
அது இரவாயிருந்தது
எலி விஸேல் என்பவரின் “இரவு" என்ற நாவல், இனப்படுகொலையின் பயங்கரங்களால் நம்மை அச்சுறுத்துகிறது. நாசிப்படைகளின் மரண முகாம்களில் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை தழுவின இந்நாவலில், வேதாகமத்தின் யாத்திராகம புத்தகத்தின் சம்பவங்களை விஸேல் நேர்மாறாக ஒப்பிட்டுள்ளார். மோசேயும், இஸ்ரவேலர்களும் முதல் பஸ்காவிற்கு பின் அடிமைத்தனத்திலிருந்து தப்பினர் (யாத்திராகமம் 12). ஆனால் இங்கே பஸ்காவிற்கு பின்னர் நாசிகள் யூத தலைவர்களை கைது செய்தனர் என்று விஸேல் கூறுகிறார்.
விஸேலின் முரண்பாட்டை நாம் விமர்சிக்கும் முன், வேதாகமத்தின் அதேபோன்ற திருப்பம் நிறைந்த சம்பவம் ஒன்றுள்ளது. பஸ்காவின் இரவில், தேவ ஜனங்கள் தம் துன்பங்களிலிருந்து விடுவிக்க எதிர்பார்க்கப்பட்ட இயேசு, அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தன்னை கொல்லக்கூடியவர்கள் தம்மை கைதுசெய்ய அனுமதிக்கிறார்.
இயேசு கைதாவதற்கு முன்னான புனித சம்பவத்திற்கு யோவான் நம்மை அழைத்துச் செல்கிறார். தனக்கு முன்பாக இருந்ததைக் குறித்து “ஆவியில் கலங்கினவராக,” அக்கடைசி இரவு போஜனத்தில் தாம் காட்டிக்கொடுக்கப்படப் போகிறதை இயேசு முன்னறிவித்தார் (யோவான் 13:21). பின்னர், நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத செயலாக, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனுக்கே அப்பத்தை பரிமாறினார். “அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது" (வச. 30) என்று அச்சம்பவம் சொல்கிறது. சரித்திரத்தின் மாபெரும் அநீதி ஆரம்பமானது, இருந்தபோதிலும் இயேசு, “இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்” (வச. 31) என அறிவித்தார். சில மணிநேரங்களில், சீஷர்கள் பீதியுற்று, தோல்வியையும், நிராகரிப்பையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் இயேசுவோ தேவத் திட்டம் அப்படியே செயல்படுவதைப் பார்க்கிறார்.
அந்தகாரம் சூழ்வதைப்போல தோன்றினாலும், தேவன் தம் இருண்ட இரவை எதிர்கொண்டு வெற்றிபெற்றதை நாம் நினைவுகூரலாம். அவர் நம்மோடு வருகிறார். இரவு நீளாது.

அன்பால் சுமக்கப்படுதல்
என் நான்கு வயது பேரன், என் மடியில் அமர்ந்து என் வழுக்கை தலையை மெல்ல தட்டியவாறே, ஏதோ ஆராய்ந்தான். “தாத்தா உங்கள் முடிக்கு என்னானது?” எனக் கேட்டான். நான் சிரித்தவாறே, “ஓ அதுவா, காலப்போக்கில் அது கொட்டிவிட்டது” என்றேன். எதையோ சிந்தித்தவனாய், “அது பரவாயில்லை, நான் என் முடியில் கொஞ்சத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்றான்.
அவன் மனதுருகத்தை எண்ணி புன்னகைத்தவாறே அவனை இறுக்கி அணைத்தேன். அந்த சந்தோஷ தருவாயில் அவன் என்மேல் கொண்ட அன்பை தேவனின் தன்னலமில்லா, உதாரத்துவமான அன்பின் பிரதிபலிப்பாக யோசிக்க ஆரம்பித்தேன்.
ஜி.கே. செஸ்டர்டன், “நாம் பாவம் செய்து வயதுசென்றவர்களானோம், ஆனால் நம் தகப்பன் நம்மை விட இளமையாகவே இருக்கிறார்” என்றெழுதினார். இதன் பொருள் “நீண்ட ஆயுசுள்ளவர்” (தானியேல் 7:9) பாவத்தினால் கறைபடாமல் இருக்கிறார் என்கிறார். தேவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலும் தடுமாற்றமில்லாத நிலையான அன்பினால் நம்மை நேசிக்கிறவர். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்" என்று ஏசாயா 46இல் தம் ஜனங்களுக்கு அவர் அருளிய வாக்கை நிறைவேற்ற அவர் போதுமானவரும், பூரண சித்தமுள்ளவராகவும் உள்ளார் (வச. 4).
ஐந்து வசனங்கள் தள்ளி அவர், “நானே தேவன், எனக்குச் சமானமில்லை” (வச. 9) என விளக்குகிறார். இருக்கிறவராகவே இருக்கிறேன் (யாத்திராகமம் 3:14) என்பவர் நம்மை மிக ஆழமாக நேசிக்கிறார். எனவே கடைசி எல்லையான சிலுவை மரணம் வரைச்சென்று, நம் பாவத்தின் முழுச்சுமையையும் சுமந்தார். இதனால் நாம் அவரிடமாய் திரும்பி, நம் பாரங்கள் நீங்கி அவரை சதாகாலமும் நன்றியோடு ஆராதிக்கலாம்.

