
பரலோகில் மீண்டும் இணைதல்
எனது தாயாரின் அஞ்சலி செய்தியை எழுதுகையில், "மரித்தார்" என்ற வார்த்தை ஏதோ இறுதியானதாய் எனக்குத் தோன்றவே அதனை மாற்றி "இயேசுவின் கரங்களுக்குள் அழைக்கப்பட்டார்” என்றெழுதினேன். என் தாயாரில்லாத குடும்ப புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்து சிலநேரம் வருந்தினேன். சமீபத்தில், மரித்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களைத் தத்ரூபமாய் வரையும் ஒரு ஓவியரைக் கண்டேன். புகைப்படங்களின் உதவியால் குடும்ப படத்தில் மரித்த நபர்களை இணைப்பதில் அவர் வல்லவர். எனதருகே என் தாயார் இருந்த அவ்வோவியத்தை கண்ணீர் மல்க ரசித்தேன். அவருடைய அந்தக் கலை, தேவன் வாக்களித்த பரலோக இணைப்பை எனக்கு நினைவூட்டியது.
இயேசுவின் விசுவாசிகள் "மற்றவர்களைப்போலத் துக்கிக்க" தேவையில்லை என்று உறுதியளிக்கிறார் (1 தெசலோனிக்கேயர் 4:13). "இயேசுவானவர் மரித்த பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்."(வ.14). பவுல், இயேசுவின் இரண்டாம் வருகையையும், இயேசுவோடு விசுவாசிகள் ஒன்று சேர்க்கப்பட்டு இணைவதையும் அறிவிக்கிறார் (வ.17).
இயேசுவை நம்பி மறித்த நம் அன்பானவர்கள் மரிக்கையில், பரலோகில் ஒன்றினைவோமென்பது தேவனின் வாக்குத்தத்தமாகும். நாம் மரிக்குமட்டுமோ அல்லது இயேசு வருமட்டுமோ, உயிர்த்த நமது ராஜாவுடன் வாழப்போகும் வாக்கு பண்ணப்பட்ட எதிர்காலத்தைக் குறித்த உறுதியான நிச்சயத்தோடு, நமது மரணத்தையும் எதிர்கொள்வோம்.

வீட்டைக் கட்டுதல்
19 ஆம் நூற்றாண்டில், தனிநபர்குடியிருப்பு கட்டும் இந்தியாவின் பெரிய கனவுத்திட்டம் துவங்கியது. பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, மகாராஜா மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாட்டின் ராஜபரம்பரை வீடாக அந்தத் திட்டம் நிறைவுபெற்றது. குஜராத்தைச் சேர்ந்த வடோதராவிலுள்ள லட்சுமி விலாஸ் அரண்மனைதான் அந்த வீடு. இந்த அரண்மனைதான் இந்தியாவிலேயே பெரிய தனிநபர் குடியிருப்பாகும். 500 ஏக்கர் நிலப்பரப்பிற்கும் மேலான இடம், 170 அறைகள், பராமரிக்கப்பட்ட மொசைக்கற்கள், அலங்கார தொங்குவிளக்குகள், எலிவேட்டர்கள் என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக நம்பப்பட்டது.
இந்த கட்டிடம் ஒரு "கனவுத்திட்டம்" தான், ஆயினும் மத்தேயு 16 இல் இயேசு தமது சீடர்களிடம் கூறிய கட்டிடத்தைக் குறித்த நோக்கோடு ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை. பேதுரு, இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" (வ.16) என்று உறுதிப்படுத்திய பின்னர்; "நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை." (வ.18) என்று இயேசு அறிவித்தார். வேதாகம வல்லுநர்கள் அந்தக் "கல்லை" குறித்து பல கருத்துடையவர்களாய் இருந்தாலும், இயேசுவின் நோக்கம் ஒன்றுதான். பூமியின் கடைமுனைமட்டும், அவர் தமது சபையைக் கட்டுவார் (மத்தேயு 28:19–20), உலகெங்கிலும் உள்ள அனைத்து நாட்டவரும், இனத்தவரும் இதில் அடங்குவர் (வெளிப்படுத்தின விசேஷம் 5:9).
இந்த கட்டுமான பணிக்கான விலை? சிலுவையில் இயேசு பலியாகிச் சிந்திய இரத்தமே (அப்போஸ்தலர் 20:28). அவருடைய கட்டிடத்தின் உறுப்பினர்களாக (எபேசியர் 2:21) இம்மாபெரும் விலைக்கிரயத்தால் வாங்கப்பட்ட நாம் அவருடைய அன்பின் தியாகத்தால் பூரித்து இந்த மாபெரும் திட்டத்தில் அவரோடு இணைவோம்.

