வகை  |  odb

கடும் போராட்டம்

1896ஆம் ஆண்டு எத்தியோப்பியாவின் ஒரு தொலைக்கோடியான இடத்தில், 36 கிலோ எடையுள்ள சிறுத்தை ஒன்று கார்ல் அகேலி என்ற ஆய்வாளரை துரத்தியது. அவரை எட்டிப்பிடித்த அந்த சிறுத்தை, தன்னுடைய தொண்டையை கவ்வ துடித்ததை அவர் நினைவுகூருகிறார். அது முடியாதபோது, அவருடைய வலது கையை தன்னுடைய கொடூரமான பற்களால் கவ்வியது. இருவரும் மணலில் கட்டிப் புரண்டனர். ஒரு நீளமான, கடும் போராட்டம் நிகழ்ந்தது. அகேலி வலுவிழந்தார். யார் முதலில் பலியாவது என்ற நிலை. பின்னர், தன் முழு பலத்தையும் ஒன்றாய் சேர்த்து, அந்த பெரிய மிருகத்தை வெறுங்கையால் மூச்சுத் திணரச் செய்தார்.

இயேசுவை விசுவாசிக்கும் நம் ஒவ்வொருவரும் கடும் போராட்டத்தை தவறாமல் எதிர்கொள்வோமென்றும், நாம் தோற்றதாக எண்ணி நம் முயற்சிகளை கைவிடும் தருணங்களையும் பவுல் அப்போஸ்தலன் விளக்குகிறார். அதற்கு பதிலாக, “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி” (எபேசியர் 6:11,14) நம்மை அறிவுறுத்துகிறார். நம் இயலாமையை எண்ணி பயந்து நடுங்காமல், நாம் நமது பெலத்தை நம்புகிறவர்கள் அல்லவென்றும், தேவனை நம்பி விசுவாசத்தில் அடியெடுத்து வைக்கவும் ஊக்குவிக்கிறார். “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்” (வச. 10) என்று எழுதுகிறார். நம் போராட்டங்களின் மத்தியில், ஜெபத்தில் நாம் கூப்பிடும் தூரத்தில்தான் தேவன் உள்ளார் (வச. 18). 

ஆம்! நமக்கு அநேக போராட்டங்கள் உண்டு. நம்முடைய சுய பெலத்தையும், சாமர்த்தியத்தையும் வைத்து அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. நாம் எதிர்கொள்ளும் சகல தீமைகளையும், எதிரிகளையும் காட்டிலும் தேவன் பெரியவர். 

பிரபஞ்சத்துடன் விளையாட்டு

1980களின் ஆரம்பத்தில், தேவனை நம்பாத ஒரு பிரபலமான வானியலாளர், “ஒரு அதி உன்னத அறிவு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றோடு விளையாடுகிறது என்று பொது அறிவு விளக்கமளிக்கிறது.” என்றெழுதுகிறார். இவ்வுலகில், நாம் காணும் எல்லாவற்றையும் ஏதோவொன்று வடிவமைத்துள்ளது என்பதவருக்கு தெரிகிறது. “இயற்கையில் இயல்பாகவே எந்த சக்தியுமில்லை இல்லை” என்றும் அவர் கூறுகிறார். அதாவது, நம் கண்களுக்குத் தென்படுகிற அனைத்தும் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். இருப்பினும், அந்த விஞ்ஞானிக்கு இறைநம்பிக்கை இல்லை. 

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொரு ஞானி ஆகாயத்தைப் பார்த்து, வேறொரு முடிவுக்கு வருகிறார். “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” என்று தாவீது ஆச்சரியப்படுகிறார் (சங்கீதம் 8:3-4). 

ஆயினும், தேவன் நம்மை விசாரிக்கிறவராயிருக்கிறார். அதி உன்னதமான அறிவாளியாகிய தேவன் நம் சிந்தையை வடிவமைத்து, அவரைப் பார்த்து பிரமிக்கும்படி இவ்வுலகில் நம்மை வைத்திருக்கிறார் என்று அந்த அதி உன்னதமான சிருஷ்டிகரைக் குறித்து பிரபஞ்சமே அறிவிக்கிறது. இயேசுவின் மூலமும், அவர் படைப்பின் மூலமும் தேவனை நாம் அறியலாம். பவுல், “அவர் (கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய... சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர் 1:15-16). 

பிரபஞ்சமுழுதும் அவர் கைவண்ணமே. அவரைத் தேடுபவர்களுக்கு, அந்த அதி உன்னத அறிவாளியாகிய தேவன் தன்னை வெளிப்படுத்துகிறார். 

