
பொய்யின் பிதா
விக்டர், ஆபாச படங்களுக்கு அடிமையானான். அவன் நண்பர்கள் பலர் அத்தகைய படங்களை பார்ப்பதுண்டு. இவனும் நேரத்தை போக்க எண்ணி. அதில் சிக்கிக்கொண்டான். ஆனால், அது எவ்வளவு பெரிய தவறென்பதை இப்போது உணர்கிறான், அவன் தேவனுக்கு விரோதமாய் பாவம் செய்தான், மேலும் அவன் மனைவியும் அவனைப் பிரிந்தாள். எனவே, இனி அதை பார்ப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதால், அவைகளைப் பார்க்கமாட்டான். ஆனாலும், இது மிகவும் தாமதமோ என்று சந்தேகிக்கிறான். அவன் திருமண வாழ்வு மீட்கப்படுமா? அவன் முற்றிலுமாய் விடுதலைப்பெற்று, மன்னிக்கப்பட முடியுமா?
எல்லோரும் இதைச் செய்கிறார்கள். இதிலென்ன தவறு?.என்று நம் எதிரியாகிய பிசாசு, சோதனைகளை அற்ப விஷயங்களைப்போல கொண்டுவருவான். ஆனால் அவனுடைய திட்டங்களில் நாம் பிடிபட்ட மாத்திரத்தில், அவன் நம்மை விழத்தள்ளுகிறான். 'இது மிகவும் தாமதம்! நீ வெகு தூரம் சென்றுவிட்டாய்! இப்போது உனக்கு நம்பிக்கை ஏதுமில்லை!' என்றும் கூறுகிறான்.
நாம் ஆவிக்குரிய யுத்தத்தில் ஈடுபடும்போது நம்மை வீழ்த்த என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ, பிசாசு அதையெல்லாம் சொல்வான். ஆனால் இயேசுவோ, “அவன் (பிசாசு) ஆதிமுதற் கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்” (யோவான் 8:44) என்கிறார்.
பிசாசு பொய்யனென்றால், நாம் அவனுக்கு செவிசாய்க்க கூடாது. நம்முடைய பாவம் பெரிய விஷயமல்ல எனும்போதும், நமக்கு இனி நம்பிக்கையே இல்லை எனும்போதும், நாம் செவிகொடுக்க கூடாது. இத்தீமையானவனின் வார்த்தைகளை புறக்கணிக்கவும், மாறாக அவர் சத்தத்திற்கு செவிகொடுக்கவும் இயேசு உதவிசெய்வாராக. “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (வச. 31-32) என்னும் அவருடைய வாக்குறுதியில் நாம் ஆறுதலடைவோம்.

வெளிச்சம் உண்டாகக்கடவது
என் மகளுடைய ஆரம்ப நாட்களில், அவள் பார்த்த பொருட்களின் பெயர்களையெல்லாம் நான் அவளுக்கு சொல்லிக்கொடுப்பது வழக்கம். அவளுக்கு தெரியாத ஒரு புதிய பொருளைத் தொடச்செய்து, அந்த பொருளின் பெயரையும் அவளுக்குக் கற்றுக்கொடுப்பேன். குழந்தையாயிருந்தபோது முதன்முறையாக அவள் “அம்மா, அப்பா” என்று உச்சரிப்பாள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவள் “டைட்” என்ற ஒரு மிட்டாயின் பெயரையே முதன்முறையாக உச்சரித்தாள். அதை அவள் உச்சரிக்கும்போது அவளுக்கு நான் சமீபத்தில் கற்றுக்கொடுத்திருந்த வெளிச்சம் என்று பொருள்படும் “லைட்” என்ற ஆங்கில வார்த்தையையே தவறி உச்சரித்தாள்.
வெளிச்சம் என்பது, தேவன் வேதத்தில் பேசின முதல் வார்த்தைகளில் ஒன்றாக நமக்காக பதிவாகியுள்ளது. தேவ ஆவியானவர் இருளின்மேல் அசைவாடி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்த பூமியில், “வெளிச்சம் உண்டாகக்கடவது” (ஆதியாகமம் 1:3) என்று தேவன் தம் சிருஷ்டிப்பிற்கு வெளிச்சத்தை அறிமுகப்படுத்துகிறார். அதை அவர் நல்லது என்றும் சொன்னார். வேதம் அதை முழுமையாய் ஆமோதிக்கிறது: தேவனுடைய வார்த்தை பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான் (சங்கீதம் 119:130). “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” என்றும், தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஜீவ ஒளியைத் தருவதாகவும் இயேசு அறிவிக்கிறார் (யோவான் 8:12).
சிருஷ்டிப்பு பணியில், தேவன் முதலாவது வெளிச்சம் உண்டாகவே பேசினார். அவருடைய வேலையை செய்வதற்கு வெளிச்சம் தேவை என்பதினால் அல்ல; மாறாக, அது நமக்காக படைக்கப்பட்டது. அவரைப் பார்ப்பதற்கும், அவர் கைவண்ணத்தை நம்மை சுற்றியுள்ள சிருஷ்டியில் பார்க்கவும், தீமையிலிருந்து நன்மையை அடையாளப்படுத்துவதற்கும், மேலும் இந்த பரந்த உலகில் இயேசுவை பின்பற்றுவதற்கும் நமக்கு ஒளி அவசியப்படுகிறது.

