வாழும்போதே வழங்குங்கள்
ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நாட்களில் தன்னுடைய செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கோடீஸ்வரர் தன்னுடைய பணத்தை வடக்கு அயர்லாந்தில் அமைதி திரும்புவதற்காகவும், வியட்நாமின் சுகாதார அமைப்பை நவீனமாக்கவும் தானம் செய்தார். அவர் இறக்கும் முன் நியூயார்க்கில் உள்ள ஒரு தீவை தொழில்நுட்ப மையமாக மாற்ற 350 மில்லியன் டாலர் (35 கோடி) பணத்தை செலவு செய்தார். அவர், “நான் வாழும்போது தர்மம் செய்வதில் வலுவான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். தாமதமாய் வழங்குவதில் அர்த்தம் இல்லை. இறந்த பின் கொடுப்பதைவிட வாழும்போது கொடுப்பதே அதிக மகிழ்ச்சியைத் தரும்,” என்று கூறுகிறார். வாழும்போதே வழங்குங்கள் - என்னே அற்புதமான அணுகுமுறை!
பிறவிக் குருடனைப் பற்றி யோவான் குறிப்பிடும்போது இயேசுவின் சீஷர்கள், “யார் செய்த பாவம்” (9:2) என்று கேட்டனர். அதற்கு இயேசு, “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்” என்கிறார் (வச. 3-4). நம்முடைய வேலை இயேசு போன்று அற்புதங்களை நிகழ்த்துவதாய் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவற்றை அன்பின் ஆவியோடே நாம் செய்ய முன்வரவேண்டும். நம்முடைய நேரம், பொருட்கள், செய்கைகள் ஆகிய எல்லாவற்றிலும் தேவனை பிரதிபலிக்கும்பொருட்டு நாம் கொடுக்க முன்வருதல் அவசியம்.
தேவன் உலகை இவ்வளவாய் அன்பு கூர்ந்ததால், அவரைத் தந்தார். பதிலுக்கு நாமும் வாழும்போதே கொடுத்து வாழப் பழகுவோம்.

கற்றுக்கொள்ள விருப்பம்
இளைஞர் ஒருவரிடம் நீங்கள் எப்படி பத்திரிக்கை நிருபரானீர்கள் என்று கேட்டபோது, அவருடைய கல்வியின் மீது அவருடைய தாயாருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான் காரணம் என்று பதிலளித்தார். அவரின் அம்மா தினந்தோறும் சுரங்கப்பாதையில் பயணம் செய்யும்போது, அங்கே கிடக்கும் மீதமுள்ள செய்தித்தாள்களைச் சேகரித்துக் கொண்டுவந்து தருவாராம். அவருக்கு விளையாட்டு செய்திகளை விரும்பிப் படிக்க பிடிக்கும் என்றாலும், அந்த செய்தித்தாள்கள் அவருக்கு உலக அறிவை அறிமுகம் செய்து வைத்தது. இறுதியில், அவருக்கு இந்த குறிப்பிட்ட துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
குழந்தைகள் இயற்கையாகவே கற்பதில் ஆர்வமுடனும் விருப்பத்துடனும் இருக்கிறார்கள். வேதாகமத்தை சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தும்போது, தேவனுடைய அசாதாரணமான வாக்குத்தத்தங்களும், வேதாகம கதாநாயகர்களின் உற்சாகமான சரித்திரங்களும் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். வேதாகம அறிவில் தேறும்போது, பாவத்தின் விளைவுகள், மனம் திரும்புதலுக்கான தேவை, தேவன் மீது வைக்கும் விசுவாசத்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறித்து தெளிவாய் புரிந்துகொள்வார்கள். உதாரணமாக, நீதிமொழிகளின் 1ம் அதிகாரம் ஞானத்தால் அடையும் நன்மைகளைப் பற்றி நேர்த்தியாய் அறிமுகப்படுத்துகிறது (நீதி. 1:1-7). ஞானத்தைக் குறித்த இந்த போதனைகள் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
குறிப்பாய் ஆவிக்குரிய சத்தியங்களை கற்பதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது விசுவாசத்தில் உறுதியாய் வளருவதற்கு வழிவகுக்கிறது. ஆண்டாண்டுகளாய் விசுவாசத்தில் நடக்கிறவர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இந்த தெய்வீக ஞானத்தை பெற்றுக்கொள்ள தொடர்ந்து பிரயாசப்படலாம். “புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் தேறுவான்" என்று நீதிமொழிகள் 1:5 ஆலோசனைக் கூறுகிறது. நாம் நமது இருதயத்தையும் மனதையும் அவருடைய வழிகாட்டலுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் திறந்து வைத்தால், தேவன் நமக்கு கற்றுக்கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டார்.