அடைக்கலம் புகுதல்
ஒருமுறை நானும் என் மனைவியும் பெரிய ஜன்னல்களும், தடிமனான கற்சுவர்களுமுடைய அழகான கடற்கரை விடுதியொன்றில் தங்கியிருந்தோம். ஒரு நாள் மத்தியான வேளையில், அப்பகுதியில் புயல் சூழவே, கடல் கொந்தளித்து, எங்கள் அறையின் ஜன்னல்களைச் சீற்றமான அலைகளால் மோதியது. ஆனால் நாங்கள் அமைதியாயிருந்தோம். ஏனெனில் விடுதியின் மதில்கள் வலிமையாகவும், அஸ்திபாரங்கள் உறுதியாகவும் இருந்தன. வெளியே அலைகள் கொந்தளிக்க, எங்கள் அறையே எங்களுக்குப் புகலிடமானது.
அடைக்கலம் என்பது வேதத்தின் முக்கிய கருப்பொருளாகும், ஏனெனில் அது தேவனிடமிருந்தே துவங்குகிறது. "நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்." (ஏசாயா 25:4) என்று ஏசாயா கூறுகிறார். பண்டைய இஸ்ரவேலில், அடைக்கல பட்டணங்களைக் கட்டுவதாகட்டும் (எண்ணாகமம் 35:6), அல்லது தேவையிலுள்ள அந்நியர்களை உபசரிப்பதாகட்டும் (உபாகமம் 10:19), அடைக்கலம் என்பது தேவ ஜனங்கள் கொடுக்கக் கூடியதும் கொடுக்க வேண்டியதுமான ஒன்றாகக் கருதப்பட்டது. இன்று நாம் வாழும் மனிதாபிமானமற்ற உலகில், இத்தகைய கொள்கைகள் நமக்கு வழிகாட்டும். இதுபோன்ற சூழல்களில், அடைக்கலத்தின் தேவனானவர், நம்மைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புகலிடமாக்குவாராக.
எங்கள் விடுதியைத் தாக்கிய புயல் மறுநாளே ஓய்ந்துவிட்டது. அமைதியான கடல், வெப்பமான சூரியன், பளபளக்கும் கடற்பாசி என எல்லாம் மாறியிருந்தது. இயற்கை சீற்றங்களுக்கு அல்லது கொடுங்கோலாட்சிக்குத் தப்பியோடுபவர்களுக்கு (ஏசாயா 25:4), இன்றைக்கான அடைக்கலத்தையும், நாளைக்கான நம்பிக்கையையும் தருவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துவராக என்ற காட்சியே அப்பொழுது எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

சுவரில் ஒரு ஓட்டை
எனது பூக்களை ஏதோவொன்று அரித்துக்கொண்டிருந்தது. நேற்றுதான் கம்பீரமாகத் தலைதூக்கிப் பூத்தன, இன்றோ தலையில்லாமல் தண்டுப்பகுதி மட்டுமே நின்றது. எனது தோட்டத்தை முழுதும் அலசி ஆராய்ந்த போதுதான், வேலியில் உள்ள ஒரு ஓட்டையைக் கண்டுபிடித்தேன். அதற்குக் காரணமான முயல்கள், பார்க்க அழகானவைதான், ஆனால் தோட்டத்தின் மொத்த மலர்களையும் நிமிடத்தில் அழிக்கும் ஆபத்துவாய்ந்தவை.
எனது வாழ்வில் 'தேவனுடைய சுபாவங்கள்' எனும் மொட்டுகளைக் கத்தரிக்கும் ஊடுருவல்கள் உண்டோவென்று சிந்திக்கிறேன். "தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்." என்று நீதிமொழிகள் 25:28 கூறுகிறது. பண்டைய காலத்தில், பட்டணங்களின் மதில்களே மக்களை எதிரிகளின் தாக்குதலிலிருந்து காத்தன. மதிலில் உண்டாகும் சிறிய பிளவுகூட மொத்த பட்டணத்தின் அழிவிற்கும் காரணமாகிவிடும்.
வேதத்திலுள்ள நீதிமொழிகளில் அநேக நீதிமொழிகள் இச்சயைடக்கத்தைப் பற்றிக் கூறுகிறது. "தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு" (நீதிமொழிகள் 25:16) என்று ஞானி எழுதினார். பொறுமையின்மை, கசப்பு, பேராசை ஆகிய இக்காரியங்கள், ஒரு பூச்சியைப்போல தேவனுக்குள் வெற்றியுள்ள ஜீவியத்தை நாம் செய்ய முடியாமல் தடுக்கிறது (கலாத்தியர் 5:22–23 பார்க்கவும்). நமது வாழ்வெனும் மதிலில் உள்ள ஓட்டைகளைக் கவனித்து, அவைகளைச் சீரமைக்கும் ஆரோக்கியமான மனநிலையே இச்சையடக்கமாகும்.
எனது வாழ்வைப் பரிசோதிக்கையில், என்னைப் பாதிக்கக்கூடிய ஓட்டைகளை ஆங்காங்கே காண்கிறேன். ஒரே சோதனையில் மீண்டும் மீண்டுமாய் விழுகிறேன், பொறுமை இழக்கிறேன். இச்சையடக்கமெனும் தேவனுக்குள்ளான ஆரோக்கியமான மனநிலை, என்னை இதுபோன்ற தடைகளிலிருந்து காக்க எவ்வளவு அவசியம்!
