வகை  |  odb

கீழ்த்தளத்தில்

எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.

 

அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.

 

மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.

 

கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27–31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24).

 

நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் மதிக்கப்படுகிறது மற்றும் அனைவருக்கும் இன்றியமையாதது.

அமைதியின் ஜெபம்

கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களை போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டை தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது .

 

சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், “அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு சரியான முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது!

 

தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்?

நீண்ட காத்திருப்பு

துனின் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டபோது, இராணுவம் விசுவாசிகளை பயமுறுத்தி, அவர்களின் பண்ணை விலங்குகளை கொல்லத் தொடங்கியது. வாழ்வாதாரத்தை இழந்த துனின் குடும்பம், பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக, துன் தனது குடும்பத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தார். தேவன் தன்னுடன் இருப்பதை அவர் அறிந்திருந்தும், பிரிவின் போது இரண்டு குடும்ப உறுப்பினரை இழந்ததால் விரக்தியில் இருந்தார்.

 

நீண்ட காலத்திற்கு முன்பு, மற்றொரு மக்கள் குழுவினர் இதைப் போலவே கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். ஆகவே, அந்த மக்களை (இஸ்ரவேலர்) எகிப்திலிருந்து வெளியே வழிநடத்த தேவன் மோசேயை நியமித்தார். மோசே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் பார்வோனை அணுகியபோது, எகிப்திய அதிகாரி அடக்குமுறையை தீவிரப்படுத்தினான் (யாத்திராகமம் 5:6-9). பார்வோன்: நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான் (வ.5:2).

மக்கள் மோசேயிடம் முறையிட்டனர், அவர் தேவனிடம் முறையிட்டார் (வ.20-23).

 

இறுதியில், தேவன் இஸ்ரவேலர்களை விடுவித்தார், அவர்கள் விரும்பிய சுதந்திரத்தைப் பெற்றார்கள். ஆனால் தேவனின் வழியிலும், நேரத்திலும். அவர் ஒரு நீண்ட காலம் எடுத்து, அவருடைய குணாதிசயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். பெரிய விஷயத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்.

 

துன் அகதிகள் முகாமில் தனது ஆண்டுகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார், புதுதில்லி வேதாகம கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இப்போது அவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு போதகர். ஒரு புதிய அடைக்கலத்தை கண்டுகொண்டு அவரைப் போலவே இருந்த மக்களுக்கு போதகரானார். "ஒரு அகதியான எனது கதை ஒரு ஊழியனாக மற்றவர்களை வழிநடத்துவதற்காக என்னை புடமிட்டது," என்று அவர் கூறினார். அவரது சாட்சியில், யாத்திராகமம் 15:2 இல், மோசேயின் பாடலை மேற்கோள் காட்டுகிறார், ”கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்” (யாத்திராகமம் 15:2). அவர் இன்று நம்முடையவராய் இருக்கிறார்.

கூடுதல் கிருபை தேவை

திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் என் அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவள் சென்ற பிறகு, இன்னொரு பெண் என்னிடம் வந்தாள்: “அவளைப் பற்றி கவலைப்படாதே. அவளை “கூ.கி.தே” என அழைக்கிறோம்; அதாவது “கூடுதல் கிருபை தேவை” ” என்றாள்.

 

நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின் போதும் அந்த வாக்கிய சுருக்கத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து “கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தாள், மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தாள் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். அவளையும் மற்றவர்களையும் கூ.கி.தே என நியாயந்தீர்த்து முத்திரை பதித்து கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். கடந்த காலத்தில். எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப் போல எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது.

 

எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்”. (எபேசியர் 2:3) ஆனால் தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசை கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல”. (எபேசியர் 2:9) என்கிறார்.

 

இந்த வாழ்நாள் பயணத்தின் போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, ​​பரிசுத்த ஆவியானவர் நம் குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9).