வகை  |  odb

ஓடுங்கள்

ஜப்பானின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அகிடோவின் முதல் படி நமக்கு வியப்பூட்டும். நம்மை யாராவது தாக்க வந்தால், முதலாவது நாம் ஓட வேண்டும் என்று அதின் ஆசிரியர் (சென்ஸெய்) எங்களுக்கு சொன்னார். “உங்களால் ஓட முடியவில்லை என்றால் மட்டும் சண்டை போடுங்கள்” என்று கண்டிப்பாய் சொன்னார். 

ஓட வேண்டுமா? நான் சற்றுத் தடுமாறினேன். இந்த அளவிற்கு திறமையான தற்காப்பு பயிற்சியாளர் நம்மை ஏன் ஓடச்சொல்லுகிறார்? இது சற்று முரணாக தென்பட்டது. ஆனால், சண்டையை தவிர்ப்பதே நம்மை தற்காக்கும் முதற்படி என்று அவர் விளக்கமளித்தார். ஆம் அது உண்மைதான்!

இயேசுவை கைது செய்ய பலர் வந்தபோது, பேதுரு நம்மை போலவே தன் பட்டயத்தை உருவி அதில் ஒருவனை தாக்குகிறான் (மத்தேயு 26:51; யோவான் 18:10). அதை கீழே போடச் சொன்ன இயேசு, “அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும்” (மத்தேயு 26:54) என்று கேட்கிறார்.

நியாயம் என்பது முக்கியம் என்றாலும், அதேபோல தேவனுடைய இராஜ்யத்தையும், நோக்கதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது நம்முடைய சத்துருக்களை நேசிக்கும்படியாகவும், தீமைக்கு நன்மை செய்யும்படியாகவும்(5:44) நம்மை அழைக்கும் தலைகீழான இராஜ்யம். இது உலகத்தின் சுபாவத்திற்கு நேர்மறையானது. ஆனால் அதைத்தான் தேவன் நமக்குள் உருவாக்க விரும்புகிறார். 

பேதுரு காயப்படுத்திய மனிதனின் காதை இயேசு மீண்டும் குணமாக்கினார் என்று லூக்கா 22:51 கூறுகிறது. இதுபோன்ற கடினமான தருணங்களை இயேசு கையாண்டதைப்போல, நாமும் எப்போதும் சமாதானத்தையும், புதிதாக்குதலையும் நாடுகையில், நமக்கு தேவையானதை தேவன் அருளுவார். 

தாராளமாய் கொடுத்தல்

விக்டோரியா மகாராணிக்காக சீனாவிலும் மற்ற இடங்களிலும் பணியாற்றினார் ஜெனரல் சார்லஸ் கோர்டன் (1833-1885) . பின்னர் இங்கிலாந்தில் வசிக்கையில், தன் மாத வருமானத்தின் 90 சதவிகிதத்தை தானம் செய்துவிடுவாராம். தன் சொந்த தேசத்தில் பஞ்சம் என்பதை கேள்விப்பட்ட அவர், உலகத் தலைவர் ஒருவரிடம் பெற்ற தங்கப் புத்தகத்தின் எழுத்துகளையெல்லாம் அழித்துவிட்டு, அதை பஞ்சம் நிறைந்த வடக்கு பகுதிக்கு, "பதக்கத்தை உருக்கி, அதின் பணத்தை ஏழைகளுக்கு ஆகாரம் வாங்கப் பயன்படுத்திக்கொள்ளவும்" என்று எழுதி அனுப்பினாராம். அந்நாளில் அவர் தன் டைரி குறிப்பில், “நான் இவ்வுலகில் மதித்திருந்த என் கடைசி பொருளையும் ஆண்டவராகிய இயேசுவுக்கு கொடுத்துவிட்டேன்” என்று எழுதினாராம். 

ஜெனரல் கோர்டனுடைய இந்த தாராள குணம் நமக்கு எட்டாத ஒன்றாக தென்படலாம். ஆனால் தேவையில் உள்ளவர்களை கவனிக்க தேவன் தன் ஜனத்திற்கு எப்போதும் அழைப்பு விடுக்கிறார். மோசேயின் மூலம் தேவன் கொடுத்த நியாயப்பிரமாணங்களில் சிலவற்றில், அறுப்பை அறுக்கும்போது அதை தீர அறுக்காமலும், அதின் பின் அறுப்பை அறுக்காமலும் இருக்கும்படிக்கு கட்டளையிடுகிறார். அதற்கு பதிலாக, திராட்சைப்பழங்களை அறுக்கும்போது அதில் கீழே சிந்துகிறதை எளியவனுக்கும் வழிப்போக்கர்களுக்கும் விட்டுவிடும்படிக்கு கூறுகிறார் (லேவியராகமம் 19:10). தங்கள் மத்தியில் வசிக்கும் ஏழை, எளியவர்களை தம் ஜனம் பராமரிக்கும்படி தேவன் விரும்புகிறார். 

நாம் எவ்வளவு தாராளமாய் நம்மை எண்ணிக்கொண்டாலும், மற்றவர்களுக்கு கொடுக்கும் குணாதிசயத்தை இன்னும் வளர்த்துக்கொள்வதற்கும், அதை நேர்த்தியாய் செயல்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்வதற்கும் தேவனிடத்தில் கேட்கலாம். தம்முடைய அன்பை நாம் பிறரிடம் காண்பிக்க, நமக்கு உதவவே அவர் விரும்புகிறார்.

