என் நான்கு வயது பேரன், என் மடியில் அமர்ந்து என் வழுக்கை தலையை மெல்ல தட்டியவாறே, ஏதோ ஆராய்ந்தான். “தாத்தா உங்கள் முடிக்கு என்னானது?” எனக் கேட்டான். நான் சிரித்தவாறே, “ஓ அதுவா, காலப்போக்கில் அது கொட்டிவிட்டது” என்றேன். எதையோ சிந்தித்தவனாய், “அது பரவாயில்லை, நான் என் முடியில் கொஞ்சத்தை உங்களுக்குத் தருகிறேன்” என்றான்.

அவன் மனதுருகத்தை எண்ணி புன்னகைத்தவாறே அவனை இறுக்கி அணைத்தேன். அந்த சந்தோஷ தருவாயில் அவன் என்மேல் கொண்ட அன்பை தேவனின் தன்னலமில்லா, உதாரத்துவமான அன்பின் பிரதிபலிப்பாக யோசிக்க ஆரம்பித்தேன்.

ஜி.கே. செஸ்டர்டன், “நாம் பாவம் செய்து வயதுசென்றவர்களானோம், ஆனால் நம் தகப்பன் நம்மை விட இளமையாகவே இருக்கிறார்” என்றெழுதினார். இதன் பொருள் “நீண்ட ஆயுசுள்ளவர்” (தானியேல் 7:9) பாவத்தினால் கறைபடாமல் இருக்கிறார் என்கிறார். தேவன் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலும் தடுமாற்றமில்லாத நிலையான அன்பினால் நம்மை நேசிக்கிறவர். “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” என்று ஏசாயா 46இல் தம் ஜனங்களுக்கு அவர் அருளிய வாக்கை நிறைவேற்ற அவர் போதுமானவரும், பூரண சித்தமுள்ளவராகவும் உள்ளார் (வச. 4).

ஐந்து வசனங்கள் தள்ளி அவர், “நானே தேவன், எனக்குச் சமானமில்லை” (வச. 9) என விளக்குகிறார். இருக்கிறவராகவே இருக்கிறேன் (யாத்திராகமம் 3:14) என்பவர் நம்மை மிக ஆழமாக நேசிக்கிறார். எனவே கடைசி எல்லையான சிலுவை மரணம் வரைச்சென்று, நம் பாவத்தின் முழுச்சுமையையும் சுமந்தார். இதனால் நாம் அவரிடமாய் திரும்பி, நம் பாரங்கள் நீங்கி அவரை சதாகாலமும் நன்றியோடு ஆராதிக்கலாம்.