விழிப்புடன் இரு!
ஒரு ஜெர்மானிய வங்கி ஊழியர் 62.40 யூரோக்கள் பணத்தை ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யும்போது, திடீரென்று ஒரு குட்டித் தூக்கம் தூங்கிவிட்டார். எனவே அவரின் கைவிரல் தவறுதலாக “2” என்ற பட்டனை அழுத்திவிட, 222 மில்லியன் யூரோக்கள் (தோராயமாக 1959 கோடி ரூபாய்) அந்த வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது. அதனிமித்தம், அந்த பரிமாற்றத்தை சரிபார்க்கவேண்டிய அவருடைய சக வங்கி ஊழியரின் வேலையும் பறிபோனது. அந்த பிழை கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டாலும், அவருடைய இந்த செயல் வங்கி ஊழியர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்தது.
சீஷர்கள் விழிப்பாய் இல்லையென்றால் அவர்கள் பெரிய தவரை செய்ய நேரிடும் என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். இயேசு கெத்செமனே என்னும் இடத்திற்கு அவர்களை அழைத்து வந்து ஜெபம்பண்ணும்போது, அவர் இந்த உலக வாழ்வில் அதுவரை அனுபவித்திராத அளவு துக்கமும் வியாகுலமும் அடைந்தார். அவர் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரிடம் ஜெபிக்கவும், அவரோடே கூட விழித்திருக்கும்படியாகவும் கூறினார் (மத்தேயு 26:38). ஆனால் அவர்கள் தூங்கிவிட்டார்கள் (வச. 40-41). அவர்கள் ஜெபிக்கவும் விழித்திருக்கவும் இயலாமல் அவரை மறுதலித்து தோற்றனர். கிறிஸ்துவிற்கு பெரிய தேவை ஏற்பட்டபோது சீஷர்கள் ஆவிக்குரிய விழிப்புணர்வில் குறைவுபட்டனர்.
நாம் இயேசுவின் வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தி, ஆவிக்குரிய விழிப்புணர்வோடும் அர்ப்பணிப்புடனும் ஜெபத்தில் நேரம் செலவிடுவோம். அவ்வாறு செய்யும்போது எல்லா சோதனைகளையும் சகிக்கவும், கிறிஸ்துவை மறுதலிக்கும் பெரிய தவறை செய்யாமல் இருக்கும்படியாகவும் அவர் நம்மை பெலப்படுத்துவார்.

அன்பின் சிறந்த பரிசு
என் மகன் ஜெஃப் ஒரு கடையை விட்டு வெளியே வந்தபோது, அங்கே தரையில் ஒரு நடைப்பயிற்சி சட்டகம் (வாக்கர்) கிடந்ததைப் பார்த்தான். யாரோ அதை தவறவிட்டிருக்கிறார்கள் என்று ஊகித்து, அங்கே யாருக்காவது ஏதாவது உதவி தேவைப்படுமோ என்று அந்தக் கட்டிடத்திற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆதரவற்ற நபர் நடைபாதையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான்.
ஜெஃப் அவரை எழுப்பி நன்றாக இருக்கிறாரா என்று விசாரித்தான். “நான் இறந்து போவதற்காகக் குடித்தேன். என்னுடைய கூடாரம் புயலில் சிதைந்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். நான் வாழ விரும்பவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறினார்.
