
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
சார்லா இறந்து கொண்டிருந்தாள், அவளுக்கு அது தெரியும். அவள் மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தபோது, அறுவை சிகிச்சை நிபுணரும் இளம் பயிற்சியாளர்களும் அறைக்குள் நுழைந்தனர். அடுத்த சில நிமிடங்களுக்கு, மருத்துவர் சார்லாவை கவனிப்பதை நிறுத்திவிட்டு, அங்கு இருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு அவளது முடிவு நிலையைப் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியாக, அவர் அவளை நோக்கி, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். சார்லா பலவீனமாகச் சிரித்து, இயேசுவின் மீதான நம்பிக்கையையும் அமைதியையும் பற்றி அந்த குழுவினரிடம் அன்புடன் பகிர்ந்துகொண்டார்.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவின் காயப்பட்ட, நிர்வாண சரீரமானது வழிப்போக்கர்களின் பார்வைக்கு முன்பாக தொங்கிக்கொண்டிருந்தது. அவரைத் துன்புறுத்துபவர்களை அவர் கடிந்துகொள்வாரா? இல்லை. மாறாக, 'பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்றார் (லூக்கா 23:34). பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டாலும், அவர் தமது சத்துருக்களுக்காக ஜெபித்தார். மேலும் அவரோடு கூட அவமானப்படுத்தப்பட்ட இன்னொரு கள்ளனிடம், அவனுடைய விசுவாசத்தினிமித்தம், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று வாக்களிக்கிறார். அவருடைய அவமானத்திலும் வேதனையிலும் கூட, மற்றவர்கள் மீதான அன்பினிமித்தம் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வார்த்தைகளை இயேசு பேசினார்.
சார்லா அங்கேயிருந்த இளம் பயிற்சியாளர்களுக்கு ஆண்டவரைக் குறித்து சொல்லி முடித்தவுடன், டாக்டரின் கண்ணீர் ததும்பும் கண்களை பார்த்து, “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று மென்மையாக விசாரித்தாள். கிறிஸ்துவின் கிருபையினாலும் பெலத்தினாலும் ஜீவனுக்கேதுவான வார்த்தைகளை பகிர்ந்துகொண்டு, அவர்கள் மீதான தன்னுடைய அன்பை பிரதிபலித்தாள். இப்போதோ அல்லது வரவிருக்கிற நாட்களிலோ நாம் எதிர்கொள்ளும் எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும், ஜீவ வார்த்தைகளை அன்புடன் பேசுவதற்கு தேவன் நமக்கு தைரியத்தை கொடுப்பார் என்று நம்புவோம்.

தேவனில் நடப்படுதல்
“காற்று இளஞ்சிவப்பு மலர்கள் மீது வீசுகிறது.” கவிஞர் சாரா டீஸ்டேலின் வசந்தகால கவிதையான “மே" என்று தலைப்பிடப்பட்ட கவிதையின் துவக்கவரிகள் இது. அதில் காற்றில் அசையும் இளஞ்சிவப்பு மலர்களை படம்பிடித்திருப்பார். ஆனால் டீஸ்டேல் காதல் தோல்வியை எண்ணி புலம்பி அப்பாடலை பாடுகிறார். ஆகையால் அவருடைய கவிதை விரைவில் சோகமாக மாறுகிறது.
எங்கள் கொல்லைப்புறத்தில் இருந்த இளஞ்சிவப்பு மலர்களும் ஒரு சவாலை எதிர்கொண்டது. அவைகள் பூத்துக் குலுங்கிய காலம் முடிந்தவுடன், எங்களின் தோட்டக்காரர் தன்னுடைய கூரான கோடாரியினால் அவைகளை குட்டையாக கத்தரித்தார். நான் அழுதேன். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தரிசாகக் கிடந்த கிளைகள், மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்கத் துவங்கியது. அவைகளுக்கு அவகாசம் தேவை. ஆகையால் நான் பார்க்காத ஒன்றிற்காய் நான் காத்திருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.
உபத்திரவத்தின் மத்தியிலும் விசுவாசத்தோடு காத்திருந்த பலரைக் குறித்து வேதம் சொல்லுகிறது. தாமதமான மழைக்காக நோவா காத்திருந்தார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ காலேப் நாற்பது ஆண்டுகள் காத்திருந்தார். ஒரு குழந்தையைப் பெற ரெபேக்காள் இருபது வருடங்கள் காத்திருந்தாள். யாக்கோபு ராகேலை திருமணம் செய்ய ஏழு ஆண்டுகள் காத்திருந்தார். சிமியோன் குழந்தை இயேசுவைப் பார்க்க காத்திருந்தார். அவர்களின் பொறுமைக்கு தக்க பலன் கிடைத்தது.
இதற்கு நேர்மாறாக, மனிதர்களைப் பார்ப்பவர்கள் “பாழான நிலங்களில் உள்ள புதர்களைப் போல இருப்பார்கள்" (எரேமியா 17:6). கவிஞர் டீஸ்டேல் தனது கவிதையை அத்தகைய இருளில் தான் முடித்தார். “நான் ஒரு குளிரின் நடுக்கத்தோடு போகிறேன்," என்று அவர் தனது கவிதையை நிறைவுசெய்தார். ஆனால், “கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்று எரேமியா மகிழ்ச்சியடைகிறார். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்ட... மரத்தைப் போலிருப்பான்" (வச. 7-8). என் நம்பிக்கையானது, வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் நம்மோடு நடந்து வரும் தேவனில் நாட்டப்பட்டுள்ளது.

