எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.

அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.

மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.

கிறிஸ்தவ ஊழியத்தின் “மேல் தளத்தில்” இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27–31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24).

நீங்கள் ஓர் “கீழ்த்தளத்தில்” உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் மதிக்கப்படுகிறது மற்றும் அனைவருக்கும் இன்றியமையாதது.