வகை  |  odb

நமது குருவைப் போல

ஒரு வைரல் வீடியோவில், மூன்று வயது வெள்ளை பட்டை கராத்தே மாணவி தனது பயிற்சியாளரை தத்ரூபமாகப் பிரதிபலித்தாள். ஆர்வத்துடனும் உறுதியுடனும் அந்தச் சிறுமி தன் ஆசானோடு  மாணவர்க்கான உறுதிமொழியைக் கூறினாள். பின்னர், நிதானத்துடனும் கவனத்துடனும், அழகான மற்றும் ஆற்றலின் சிறிய பிம்பமாகிய அவள், தன் ஆசிரியர் சொன்ன மற்றும் செய்த அனைத்தையும் பின்பற்றினாள். அவள் மிக அற்புதமாக அதைச் செய்தாள்!

இயேசு ஒருமுறை கூறினார், "சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40). உதாரத்துவம், அன்பு மற்றும் குற்றப்படுத்தாமை போன்றவற்றில் தம்மை பிரதிபலிக்குமாறு தம் சீடர்களுக்கு வலியுறுத்தினார் (வ. 37-38) மற்றும் அவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பகுத்தறிந்துகொள்வது அவசியமென்றும் அவர் தம் சீடர்களிடம் கூறினார்: “ குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா” (வ. 39). குருட்டு வழிகாட்டிகளாக மக்களைப் பேரழிவிற்கு இட்டுச் செல்லும் பரிசேயர்களை இந்த தரநிலை தகுதியற்றதாக்கியது என்பதை அவருடைய சீடர்கள் பகுத்தறிய வேண்டியிருந்தது (மத்தேயு 15:14). மேலும் அவர்கள் தங்கள் குருவைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, கிறிஸ்துவின் சீடர்களின் நோக்கம் இயேசுவைப் போல் ஆக வேண்டும் என்பதுதான். ஆகவே, தாராள மனப்பான்மை மற்றும் அன்பைப் பற்றிய கிறிஸ்துவின் போதனைகளைக் கவனமாகக் கவனித்து, அதைப் பின்பற்றுவது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

இன்று இயேசுவைப் பின்பற்ற முயலும் விசுவாசிகளாகிய நாம் அறிவிலும், ஞானத்திலும், நடத்தையிலும் அவரைப் போல் ஆக, நம் வாழ்வை நம் மாபெரும் குருவிடம் ஒப்படைப்போம். உதாரத்துவமான, அன்பான வழிகளைப் பிரதிபலிக்க அவர் மட்டுமே நமக்கு உதவ முடியும்.

கண்ணீரிலுள்ள ஆசீர்வாதங்கள்

இங்கிலாந்தில் உள்ள ஒரு இளைஞரிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது, அவரது தந்தை (அறுபத்து மூன்று வயது மட்டுமே) ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்குப்  போராடிக்கொண்டிருப்பதாக அந்த மகன் விளக்கினார். நாங்கள் சந்திக்கவில்லை என்றாலும், அவருடைய அப்பாவின் வேலையும் என்னுடைய வேலையும் பல ஒற்றுமைகளைக் கொண்டிருந்தன. மகன், தன் தந்தையை உற்சாகப்படுத்த முயன்று, ஊக்கமூட்டும் செய்தி  மற்றும் ஜெபத்துடன் ஒரு காணொளியை அனுப்பச் சொன்னார். ஆழ்ந்த உணர்ச்சியுடன், நான் ஒரு சிறு செய்தியையும், குணமடைய ஒரு ஜெபத்தையும் பதிவு செய்தேன். அவருடைய அப்பா அந்த காணொளியைப் பார்த்து உற்சாகமடைந்தார் என்று என்னிடம் கூறப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் இறந்துவிட்டார் என்று எனக்கு மற்றொரு மின்னஞ்சல் வந்தது. அவர் தம் மனைவியின் கையைப் பிடித்தவாறே தம் இறுதி மூச்சை விட்டார்.

என் இதயம் உடைந்தது. அத்தகைய அன்பு, அத்தகைய இழப்பு. அந்த குடும்பம் மிக விரைவில் கணவனையும் தந்தையையும் இழந்தது. ஆயினும், துக்கப்படுபவர்களே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று இயேசு வலியுறுத்துவதைக் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது: "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:4). இயேசு துன்பமும் துக்கமும் நல்லது என்று சொல்லவில்லை, மாறாக, தேவனின் கிருபையும்  கருணையும் மிகவும் தேவைப்படுபவர்கள் மீது ஊற்றப்படுகிறதாகச் சொல்கிறார். மரணம் அல்லது தங்கள் சொந்த பாவத்தால் நிலைகுலைந்து போகிறவர்களுக்குத்  தேவனின் கண்காணிப்பும் ஆறுதலும் மிகவும் தேவை. "அவர்கள் ஆறுதலடைவார்கள்" (வச. 4) என்று நமக்கு வாக்களிக்கிறார்.

