வகை  |  odb

உறுதியாய் தரித்திரு

நான் அறைக்குள் நுழைந்த பிறகு, என் உடல் தண்ணீருக்கு மேல் வசதியாக மிதந்தது, அறை இருட்டானது மற்றும் பின்னணியில் ஒலித்த மென்மையான இசை அமைதியாகிவிட்டது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த தண்ணீர்த்தொட்டிகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்ககூடியது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் இந்த அனுபவம் இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. உலகின் குழப்பம் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன், என் உள் உணர்வுகளை என்னால் தெளிவாகக் கேட்க முடிந்தது. நான் என்னை சமநிலைப்படுத்தி, புத்துணர்ச்சி பெற்ற நிலையில் என்னை கிடத்தினேன். மௌனமான அமைதி நிலையில் வல்லமை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 

ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை பெற்றுக்கொண்டு, நமது வல்லமையைப் புதுப்பித்து, தேவனுடைய பிரசன்னத்தின் அமைதியில் நாம் மிகவும் வசதியாக இளைப்பாறக்கூடும். நாம் மௌனமாய் காத்திருக்கும்வேளையில், நம் வாழ்வில் உள்ள கவனச்சிதறல்களை நீக்கி, அவர் நம்மைப் பலப்படுத்துகிறார். அதினால் அவருடைய மெல்லிய சத்தத்தை நாம் இன்னும் தெளிவாகக் கேட்க முடியும் (சங்கீதம் 37:7).

இதுபோன்று நம்முடைய புலன்களை ஆசுவாசப்படுத்தும் அறைகள் நிச்சயமாக அமைதியின் ஒரு வடிவமாக இருந்தாலும், தேவனோடு இடைவிடாமல் நேரம் செலவழிக்க தேவன் நமக்கு ஒரு எளிமையான வழியைக் கற்றுக்கொடுக்கிறார். “நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு” (மத்தேயு 6:6) என்று சொல்லுகிறார். நாம் அவருடைய மகத்தான பிரசன்னத்தின் அமைதியில் வாழ்க்கையின் சவால்களுக்கான பதில்களைத் தேடும்போது, அவர் நம் நடைகளை ஸ்திரப்படுத்தி, அவருடைய நீதி நம் மூலம் பிரகாசமாக ஓளிரச்செய்வார் (சங்கீதம் 37:5-6).

எந்த ஞானம்?

2018, ஈஸ்டர் தினத்திற்கு சற்று முன்பு, தீவிரவாதி ஒருவன் மார்க்கெட் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொன்று, ஒரு பெண்ணை பிணையக் கைதியாய் கொண்டுசென்றான். அந்த பெண்ணைக் காப்பாற்றும் காவலர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஆனால் அந்த பெண்ணுக்கு பதிலாக தன்னை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை விடுவிக்குமாறு ஒரு காவல் அதிகாரி துணிச்சலாய் முன்வந்தார். 

அந்த வழக்கத்திற்கு மாறான துணிச்சல் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. பிரபலமான நபர்கள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களையே நீங்கள் கலாச்சார அடையாளமாய் பார்ப்பதுண்டு. அவற்றை ஊடகங்களிலும் அவ்வப்போது பதிவிட்டு, மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுண்டு. “நீங்கள் கனவுகண்ட வாழ்க்கையை வாழ்வதே மிக சுவாரஸ்யமான வாழ்க்கை” என்பது அப்படிப்பட்ட ஒரு பிரபல தத்துவம். “உன்னை முதலில் நீ நேசி, மற்றதெல்லாம் தானாய் உன்னிடத்தில் சேரும்” என்பதும் இன்னொரு தத்துவம். “உனக்காய் என்ன செய்யவேண்டுமோ, அதை செய்” என்பது மூன்றாவது தத்துவம். இந்த தத்துவங்களையெல்லாம் அந்த காவல் அதிகாரி கடைபிடித்திருந்திருப்பாராகில், முதலில் ஓடி ஒளிந்து தன்னுடைய உயிரை காப்பாற்ற முயற்சித்திருப்பார். 

இந்த உலகத்தில் இரண்டு வகையான ஞானம் இருப்பதாக அப்போஸ்தலர் யாக்கோபு குறிப்பிடுகிறார்: ஒன்று, பூமிக்குரிய ஞானம், மற்றது பரலோக ஞானம். முதலாவது ஞானம், சுயநலத்தினாலும் ஓழுங்கீனங்களினாலும் அடையாளப்படுத்தப்படுகிறது (யாக்கோபு 3:14-16); இரண்டாவது ஞானம், தாழ்மை, கீழ்ப்படிதல், சமாதானம் செய்தல் ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படுகிறது (வச. 13, 17-18). பூமிக்குரிய ஞானமானது சுயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால் பரலோக ஞானமானது, மற்றவர்களை முன்னிலைப்படுத்தி, தாழ்மையான கிரியைகளை நடப்பிக்க தூண்டுகிறது (வச. 13). 

காவல் அதிகாரி சொன்ன நிபந்தனையை அந்த தீவிரவாதி ஏற்றுக்கொண்டான். பிணையக்கைதியாயிருந்த பெண் விடுவிக்கப்பட்டாள். ஆனால் அந்த காவல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த ஆண்டின் ஈஸ்டர் தினத்தன்று, யாரோ ஒருவருக்காய் தவறுசெய்யாத ஒரு மனிதன் உயிர்கொடுத்த சம்பவத்தை உலகம் சாட்சியிட்டது. 