நம்மைப்போல, நமக்காக
தன் மகள், அவளுடைய புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது தன் தலைமுடியை இழந்ததால் அதை மறைக்க தொப்பி அணிந்திருப்பதையும், வெளியே தன்னோடு பேரங்காடிக்கு வந்திருக்கும்போதும் அதை கழற்ற அவள் சங்கடப்பட்டதையும் ப்ரீத்தி கவனித்தாள். தன் மகளுக்கு உதவ தீர்மானித்த ப்ரீத்தி, தன் நீண்ட, செழுமையான கூந்தலை மழித்து தன் மகளைப்போலவே தானும் மாறி, அவளின் வலியை அனுபவிக்க தெரிந்துகொண்டாள்.
ப்ரீத்தி தன் மகளுக்கு காட்டிய அன்பு, தேவன் தம் பிள்ளைகளுக்கு காட்டும் அன்பை பிரதிபலிக்கிறது. ஏனெனில் அவருடைய பிள்ளைகளாகிய நாம், “மாம்சத்தையும், இரத்தத்தையும் உடையவர்கள்" (எபிரெயர் 2:14) என்பதினால், இயேசு நம்மைப்போல மனிதனாகி, நம்மை மரணத்தின் வல்லமையிலிருந்து மீட்கும்பொருட்டு, “மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (வச. 14). நம்மை தேவனோடு ஒப்புரவாக்க, அவர் “எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது" (வச. 17).
ப்ரீத்தி, தன் மகளின் தாழ்வு மனப்பான்மையை மேற்கொள்ளுவதற்கு அவளுக்கு உதவ விரும்பினாள். எனவே அவளும் தன் மகளைப் “போலவே” மாறினாள். ஆனால் அதைக்காட்டிலும் பெரிய பிரச்சனையான மரணத்தின் பிடியிலிருந்து நம்மை மீட்க இயேசு நமக்கு உதவினார். அவர் நம்மைப்போலவே மாறி, நம் பாவத்தின் விளைவை தன் மீது ஏற்றுக்கொண்டு, நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் மரித்து, மரணத்தை நமக்காக மேற்கொண்டார்.
நம்மைப் போல் மனிதனாக இயேசு கொண்டிருந்த விருப்பம், தேவனுடனான நம்முடைய உறவை உறுதிபடுத்தியது. அதுமட்டுமின்றி நம்முடைய கடினமான நேரங்களில் அவரை நம்பச்செய்தது. சோதனைகளையும், கஷ்டங்களையும் நாம் எதிர்கொள்கையில், பெலத்திற்கும், ஆதரவிற்கும் அவரை அண்டிக்கொள்ளலாம். ஏனெனில், அவர் “உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்” (வச. 18). ஒரு அன்பான தகப்பனைப் போல நம்மைப் புரிந்துகொண்டு, நம் மீது அக்கறை கொள்கிறார்.

ஒவ்வொரு நொடியும் முக்கியம்
நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் நூலக காப்பகத்தில் உள்ள ஒரு நின்றுபோன கடிகார முட்கள் திகிலான ஒரு கதையை சொல்கின்றன. அவை சரியாக 8:19 மற்றும் 56 வினாடிகள் நேரத்தைக் காட்டும், அதுவே அக்கடிகாரத்தின் சொந்தக்காரரான எலிசா மிச்சேல் என்பவர், அபலாசியன் மலைப்பகுதிகளில் உள்ள நீர்வீழ்ச்சியில் ஜூன் 27, 1857 அன்று காலை சறுக்கிவிழுந்து மரித்த சரியான நேரம்.
தற்பொழுது அவர் பெயரிலேயே மவுண்ட் மிச்சேல் என்றழைக்கப்படும் அந்த சிகரத்தில், அச்சிகரமே மிசிசிபியின் கிழக்கில் உள்ள உயரமான சிகரம் என்ற தன் கூற்றை நிரூபிக்க சில ஆதாரங்களை அப்பொழுது பல்கலைக்கழக பேராசிரியர் மிச்சேல் திரட்டிக்கொண்டிருந்தார் (அவர் கூற்று சரியே). அவர் விழுந்த இடத்தின் அருகேயேயிருந்த மலை உச்சியில் தான் அவர் கல்லறையும் உள்ளது.
சமீபத்தில், நான் அந்த மலையுச்சியில் ஏறினபோது தான் என் அழிவுத்தன்மையையும், மிச்சேலையும் ஒப்பிட்டு, எங்கள் இருவருக்கும் எவ்வளவு குறுகிய காலமே உள்ளது என்றுணர்ந்தேன். மேலும் இயேசு தன் வருகையை குறித்து தன் சீஷர்களிடம் ஒலிவ மலையில் கூறிய வார்த்தைகள் “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார். ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்” (மத்தேயு 24:44) என்று கூறியதை சிந்தித்தேன்.
அவர் வந்து தம் நித்திய ராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நாளையோ அல்லது நம்மை இவ்வுலகிலிருந்து தம்மிடமாய் அழைக்கப்போகும் காலமோ நம்மில் யாருக்கும் தெரியாது என்பதை இயேசு தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆயத்தமாயிருக்கவும், விழித்திருக்கவும் (வச. 42) அவர் நமக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
டிக், டிக் என கடிகார முள்ளைப் போல நம் வாழ்க்கை வேகமாய் ஓடுகிறது. ஆனால் எவ்வளவு காலம்? நம் வாழ்வின் நொடிகளை நம் இரக்கமுள்ள இரட்சகரின் அன்பில் கழித்து, அவருக்காக பணியாற்றிக் காத்திருப்போமாக.