தேவன் தம்முடைய அன்பான பிள்ளைகளாகிய நம்மை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் (வ. 9). அவர் நம் கண்ணீரில் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

ஆசீர்வாதங்களை தாங்குபவர்

ஜனவரி 15, 1919 அன்று, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், மூல சர்க்கரை பாகை ஏற்றிச் செல்லும் ஒரு டேங்கர் வாகனம் வெடித்தது. 75 லட்சம் லிட்டர் மூல சர்க்கரை பாகு, பதினைந்து அடி அலையாய் 30 மைல் வேகத்தில் தெருவில் பாய்ந்து, ரயில் வண்டிகள், கட்டிடங்கள், மக்கள் மற்றும் விலங்குகளை மூழ்கடித்தது. இந்த மூல சர்க்கரை பாகு அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாய் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று 21 பேரின் உயிரைக் குடித்து, 150 பேருக்கு மேலானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

இந்த மூல சர்க்கரைப் பாகைப் போன்று, சில நல்ல விஷயங்கள் கூட நம்மை எதிர்பாராத விதமாய் முழ்கடிக்கலாம். தேவன் இஸ்ரவேலருக்கு வாக்குப்பண்ணிய தேசத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, மோசே அவர்களைப் பார்த்து, தேசத்திற்குள் பிரவேசிக்கும்போது அது தங்களுடைய சாமர்த்தியத்தினால் வந்தது என்று சொல்லவேண்டாம் என்று எச்சரிக்கிறார்: “நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி... உன் இருதயம் மேட்டிமையடையாமலும்… உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்” இருக்கும் படிக்கும் இந்த ஐசுவரியத்திற்கு அவர்களின் சாமர்த்தியம் காரணம் என்று சொல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். அதற்கு பதிலாக, “உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக... ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்” (உபாகமம் 8:12-14, 17-18) என்று அறிவுறுத்துகிறார். 

நம்முடைய சரீர ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதார தேவைகள் போன்ற அனைத்து காரியங்களும் தேவனுடைய கரத்தினால் அருளப்பட்ட ஈவுகள். நாம் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும், அவரே நம்மை தாங்குகிறவர். திறந்த கைகளோடு நம்முடைய ஆசீர்வாதத்தை பற்றிக்கொண்டு, நம் மீதான அவருடைய இரக்கங்களுக்காய் அவரை துதிப்போம். 

வெறுமையாய் ஓடுதல்

“இனி என்னால் இதைச் செய்ய முடியும் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று என் சிநேகிதி கண்ணீரோடு சொன்னாள். ஒரு சர்வதேச சுகாதார நெருக்கடியில் ஒரு செவிலியராக அவள் எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலையை அவள் விவாதிக்கும்போது அப்படி சொன்னாள். “தேவன் என்னை செவிலிய சேவை செய்ய அழைத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் உணர்வுபூர்வமாய் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றாள். அவள் மிகவும் சோர்வுற்றிருக்கிறாள் என்பதை அறிந்து, “நீ இப்போது உதவியற்றவளாய் உணருகிறாய் என்று எனக்குத் தெரியும், ஆனால் தேவன் உன்னை வழிநடத்தி பெலப்படுத்துவார்” என்று ஆறுதல் சொன்னேன். அந்த நேரத்தில் அவள் ஜெபிக்க தீர்மானித்தாள். விரைவில் அவளுடைய சோர்வுகள் மறைந்து ஒரு புதிய தெளிவுடன் காணப்பட்டாள். செவிலியர் பணியை தொடர்ந்து செய்வதற்கு மட்டுமல்லாது, பல நாடுகளில் இருக்கும் பல மருத்துவமனைகளுக்கு கடந்துசென்று சேவை செய்ய தேவன் அவளுக்கு பெலன் கொடுத்தார். 

கிறிஸ்துவின் விசுவாசிகளாய், நாம் பாரங்களினால் அழுத்தப்படும்போது நம்முடைய உதவிக்காகவும் ஊக்கத்திற்காகவும் தேவனை நோக்கிப் பார்ப்போம். ஏனெனில் அவர்  “சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை” (ஏசாயா 40:28). ஏசாயா தீர்க்கதரிசி தேவனைக் குறித்து, “சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்” (வச. 29) என்று சொல்லுகிறார். தேவனுடைய பெலன் நித்தியமானது என்றாலும், நாம் சரீரப்பிரகாரமாகவும் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்பதை அவர் அறிவார் (வச. 30). ஆனால் வாழ்க்கையின் சவால்களை மட்டும் கடக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்முடைய பெலத்திற்காக நாம் தேவனை சாரும்போது, அவர் நம்மை மீட்டெடுத்து, புதுப்பித்து, விசுவாசத்தில் வளருவதற்கான நிச்சயத்தை நமக்குத் தருவார்.