மனந்திரும்புதலின் பரிசு

“இல்லை, நான் செய்யவில்லை.” ஜேன் தன் பதின்பருவ மகனின் வார்த்தைகளைக் கேட்டாள். அவன் உண்மை சொல்லவில்லை என்றறிவாள். மீண்டும் என்ன நடந்ததென்று சைமனிடம் கேட்குமுன், அவள் ஒரு நிமிடம் ஜெபித்தாள். அவன் தொடர்ந்து தன் தவறை மறுத்தான். கோபத்தில், தன் கைகளை வெடுக்கென உதறி, "எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை" என்றெழுந்து வெளியே நடந்தாள். அவள் தோள் மீது ஒரு கரம் வைக்கப்படுவதையும், சைமன் மன்னிப்பு கேட்பதையும் உணர்ந்தாள். சைமன், பரிசுத்த ஆவியானவரின் உணர்த்துதலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, தன் தவறையுணர்ந்து மனந்திரும்பினான்.
பழைய ஏற்பாட்டு புத்தகமான யோவேலில், ஜனங்கள் தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாக மனந்திரும்பி, “முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்” (2:12) என்று தேவன் அவர்களை அழைத்தார். தேவன் வெளித்தோற்றமான குற்றவுணர்ச்சியை விரும்புகிறவரல்ல; மாறாக, அவர்களின் கடினமான மனப்போக்கை விட்டுவிட்டு, “நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து” தன்னிடம் திரும்பும்படிக்கு அறிவுறுத்துகிறார். மேலும் தேவன் “இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்” (வச. 13) என்று யோவேல் இஸ்ரவேலர்களுக்கு நினைப்பூட்டுகிறார்.
நம் தவறுகளை அறிக்கையிடுவது கடினமான காரியம். பெருமையினால் நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வதில்லை. உண்மையை மறைத்து, 'இது சகஜம்' என்று நம் செயலை நியாயப்படுத்த முயற்சிப்போம். தேவனின் மிருதுவான ஆனால் அழுத்தமான உணர்த்துதலுக்கு செவிகொடுத்து உடனே நாம் மனந்திரும்பினால், அவர் நம்மை மன்னித்து, நமது பாவங்களற நம்மைக் கழுவி தூய்மையாக்குவார் (1 யோவான் 1:9). நம் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை அறிந்து குற்றமனசாட்சிக்கும், நிந்தைக்கும் நீங்கலாகி வாழலாம்.

சிறப்பாய் முடியுங்கள்

என் நாற்பது நிமிட உடற்பயிற்சியின் கடைசி நிமிடங்களை நெருங்கும்போது, என் உடற்பயிற்சி ஆலோசகர், “சிறப்பாய் முடியுங்கள்” என்று கத்துவார். நான் அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் அநேகர், பயிற்சி நிறைவுறும் முன் அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயிற்சியை துவங்குவதுப் போலவே, அதை நிறைவுச்செய்வதும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். மனித உடல் தொடர்ச்சியாக இயங்குகையில், அது தளரும் அல்லது தோயும் என்றும் அறிவார்கள்.
இது, நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் பொருந்தும். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, தான் அதிக உபத்திரவத்தை சந்திக்கப்போகிகிறதை அறிந்து, எருசலேமுக்கு போகையில் பவுல், எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு தன் ஓட்டத்தை சிறப்பாய் முடிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்பை அறிவிக்கிறார் (அப்போஸ்தலர் 20:17-24). எனினும். பவுல் தடுமாறவில்லை. தேவன் அவரை எதற்காய் அழைத்தாரோ, அதை நேர்த்தியாய் செய்வதே பவுலின் நோக்கம். “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை” (வச. 24) பிரசங்கிப்பதே அவருடைய பணி. அதை நேர்த்தியாய் செய்து முடிக்க விரும்பினார். தன்னுடைய பாதையில் பாடுகள் வந்தாலும் (வச. 23), தன்னுடைய ஓட்டத்தில் நிலையாய் நின்று, முடிவுக் கோட்டை நோக்கி விரைந்தார்.
நாம் நம்முடைய உடற்பயிற்சியை செய்தாலும், அல்லது தேவன் நமக்குக் கொடுத்த திறமைகள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளை செயல்படுத்தினாலும், அதை நேர்த்தியாய் நிறைவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். “சோர்ந்துபோகாமல் இருப்போமாக” (கலாத்தியர் 6:9). பின்வாங்காதீர்கள். உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு தேவையானதை தேவன் அருளுவார்.