தேவன் பட்சமாய் சாய்தல்
ஹாரியட் டப்மேனால் எழுத, படிக்க முடியாது. ஒரு இளம்பெண்ணாக, தன்னுடைய கொடூரமான எஜமானால் அவள் தலையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் அவளை வாழ்நாள் முழுதும் வலிப்பினாலும், ஞாபக மறதியினாலும் பாதித்தது. ஆனால் அவளுடைய அடிமைத்தனத்திலிருந்து தப்பியவுடனே, தேவன் அவளைக்கொண்டு அவளைப் போன்ற சுமார் முன்னூறு பேரை மீட்டார்.
தான் மீட்டவர்களால் "மோசே" என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஹாரியட், வீரமாக பத்தொன்பது முறை உள்நாட்டுப் போருக்கு முன்பாக தெற்கு பக்கம் போய், அங்குள்ள தன்னைப் போன்ற மற்றவர்களை மீட்டார். அவளை உயிருடன் பிடித்தாலோ அல்லது கொன்றாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும், அவளுடைய உயிருக்கு எப்பொழுதுமே ஆபத்து இருந்தும், அவள் இதை தொடர்ந்து செய்தாள். இயேசுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசியாக இருந்த அவள், எப்பொழுதும் தன்னுடைய பிரயாணங்களில் ஒரு பாட்டு புத்தகத்தையும், வேதாகமத்தையும் எடுத்துக்கொண்டு போய் மற்றவர்கள் அவளுக்கு வசனங்களை படிக்க கேட்பாள். அவைகளை அற்பணத்தோடு மனப்பாடம் செய்து அடிக்கடி மேற்கோள் காட்டுவாள் "நான் எப்பொழுதும் ஜெபம் செய்வேன்; என்னுடைய வேலையை குறித்து, எங்கேயும் நான் எப்பொழுதும் தேவனோடு பேசிக் கொண்டிருப்பேன்" என்று அவள் கூறுகிறாள். மேலும் அவளுடைய சிறிய வெற்றிகளுக்கு கூட தேவனையே காரணராக கூறினாள். ஆதி கிறிஸ்தவர்களுக்கு, அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைகள் இவளுடைய வாழ்வில் வல்லமையாக வெளிப்பட்டது "எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது." (1 தெசலோனிக்கேயர் 5:16-18).
நாம் எப்போதும் தேவன் பட்சம் சாய்ந்து, ஜெபத்தை நம்பியே வாழ்ந்து, அவரை நம்முடைய கடினமான சூழ்நிலைகளிலும் கூட துதிக்கும் போது, அவர் நம்முடைய மிக சவாலான பணிகளையும் செய்து முடிப்பதற்கு ஏற்ற பெலன் அளிப்பார். நம்முடைய இரட்சகர் நாம் எதிர்கொள்ளும் எதையும் விட மிகவும் பெரியவர், நாம் அவரை நோக்கி பார்க்கும்போது அவர் நம்மை நடத்துவார்.

தேவனை அடையாளம் காணுதல்
கால் பெருவிரலை ஊன்றி சுற்றாட்டம் ஆடும் முறை (பிரு எட்) என்பது கூட்டு நடனக்குழுவில் நடனமாடும் முக்கிய பெண் நடன கலைஞர்களும் அதைப்போல மற்ற நடன கலைஞர்களும் பயன்படுத்தும் ஒரு நடன முறையாகும். சிறுமியாக எனது நவீன நடன வகுப்பில் அவ்வாறு ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சுழன்று, சுழன்று, மயக்கமுண்டாகி தரையில் விழுமட்டும் அவ்வாறு ஆடுவேன். ஆனால் நான் பெரியவளானபோதோ, என் சமநிலையை, கட்டுப்பாட்டை பேணுவதற்கு நான் ஒரு யுத்தியை கற்றுக்கொண்டேன், அதுதான் " அடையாளம் காணுதல்" ஒரு புள்ளியை அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுற்றிலும் என் கண்கள் அதையே பார்க்கும்படி இருக்கையில் நான் முழு சுற்று வட்டமடித்தேன். என் "பிரு எட்" கலையில் கைதேர்ந்தவளாகவும், அதை அற்புதமாக ஆடவும் எனக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரே ஒரு மையப்புள்ளி.
நாம் அனைவருமே வாழ்வில் பல திருப்பங்களையும், வளைவுகளையும் சந்திக்கிறோம். நாம் பிரச்சனைகளையே கணித்துக்கொண்டிருந்தால், நாம் எதிர்கொள்ளும் காரியங்கள் கையாள முடியாதவைகளாய் தோன்றும், நம்மை மயக்கமடைய செய்து கிழே விழத்தள்ளும். வேதம் நம்மை நினைவூட்டுகிறது, நாம் நமது மனதை உறுதியாய் வைத்துக்கொண்டால் அதாவது தேவனை கவனிப்போமானால், அவர் நம்மை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். (ஏசாயா 26:3). பூரண சமாதானமென்றால் நம் வாழ்வில் எவ்வளவு திருப்பங்கள் வந்தாலும், நாம் அமைதியாக இருக்கலாம், நம்முடைய பிரச்சனைகள், சோதனைகள் அனைத்திலும் தேவன் நம்மோடிருப்பார் என்ற நிச்சயத்தோடு இருக்கலாம். அவரே "நித்திய கன்மலையாயிருக்கிறார்" (வ.4) நம்முடைய கண்கள் பதியவேண்டிய முக்கியபுள்ளி அவரே ஏனெனில் அவருடைய வாக்குத்தத்தங்கள் மாறாதவைகள்.