இயேசுவில் புதிய டி.என்.ஏ
கிறிஸ், தனது உயிர்காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இரத்தத்தை பரிசோதனை செய்தார். அவருடைய சிகிச்சைக்கு தேவைப்பட்ட மஜ்ஜை நன்கொடையளித்தவரிடமிருந்து அவருக்கு கிடைத்தது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில், கிறிஸின் இரத்தத்தில் உள்ள டி.என்.ஏ அவரது நன்கொடையாளருடையது, அவருடையது அல்ல. பலவீனமான இரத்தத்தை நன்கொடையாளரின் ஆரோக்கியமான இரத்தத்துடன் மாற்றுவதே செயல்முறையின் குறிக்கோளாக இருந்ததால், இது அர்த்தமுள்ளதாகவே தென்பட்டது. ஆனாலும், கிறிஸின் கன்னங்கள், உதடுகள் மற்றும் நாக்கு அகியவை கூட நன்கொடையாளரின் டி.என்.ஏவையே காண்பித்தது. அவருடைய வெளிப்புறத்தோற்றம், எண்ணங்கள் ஆகியவைகளில் அவர் அவராகவே இருந்தாலும், ஏதோ சில வழிகளில் அவர் வேறொருவராக மாறிவிட்டார்.
கிறிஸின் அனுபவம் இரட்சிக்கப்பட்ட ஒரு நபரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதற்கு ஏறத்தாழ ஒத்துள்ளது. நாம் கிறிஸ்துவை நம்பும்போது, நம்முடைய ஆவி மறுரூபமடைந்து, நாம் புது சிருஷ்டியாய் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 5:17). எபேசு சபைக்கு பவுல் எழுதிய நிருபத்தில், அந்த உள்ளான மறுரூபத்தை பிரதிபலிக்கவும், “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு... மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களை ஊக்குவிக்கிறார் (எபேசியர் 4:22,24). கிறிஸ்துவுக்காக பிரித்தெடுக்கப்பட வேண்டும்.
இயேசுவின் மறுரூபமாக்கும் வல்லமை நமக்குள் கிரியை செய்வதை பார்ப்பதற்கு, டி.என்.ஏ பரிசோதனையோ அல்லது இரத்தப் பரிசோதனையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த மறுரூபமாக்கப்பட்ட உள்ளான மனிதன், நம்மைச் சுற்றியுள்ள உலகத்தோடு நாம் எவ்விதத்தில் தொடர்புகொள்ளுகிறோம் என்பதை அடிப்படையாய் வைத்து தீர்மானிக்கப்படுகிறது. நாம் “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன்” நமக்கு மன்னித்ததுபோல, நாமும் மற்றவர்களை மன்னிக்கிறோமா என்பதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது (வச. 32).

மற்றவர்கள் மீது முதலீடு செய்தல்
ஒரு கார்பரேஷன் நிறுவனம் தங்களுடைய உணவுப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் பத்து நபர்களில் ஒருவருக்கு 1000 மைல்கள் தூரம் விமான பயணத்தை இலவசமாய் அறிவித்தது. ஒரு நபர், அவர்களின் மிகவும் மலிவான உணவுப்பொருளான சாக்லேட் கப் கேக்கை பன்னிரண்டாயிரம் ஆர்டர் செய்தார். அதற்கு சுமார் 2.25 இலட்ச ரூபாய் செலவானது. அதினால் அவர் முக்கிய அந்தஸ்தை அடைந்து, அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுமைக்குமான விமானப் போக்குவரத்தை இலவசமாகப் பெற்றார். மேலும் அவர் வாங்கிய அந்த சாக்லேட் கேக்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அதினால் அவர் வரிவிலக்கும் பெற்றார். என்ன ஒரு புத்திசாலித்தனம்!
ஒரு அநீதியான உக்கராணக்காரனைக் குறித்து இயேசு சற்று முரண்பாடான ஒரு உவமையைச் சொல்லுகிறார். அவன் பணி நீக்கம் செய்யப்படவிருப்பதால், தன் எஜமானுக்கு போகவேண்டிய கடனை கடளானிகளுக்கு குறைக்கிறான். அவன் அவ்வாறு செய்தால், தன்னுடைய பணி நீக்கத்திற்கு பின்பு மக்கள் அவனை ஆதரிப்பார்கள் என்று எண்ணி அவன் அவ்வாறு செய்கிறான். அவனுடைய இந்த நெறியற்ற இரக்கத்தை இயேசு பாராட்டவில்லை. ஆனால் அவனுடைய புத்திசாலித்தனத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா 16:9) என்று இயேசு கூறுகிறார். “அந்த சாக்லேட் கப் கேக் மனிதர்” தன்னுடைய குறைவான தொகையில் உணவுப்பொருளை வாங்கி, அதை இலாபகரமான விமான பயணமாய் மாற்றியதுபோல, உலகத்தின் ஆஸ்திகளைப் பயன்படுத்தி, நாமும் மெய்யான ஐசுவரியத்தை சுதந்தரிக்கலாம் (வச. 11).
இந்த ஆஸ்திகள் யாவை? “உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை" (12:33) என்று இயேசு கூறுகிறார். நம் முதலீடு நமக்கு இரட்சிப்பை வாங்கித் தராது. ஆனால் “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” (வச. 34) என்பதங்கிணங்க, அது நம்முடைய இரட்சிப்பை உறுதிப்படுத்துகிறது (வச. 34).