ஜெஃப் ஒரு கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தை தொடர்புகொண்டான். தன் வீட்டிற்கு உடனே ஓடிப்போய் தன்னுடைய முகாமிடும் கூடாரத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த மனிதரிடம் “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டபோது, அவரும் “ஜெஃப்ரி” என்றார். ஜெஃப் தன்னுடைய பெயரும் அதுதான் என்பதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால் “அப்பா, அது நானாகக் கூட இருக்கலாம்” என்று பின்பு என்னிடம் கூறினான்.
ஜெஃப் ஒரு காலத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாயிருந்தவன். தேவனிடமிருந்து அவன் பெற்ற இரக்கத்தினால் தான் அந்த மனிதருக்கு உதவி செய்ய முன்வந்தான். ஏசாயா தீர்க்கதரிசி “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்பண்ணினார்," (ஏசாயா 53:6) என்று தேவன் நம்மீது வைத்த இரக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். கிறிஸ்து நம் மீட்பர்; நம்மை விரக்தியில் தொலைந்து போகவோ, தனிமையாகவோ, நம்பிக்கை இழக்கவோ அனுமதிக்கவில்லை. அவர் நம்மை அடையாளங்கண்டு தம்முடைய அன்பிலே தூக்கியெடுத்து, நாம் மீட்பைப் பெற்று அவருக்குள் புதிதான வாழ்க்கையைத் தொடர நம்மை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதை விட பெரிய பரிசு வேறெதுவும் இல்லை.

புயலை எதிர்கொள்ளுங்கள்
ஏப்ரல் 3, 1968 அன்று மாலை அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் அமைந்திருந்த மெம்பிஸ் என்ற நகரத்தை ஒரு பயங்கரமான புயல் தாக்கியது. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், உடல் நலமின்மையால் சோர்ந்திருந்தார். எனவே அவர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சொற்பொழிவை திருச்சபையில் நிகழ்த்த தீர்மானிக்கவில்லை. அவருடைய பேச்சைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் வந்திருந்தனர். எனவே அவர் அங்கு சென்று நாற்பது நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். “நான் மலையுச்சியிலிருந்து” என்று தலைப்பிடப்பட்ட அந்த சொற்பொழிவே அவரின் மிகச்சிறந்த சொற்பொழிவாகக் கருதப்படுகிறது.
மறுநாள் லூதர் கிங் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனாலும் அவருடைய சொற்பொழிவு வருத்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் குறித்த நம்பிக்கையைக் கொடுத்தது. எபிரெயர் நிருபம், யூத விசுவாசிகள் கிறிஸ்துவின் மீது வைத்த விசுவாசத்திற்காக அச்சுறுத்தல்களை சந்தித்தபோது, அவர்களை உற்சாகப்படுத்த எழுதப்பட்டது. “ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி (எபிரெயர் 12:12) என்று அவர்களை உற்சாகப்படுத்துகிறது. அவர்கள் யூதர்கள் என்பதினால் அந்த ஏவுதல் உண்மையிலேயே ஏசாயா தீர்க்கதரிசியிடத்திலிருந்து வருகிறது என்று அறிவர் (ஏசாயா 35:3). ஆனால் இப்பொழுது கிறிஸ்துவின் சீஷர்களாய் நாம் “விசுவாசத்தை துவக்கிறவரும் முடிக்கிற வருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” அழைக்கப்பட்டிருக்கிறோம் (எபிரெயர் 12:1-2).
நாம் அவ்வாறு செய்யும்போது இளைப்புள்ளவர்களாய் நம்முடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகமாட்டோம் (வச. 3). புயல், பெருங்காற்று, மழை ஆகியவைகள் நம்முடைய வாழ்க்கையிலும் வீசும். ஆனால் நாம் இயேசுவில் நிலைப்பதின் மூலம் வாழ்வின் கடும்புயலைக் கடக்கமுடியும்.