அவரிடம் ஜெபத்தின் மூலமாக சேர்ந்து அவருடைய வாக்குத்தத்தங்களை வேத வசனங்களில் வாசித்து, நம் கண்களை அவர் மேலேயே பதித்து ஒவ்வொரு நாளையும் கடந்துசெல்வோமாக. வாழ்நாள் முழுதும் நாம் அற்புதமாய் கடந்துச் செல்ல நம் தேவனை, நம் நித்திய கன்மலையை உதவிக்காக சார்ந்துகொள்வோமாக.

எழும்புதல்
ஒரு விமானம் தாங்கி கப்பலை நாங்கள் சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரு சிறியரக போர்விமானத்தின் விமானி, இத்தகைய குறுகலான ஓடுபாதையில் விமானங்கள் உயரே எழும்ப மணிக்கு 56 கி.மீ வேகத்தில் காற்றடிக்க வேண்டும் என விளக்கினார். இந்த நிலையான காற்றுக்காக கப்பலின் கேப்டன், கப்பலை காற்றுமுகமாய் திருப்புவார். "விமானத்தின் பின்புறத்திலிருந்து தானே காற்றடிக்க வேண்டும்?" என நான் கேட்டேன். "இல்லை விமானம் காற்றுக்கெதிரே பறக்க வேண்டும், அது உயரே எழும்ப அதுதான் ஒரே வழி" என விமானி பதிலளித்தார்.
வாக்குப்பண்ணப்பட தேசத்திலே தம்முடைய ஜனங்களுக்கு காத்துக்கொண்டிருந்த "காற்றுமுகத்தினூடே" அவர்களை நடத்த யோசுவாவை தேவன் அழைத்தார். யோசுவாவிற்கு இரண்டு காரியங்கள் தேவைப்பட்டது. உட்புறமாக அவர், "மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு."(யோசுவா 1:7) இருக்க வேண்டும் மேலும் வெளிப்புறமாக அவருக்கு சவால்கள் இருக்க வேண்டும். அரனான பட்டணங்களை எதிர்கொள்ளுதல் (6:1–5), மனசோர்வுண்டாக்கும் தோல்விகள் (7:3–5), ஆகானின் திருட்டு (7:16–26), மேலும் தெடர்ச்சியான யுத்தங்கள் (அதிகாரங்கள் 10-11) என இதுபோன்ற அனுதின பணிகளில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை வழிநடத்த வேண்டும்.
தேவனுடைய கற்பனைகளிலிருந்து யோசுவாவிற்கு உந்துதல் உண்டான காலமுழுதும் யோசுவாவின் முகத்திற்கெதிரே வீசிய காற்று அவருடைய வாழ்வையே உயரே எழுப்பியது. அவர் "நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க..அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிரு(க்க)..இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிரு(க்க)" வேண்டும், "அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்" (வ.7 -௮) என்று தேவன் கூறினார்.
என்ன நடந்தாலும் தேவனுடைய வழிகளை பின்பற்ற தீர்மானித்துள்ளீர்களா? சவால்களை எதிர்பாருங்கள். தைரியமாக காற்றுமுகத்திற்கெதிரே பறந்துபோங்கள், நீங்கள் உயரே எழும்புவதை காண்பீர்கள்.

காணப்படுதல்
வழிகாட்டுதலை குறித்த ஒரு கட்டுரையில் ஹன்னா ஸ்செல் என்பவர், வழிகாட்டியானவர் ஆதரிப்பவராக, சவால் மிக்கவராக, ஊக்கமளிப்பவராக இருப்பது அவசியம் ஆனால் "முதலாவதும், மிக முக்கியமானதும் யாதெனில் ஒரு நல்ல வழிகாட்டி உங்களை காண வேண்டும்..... அறியப்படுதல் என்பது விருதுகளினாலும், பிரபலமடைவதினாலும் மட்டும் உண்டாவதில்லை சாதாரணமாக 'காணக்கூடியவராய்' இருப்பதனாலும் தான், அதுவே மனிதனின் அடிப்படை தேவை. மக்கள் அறியப்பட்டவர்களாய், அங்கீகரிக்கப்பட்டவர்களாய், நம்பிக்கைக்குரியவர்களாய் இருக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில், பர்னபா என்பவர் (அவருடைய பெயருக்கு "ஆறுதலின் மகன்" என்று அர்த்தம்) தன்னை சுற்றிலுமிருந்த மக்களை சந்திப்பதில் சாமர்த்தியசாலி. அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 இல், மற்ற சீஷர்கள் சவுலை குறித்து பயந்திருந்தபோது, இவரோ அவனுக்கு ஒரு வாய்ப்பளிக்க விரும்பினார்.(வ.26) சவுல் (இவன் பவுல் என்றும் அழைக்கப்பட்டான் 13:9) இயேசுவின் விசுவாசிகளை துன்புறுத்துகிறவனாக இருந்தான்.(8:3), ஆகையால் அவனை உண்மையான சீடனாக மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை (9:26).