இராக்காலத்தின் ஊழியக்காரர்கள்
அந்த தீவிர சுகாதார மருத்துவமனையில் அதிகாலை 3 மணி. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே நாலாவது முறையாக அந்த கவலையுற்ற நோயாளி அழைப்பு மணியை அழுத்துகிறார். சற்றும் சலிப்பின்றி அந்த இரவுப்பணி செவிலியர் பதிலளிக்கிறார். உடனே மற்றொரு நோயாளி பராமரிப்பிற்காக அலறுகிறார். இதுவும் அச்செவிலியரை ஆச்சரியப்படுத்தவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன், தன் மருத்துவமனையின் பகல்நேர பரபரப்பை தவிர்க்கவே இரவுப்பணியை கேட்டுப்பெற்றாள். அப்பொழுது தான் உண்மை உரைத்தது. இரவுப்பணியில் எப்போதுமே நோயாளிகளை தனியாக தூக்குதல், நகர்த்துதல் போன்ற கூடுதல் பணிகளிருந்தன. மேலும் நோயாளிகளின் நிலையை கூர்ந்து கவனித்து, அவசர நேரங்களில் தக்க மருத்துவரை அழைக்கவும் வேண்டியிருந்தது.
சக இரவுப்பணியாளர்களின் நெருங்கிய நட்பு ஆறுதலாயிருப்பினும், இந்த செவிலியர் போதுமான தூக்கமின்றி அவதிப்படுகிறார். தன் பணி மிக முக்கியமானது என்று கண்டு, தனக்காக ஜெபிக்குமாறு தன் சபையாரை அடிக்கடி கேட்பார். தேவனுக்கே மகிமை! அவர்கள் ஜெபங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அவர் இப்படி துதிப்பது ஒரு இரவுப்பணியாளருக்கு நல்லது. நமக்கும் அது நல்லதே. சங்கீதக்காரன், “இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்” (சங்கீதம் 134:1–2) என்றெழுதுகிறார்.
இந்த சங்கீதம், ஆலய காவலாளர்களாய் இரவும் பகலும் தேவனுடைய ஆலயத்தை பாதுகாக்கும் லேவியர்களின் முக்கியப்பணியை பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான உலகில், இந்த சங்கீதத்தை குறிப்பாக இரவுப்பணியாளர்களுக்கு பகிர்வது ஏற்றதாயிருக்கும், எனினும் நாம் அனைவரும் தேவனை இரவிலும் துதிக்கலாம். சங்கீதக்காரன், “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக” (வச. 3) என்று ஆறதல்படுத்துகிறார்.

ஆவிக்குரிய நோய் கண்டறிதல்
என் மாமனாரின் கணையத்திலிருந்த புற்றுநோய் கட்டியை கிமோ சிகிச்சை கட்டுப்படுத்தியது, ஆனால் பலனளிக்கவில்லை. அக்கட்டி மீண்டும் வளர ஆரம்பிக்க, அவர் வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் தன் மருத்துவரிடம், “இந்த கிமோ சிகிச்சையை நான் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? ஒருவேளை மாற்று மருந்தோ, கதிர்வீச்சு சிகிச்சையை முயற்சிக்கலாமா?” எனக் கேட்டார்.
யூத ஜனங்களும் தங்கள் ஓட்டத்தில் வாழ்வா சாவா என்ற கேள்வியோடிருந்தனர். யுத்தத்தினாலும், பஞ்சத்தினாலும் சோர்ந்துபோன தேவ ஜனங்கள், தங்கள் பிரச்சனைக்கு காரணம் அதிகமான விக்கிரக ஆராதனையா, அல்லது விக்கிரக ஆராதனை போதுமானதாக இல்லையென்பதா என குழம்பினர். வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அதற்குப் பானபலிகளை அதிகம் வார்த்தால், அது தங்களைப் பாதுகாத்து, செழிப்படையச் செய்யும் என முடிவெடுத்தனர் (எரேமியா 44:17).
அவர்கள் மிகவும் தவறாக தங்கள் சூழ்நிலையை புரிந்துகொண்டதாக எரேமியா சொல்கிறார். விக்கிரகத்தை ஆராதிப்பதில் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்று அவர்கள் யோசித்தனர், ஆனால் அந்த விக்கிரகங்களை அவர்கள் வைத்திருந்தது தான் அவர்களின் தவறு. அவர்கள் தீர்க்கதரிசியைப் பார்த்து, “நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்” (வச. 16) என்றார்கள். எரேமியா, “நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்” (வச. 23).
யூதாவைப் போலவே, நாமும் நம்மை சிக்கலில் அகப்படுத்திய பாவங்களை இருமடங்காக்கச் செய்ய தூண்டப்படலாம். உறவில் சிக்கலென்றால் நாம் தனித்து வாழ்கிறோம்; பணப்பிரச்சனை என்றாலும் நம் விருப்பப்படியே செலவுசெய்கிறோம். ஒதுக்கிவைக்கப்பட்டால் நாம் அதற்கு சமமாக மூர்க்கமடைகிறோம். ஆனால் நம் பிரச்சனைகளுக்கு காரணமாயிருந்த விக்கிரகங்கள் நம்மை காப்பாற்றப் போவதில்லை. நாம் இயேசுவிடம் மனந்திரும்பும்போது, அவரே நம் பிரச்சனைகளினூடே நம்மை தூக்கி சுமப்பார்.
