத்தை உடைத்துப்போட்டான் (28:2-4,10). அனனியாவைப் பார்த்து எரேமியா, “அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை... இந்த வருஷத்திலே நீ சாவாய்” (வச. 15-16) என்று சொன்னான். இரண்டு மாதங்கள் கழித்து அனனியா செத்துப்போகிறான் (வச. 17).
புதிய ஏற்பாடு, “பூர்வகாலங்களில்... தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபிரெயர் 1:1-2) என்று சொல்லுகிறது. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் வேதவாக்கியங்கள், பரிசுத்த ஆவியானவரின் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் தேவனுடைய சத்தியங்கள் நமக்கு இன்னும் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது
