நமக்கு இயேசுவின் உதவி தேவை
என்னுடைய அப்பா யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர் என்று நான் நம்பிய அந்த நாள் வந்தது. அவருடைய வலிமையையும் உறுதியினையும் ஒரு சிறுவனாய் நான் பார்த்திருக்கிறேன். நான் வளரும் தருவாயில் அவர் கீழே விழுந்து அவருடைய இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதன் பின்பு தான், அவரும் சாதாரணமானவர் என்பதை உணர்ந்தேன். நான் படுத்த படுக்கையான என் அப்பாவை கழிவறைக்கு அழைத்துச் செல்வது, உடைகள் மாற்றுவதில் உதவி செய்வது, தண்ணீரை அவருக்குக் குடிக்கக் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்தேன். அது என்னுடைய அப்பாவுக்கு மிகுந்த விசனமாயிருந்தது. அவர் தானாகவே முன்வந்து சில காரியங்களை செய்ய முயற்சித்தார். ஆனால் அது முடியாததால், “நீ இல்லாமல் என்னால் ஒன்னும் செய்யமுடியவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். கடைசியில், அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து அவர் விடுபட்டார். ஆனால் அந்த அனுபவம் எங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. நமக்கு மற்றவர்களின் உதவி தேவை என்பதே அந்த பாடம்.
மற்றவர்களின் உதவி எந்த அளவிற்கு அவசியமோ, அதே அளவிற்கு இயேசுவும் நமக்கு அவசியம். யோவான் 15ஆம் அதிகாரத்தில் திராட்சைச் செடியை குறித்தும் அதின் மீது படர்ந்திருக்கும் கொடிகளைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். அது தேற்றக்கூடிய உதாரணமாய் அமைந்தாலும், நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கக்கூடியதாய் இருக்கிறது. “எனக்கு உதவி தேவையில்லை” என்ற நம்முடைய சுயத்தின் மீதான நம்பிக்கையை உடைக்கிறதாயிருக்கிறது. என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது (வச. 5) என்று இயேசு தெளிவாய்ச் சொல்லுகிறார். ஒரு சீஷனுக்கு அவசியமான ஆவியின் கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம் (கலாத்தியர் 5:22) போன்ற கனிகளைக் குறித்து இயேசு இவ்வாறு பேசுகிறார்.
இயேசு நம்மை கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவே அழைக்கிறார். அவரை நாம் முழுமையாய் சார்ந்துகொள்வோமாகில், பிதாவை மகிமைப்படுத்தக் கூடிய வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் (யோவான்15:8).


உக்கிராணத்துவ வாய்ப்பு
விடுமுறை நாட்களில் நானும் எனது கணவரும் எலியட் கடற்கரையோரமாய் நடந்துகொண்டிருக்கையில், அங்கே ஆமை முட்டைகள் கூடையில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். அதை வைத்திருந்த நபர், ஒவ்வொரு நாள் இரவும் ஒரு தன்னார்வ குழுவினர்களைக் கூட்டிக்கொண்டு, கடல் ஆமைகள் இடும் முட்டைகளை கவனமாய் சேகரிப்பதாகச் சொன்னார். முட்டையிலிருந்து வெளிவரும் கடல் ஆமைக் குஞ்சுகள், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அச்சுறுத்தலினால் உயரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. “என்னதான் நாங்கள் முயற்சி செய்தாலும்,” ஆயிரத்தில் ஒரு ஆமைதான் முதிர்ச்சி பருவத்தை எட்டுகிறது என்றும் அவர் சொன்னார். ஆனால் அதற்காக அவர் சோர்ந்துபோகவில்லை. அந்த ஆமை இனத்தைப் பாதுகாக்கும் அவரது அயராத முயற்சி, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. தற்போது நான் கடல் ஆமையின் படம் போட்ட ஒரு பேட்ஜ் அணிந்திருக்கிறேன். அது தேவனுடைய படைப்புகளை பாதுகாக்கவேண்டிய என்னுடைய பொறுப்பை எனக்கு நினைவூட்டுகிறது.
தேவன் உலகத்தை உண்டாக்கியபோது, அனைத்து உயிரினங்களும் அதில் வாழுவதற்கேதுவான ஒன்றாகவே அதை உண்டாக்கினார் (ஆதி. 1:20-25). தமது சாயலாக மனிதனை உண்டாக்கியபோது, “அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்” (வச. 26) என்று தன் நோக்கத்தை பிரதிபலித்தார். தேவனுடைய பிரம்மாண்டமான படைப்புகளை நிர்வகிக்கக்கூடிய ஓர் உக்கிராணத்துவப் பொறுப்பை தேவன் நமக்கு அருளியிருக்கிறார்.

ஜெபம் பூமியை அசைக்கும்போது
டாக்டர் கேரி கிரீன்பர்க் என்பவர் உலகத்தில் இருக்கும் கடற்கரை மணல்களை மிக பெரிதாகப் புகைப்படம் எடுத்திருக்கிறார். மண்ணில் கலந்திருக்கும் துகள்கள், கிளிஞ்சல்கள், பவளத் துகள்கள் ஆகியவற்றில் உள்ள பலவிதமான வண்ணங்கள் ஆச்சரியப்படும் விதத்தில் இருந்தது. நாம் கண்களில் காணும் மணலை விட அநேகக் காரியங்கள் அதில் இருப்பதாக அவர் கண்டறிந்தார். மணலைக் குறித்து கண்டறியும் கனிம பகுப்பாய்வில் (arenology), மண்ணரிப்பு மற்றும் அதின் கரையோர பாதிப்புகள் ஆகியவைகளை கண்டறிவர். சிறிய மணல்துகள் கூட மிக அரிய தகவலைக் கொடுக்க முடியும்.
அதேபோன்று, ஒரு சிறிய ஜெபம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வரப்போகிற தேவனுடைய இராஜ்யத்தில் ஜெபத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி வேதம் வெளிப்படுத்துகிறது. வெளிப்படுத்தல் 8ஆம் அதிகாரத்தில், யோவான், “சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும்” செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கத்தை கையில் பிடித்திருந்த தேவ தூதனைக் காண்கிறார். “பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின” (வச. 3,5).
நெருப்பினாலும் ஜெபத்தினாலும் நிறைக்கப்பட்ட தூபவர்க்கத்தை அந்த தூதன் பூமியிலே கொட்டியபோது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள், கடைசி நாட்களையும் கிறிஸ்துவின் வருகையையும் அறிவிக்கும் எக்காளத்தை ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள் (வச. 6).
சிலவேளைகளில் நம்முடைய ஜெபம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக நாம் நம்ப மறுக்கலாம். ஆனால் தேவன் அவற்றை தவறவிடுவதில்லை. அதை அவருடைய இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்திற்கு பயன்படுத்துகிறார். நாம் அற்பமானது என்று எண்ணுகிற சிறிய ஜெபத்தை, அவர் பூமியை அசைக்கும் வலிமையுள்ளதாய்ப் பார்க்கிறார்!

உயிர்ப்பிக்கும் கடிந்துகொள்ளுதல்
“எதிர்பாராதவிதமாக, நாங்கள் சமீபத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்” என்று ஷ்ரேயா கூறினாள். “அதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை; ஆனாலும், அவளைச் சுற்றியிருப்பவர்கள் அவளுடைய மனோபாவங்களினாளும், செய்கைகளினாலும் காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அப்படிச் சொன்னேன். அந்தப் பெண், ஷ்ரேயா ஆலோசனை கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வாலிபப் பெண் தான். ஆரம்பத்தில் அவர்களுடைய உரையாடல், சற்று விகற்பமாய் தோன்றினாலும், அது நன்மையாகவும் அவர்களின் உறவை பலப்படுத்தும் விதத்திலும் அமைந்தது. சில வாரங்கள் கழித்து, அவர்கள் இருவரும் சேர்ந்து, மனத்தாழ்மை என்ற கருத்தின் அடிப்படையில் திருச்சபைகளுக்கிடையேயான ஒரு ஜெப நேரத்தை நடத்தினார்கள்.
ஆலோசனை ஊழியங்களல்லாமல், கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்குள் கடினமான உரையாடலில் ஈடுபடுகிறோம். காலத்திற்க்கப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கும் நீதிமொழிகள் புத்தகம், கடிந்துகொள்ளுதலை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்ளுவதற்கும் அவசியமான தாழ்மையைக் குறித்து அடிக்கடி எடுத்துரைக்கிறது. ஆரோக்கியமான கடிந்துகொள்ளுதலை, “ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதல்” என்றும், அது மெய்யான ஞானத்திற்கு வழிநடத்துகிறது என்றும் அறிவிக்கிறது (நீதிமொழிகள் 15:31). நீதிமொழிகள் 15:5, மூடன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான், கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி என்கிறது. கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான் (வச. 10) என்று வெளிப்படையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாவின் வாழ்க்கையில் நடந்ததுபோல, அன்பினிமித்தம் நிகழ்ந்த கடிந்துகொள்ளுதல் ஒரு புதிய உறவை துவக்கியது.
உங்களுடைய வாழ்க்கையில், உங்களுடைய அன்பான வார்த்தைகள் மற்றும் திருத்தம் தேவைப்படும் நபர் யாரேனும் இருக்கிறார்களா? அல்லது சமீபத்தில் உங்களிடத்தில் அன்பாய் கடிந்துகொண்டவர்களிடம் நீங்கள் கோபமாகவோ அல்லது வித்தியாசமாகவோ நடந்துகொண்டீர்களா? புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான் (வச. 32). மற்றவர்களை அன்பாய்க் கடிந்துகொள்ளவும், அதே அன்போடு நம்மைக் கடிந்துகொள்கிறவர்களை ஏற்றுக்கொள்ளவும் தேவனிடத்தில் உதவி கேட்போம்.