முடிவில்...

அநேக ஆவிக்குரிய கூட்டங்களுக்கு தலைமையேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. தனிமையான இடத்தில் ஜெபித்தும், என் ஜீவியத்தை சுயபரிசோதனை செய்வதும் ஆழமாய் எனக்குதவியது. நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்களிடம் சிலசமயம் ஒரு சுயபரிசோதனை ஆய்வு நடத்துவதுண்டு. அதாவது, “நீங்கள் மரித்துவிட்டீர்கள், உங்கள் கண்ணீர் அஞ்சலி விளம்பரம் பத்திரிக்கையில் பிரசுரமாகிவிட்டது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவ்விளம்பரம் எவ்வாறிருக்க விரும்புவீர்கள்?” என்று கேட்பதுண்டு. அதின் பலனாக சிலர் தங்கள் வாழ்வை சிறப்பாய் முடிக்கும்பொருட்டு, வாழ்வின் முன்னுரிமைகளை மாற்றிக்கொண்டதுமுண்டு.

2 தீமோத்தேயு 4ஆம் அதிகாரம் அப்போஸ்தலன் பவுல் இறுதியாக எழுதிய வார்த்தைகளை பதிவுசெய்துள்ளது. பவுல் அறுபதைத்தான் கடந்திருந்தார், இதற்கு முன்னமே மரணத்தை சந்தித்திருந்தார். இருப்பினும், இப்போது தாம் மரணத்தை நெருங்குவதை அவர் உணருகிறார் (2 தீமோத்தேயு 4:6). இனி மிஷனரி பயணம் கிடையாது, திருச்சபைகளுக்கு நிருபம் எழுதப்போவதும் கிடையாது. அவர் தன் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து, “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (வச.7) என்கிறார். அவர் குறைவுள்ளவராயிருப்பினும் (1 தீமோத்தேயு 1:15-16), எந்தளவிற்கு தேவனுக்கும், சுவிசேஷத்திற்கும் தான் உண்மையாய் வாழ்ந்துள்ளார் என்பதை நினைவுகூருகிறார். பின்னர், சீக்கிரமே அவர் இரத்தசாட்சியாய் மரித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. 

நம் இறுதி நாட்களைக் குறித்து சிந்திப்பது, நம்முடைய தற்போதைய வாழ்விற்கு தெளிவை உண்டாக்கும் ஒரு வழி. பவுலின் வார்த்தைகள் பின்பற்றுவதற்கு ஏற்ற நல்ல ஒரு மாதிரி. நல்ல போராட்டத்தைப் போராடுங்கள். ஓட்டத்தை முடியுங்கள். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், நம் ஜீவியத் தேவைக்காகவும், ஆவிக்குரிய போராட்டங்களை மேற்கொள்ளவும், ஓட்டத்தை நேர்த்தியாய் முடிக்கவும், கர்த்தரை சார்ந்துகொண்டு அவருடைய வழிகளில் உறுதியாய் நின்றிருக்கிறோமா என்பதே கடைசியில் பொருட்படுத்தப்படும். 

ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு

அமினா, ஈராக் அகதி. ஜோசப், பிறப்பால் அமெரிக்கர். இருவரும் அரசியலில் எதிரெதிர் கட்சிகளின் சார்பில் அரசியல் போராட்டத்தில் பங்கேற்றனர். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த இருவர் அரசியலில் மோதிக்கொண்டால், பெரிய பகை உண்டாகும் என்றறிவோம். ஒரு சிறிய கலவரக்காரக் கூட்டம் ஜோசப்பின் சட்டையை தீயிட முயற்சிக்க, அதைப் பார்த்த அமினா உடனே அவரைப் பாதுகாக்க ஓடினார். பத்திரிக்கையாளருக்கு பேட்டியளித்த ஜோசப், “இனி நாங்கள் மக்களாக பிரிந்திருப்பது இயலாதது, ஏனெனில் இச்செயலில் எங்கள் இருவருக்குமே (இரு கட்சியினருக்கும்) உடன்பாடில்லை"” என்று கூறினார். 

பிறரோடு நமக்கு நியாயமான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், தவிர்க்க இயலாத உண்மையான வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் ஏதோ ஒரு ஆழமான பிணைப்பு நம்மை ஒன்றிணைக்கிறது. நாமெல்லோருமே தேவனால் உண்டாக்கப்பட்டு, மனிதம் எனும் ஒரே குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். பாலினம், சமுதாய அந்தஸ்து, இனம் மற்றும் அரசியல் என்று பல வேறுபாடுகள் நமக்குள் நிலவினாலும் தேவன் நம் அனைவரையும் “தம்முடைய சாயலாக” சிருஷ்டித்தார் (1:27). உண்மை எதுவானாலும், தேவன் என்னிலும் உன்னிலும் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மேலும் அவருடைய இவ்வுலகை நன்மையால் நிரப்பி, ஆண்டுகொள்ளவும் நாம் பகிரப்பட்ட நோக்கம் பெற்றுள்ளோம் (வச. 28). 

நாம் தேவனில் பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை மறக்கையில், நமக்கும் மற்றவர்களுக்கும் தீங்குண்டாக்குகிறோம். ஆனால் தேவனின் கிருபையிலும், உண்மையிலும் ஒன்றுபடுகையில், நன்மையான, செழிப்பான உலகை ஸ்தாபிக்கும் அவருடைய சித்தத்தில் பங்கேற்கிறோம்.