பல நாட்கள் கழித்து, பவுலும், பர்னபாவும் அவர்கள் "கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று" (15:36) போய்ப்பார்க்க தங்களோடு மாற்குவை கூட்டிக்கொண்டு போவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அவர்களோடு மாற்கு வருவது பவுலுக்கு ஏற்றதாய் தோன்றவில்லை காரணம் அவர், அவர்களை இதற்கு முன்னரே தனியேவிட்டு பிரிந்து போயிருந்தார். சுவாரசியமாக, பவுல் பின்னர் மாற்குவின் உதவியை கோருகிறார் "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11).
பவுல், மாற்கு என இருவரையும் சந்திக்க பர்னபா நேரம் ஒதுக்கினார். ஒருவேளை நாம் பர்னபாவை போல மற்றொருவரிடம் உள்ள ஆற்றலை உணருபவராக இருக்கலாம் அல்லது ஒரு ஆவிக்குரிய வழிகாட்டி தேவைப்படும் நபராக நாம் இருக்கலாம். நாம் ஊக்குவிக்க கூடிய நபர்களுக்கு நேராக நம்மை நடத்தவும், நம்மை ஊக்குவிக்க கூடியவர்களை நமக்கு நேராக கொண்டு வரவும் தேவனை நாம் கேட்போம்.

ஞானமுள்ள அறிவுரை
ஏப்ரல் 2019 அன்று பாரிசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து, அதின் பண்டைய கால மர உத்திரமும், கூரையில் செய்யப்பட்டிருந்த ஈயமும் இணைந்து அடுப்பைப் போல எரிந்து, அதிக சூட்டின் நிமித்தம் நிற்க கூடாமல் விழுந்தது. தேவாலயத்தின் உச்சி கோபுரம் பயங்கரமாக விழுந்த பின்னர், இப்பொழுது அதின் மணி கூண்டுகளுக்கு நேராக நெருப்பின் கவனம் திரும்பியது. எஃகினால் செய்யப்பட்ட ராட்சத மணிகளின் மரச்சட்டங்கள் எரிந்துவிட்டால், அவைகள் நிலைகுலைந்து இரு மணி கூண்டுகளையும் கீழே விழத்தள்ளி, தேவாலயத்தை தரைமட்டமாக்கி விடும்.
தன்னுடைய தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட பாரிஸ் நகரத் தீயணைப்புத் துறையின் படைத்தலைவர் ஜெனரல் கல்லெட், அடுத்து என்ன செய்வதென்ற யோசனையிலிருந்தார். அப்பொழுது ரெமி என்ற தீயணைப்பு வீரர் தயக்கத்தோடு அவரை அணுகி, "மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, நான் கோபுரங்களின் வெளிப்புறமாக மேலே நீர் குழாய்களின் மூலம் தண்ணீரை பீச்சி அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லுகிறேன்" என்றார், ஆனால் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு படைத்தலைவர் இந்த யோசனையை நிராகரித்தார். இருந்தபோதிலும் ரெமி தொடர்ந்து அவரோடு தன் கருத்தை வலியுறுத்தினார். சீக்கிரத்தில் படைத்தலைவர் கல்லெட் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருந்தது, இளைய தீயணைப்பு வீரரின் அறிவுரையை பின்பற்றுதல் அல்லது தேவாலயம் இடிவதற்கு அதை விட்டுவிடுதல்.
ஆலோசனையை பின்பற்றுவதை குறித்து வேதம் அதிகமாக பேசுகிறது. சில சமயங்களில், வாலிபர் முதியோருக்கு கொடுக்கும் மரியாதையை இப்படி குறிப்பிடுவதாக இருந்தாலும் (நீதிமொழிகள் 6:20-23), பெரும்பாலும் அப்படி இல்லை. நீதிமொழிகள் சொல்கிறது, "ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்."(12:15) "நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."(24:6.) மேலும், "மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்" (12:15) என்று. ஞானமுள்ளவர்கள் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பர், அதை கொடுப்பவர் எவ்வயதினராயினும், எந்த பதவியிலிருப்பவராயினும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
ஜெனரல் கல்லெட், ரெமிக்கு செவிகொடுத்தார். எரிந்துகொண்டிருந்த மணிகூண்டுகளின் சட்டங்களில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, சிறுது நேரத்திலேயே தேவாலயம் காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு உங்களுடைய எந்த பிரச்சனைக்கு தேவாலோசனை தேவை? சிலசமயம் தேவன் தாழ்மை உள்ளவர்களை இளையவர்களின் வாய்வார்த்தைகளை கொண்டும் நடத்துகிறார்.