பரலோகத்தின் ஞானமானது சுயத்தின் மீது தேவனை வைப்பதால், தாழ்மையான கிரியைகளை செய்ய நம்மை தூண்டுகிறது (நீதிமொழிகள் 9:10). நீங்கள் எந்த ஞானத்தை இன்று பின்பற்றுகிறீர்கள்?

வாக்குறுதி நிறைவேறியது

நான் சிறுபிள்ளையாயிருந்தபோது ஒவ்வொரு கோடை விடுமுறையின்போதும் இருநூறு மைல்கள் தூரம் வரை பயணம் செய்து என்னுடைய தாத்தா பாட்டியிடம் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பது வழக்கம். நான் நேசித்த என்னுடைய தாத்தா பாட்டியிடத்திலிருந்து எவ்வளவு ஞானத்தைக் கற்றுக்கொண்டேன் என்று நான் அப்போது அறியாதிருந்தேன். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் தேவனோடு நடந்த அனுபவங்களையும் என்னுடைய சிறிய சிந்தையினால் கற்பனை செய்து பார்க்கமுடியாத ஞானத்தை அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தது. அவர்களோடு தேவனுடைய உண்மைத்துவத்தை பற்றிப்பேசிக்கொண்டிருக்கும்போது, தேவன் தான் செய்த அனைத்து வாக்குத்தத்தங்களிலும் உண்மையுள்ளவர் என்னும் மனவுறுதி எனக்கு ஏற்பட்டது. 

தேவதூதன் இயேசுவின் தாயாகிய மரியாளை சந்தித்தபோது, அவள் இளம் வயதுடையவளாயிருந்தாள். காபிரியேல் தூதனால் கொண்டுவரப்பட்ட செய்தி நம்பமுடியாத ஆச்சரியமாய் தோன்றினாலும் அதை கிருபையோடு செயல்படுத்த அவள் முற்பட்டாள் (லூக்கா 1:38). ஒருவேளை கர்ப்பமாயிருக்கும் அவளுடைய வயதுசென்ற உறவினரான எலிசபெத்தை (அறுபது வயதிருக்கும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்) பார்க்க சென்றிருந்தபோது, மரியாளுடைய வயிற்றில் கருவுற்றிருப்பது மேசியா என்னும் எலிசபெத்தின் ஆறுதலான வார்த்தைகள் அவளை தேற்றியிருக்கலாம் (வச. 39-45). 

என்னுடைய தாத்தா பாட்டியைப் போன்று நாமும் கிறிஸ்துவில் அதிகதிகமாய் வளர்ச்சியுறும்போது, தேவன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுகிற தேவன் என்பதை விசுவாசிக்க பழகிக்கொள்வோம். எலிசபெத்துக்கும் அவளுடைய கணவனான சகரியாவுக்கும் அவர் செய்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார் (வச. 57-58). அவர்களுக்கு பிறந்த பிள்ளையான யோவான் ஸ்நானகன், மனுஷீகத்தை எதிர்காலத்தை மாற்றக்கூடிய நபராய் நூற்றாண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனமாய் முன்னறிவிக்கப்பட்டவர். வாக்குப்பண்ணப்பட்ட உலக இரட்சராகிய மேசியா வருகிறார் (மத்தேயு 1:21-23).

வழிநடத்துதலை ஏற்றல்

அந்த கன்வென்ஷன் ஹால் முழுவதும் இருளாக்கப்பட்டது. அதில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் அர்ப்பணிப்பு ஜெபத்திற்காய் தங்கள் தலைகளை தாழ்த்தினர். வெளிநாட்டில் ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்களை அவர் வரவேற்றபோது, என் தோழி லினெட் தனது இருக்கையை விட்டு எழுந்திருப்பதை என்னால் உணர முடிந்தது. அவள் பிலிப்பைன்ஸில் வாழ்ந்து ஊழியம் செய்வதாக உறுதியளித்தார். ஆனாலும் எனக்கு நிற்க ஆசை வரவில்லை. எனது சொந்த நாட்டில் உள்ள தேவைகளைப் பார்த்து, என் நாட்டு மக்களுக்கே தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நான் வேறொரு நாட்டில் என் வீட்டை உருவாக்கி, தேவன் எனக்குக் காண்பிக்கும் மக்களுக்கு அவருடைய அன்பைக் குறித்து சொல்லுவேன். நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஊழியத்திற்கு தேவன் என்னை அழைத்தார் என்பதை உணர்ந்தவுடன், என்னுடைய வாழ்க்கையை நான் எப்படி வாழப்போகிறேன் என்னும் என்னுடைய எண்ணம் மாறியது. 

மீன்பிடித்துக்கொண்டிருந்த தன்னுடைய சீஷர்கள் உட்பட இயேசு தாம் சந்தித்த யாவரையும் ஆச்சரியப்படுத்தினார். மீன்களைப் பிடிக்கும் ஒரு புதிய யுக்தியை இயேசு கற்றுக்கொடுத்தபோது, பேதுருவும் அந்திரேயாவும் தங்களுடைய வலைகளை விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றினார்கள் (மத்தேயு 4:20). யாக்கோபும் யோவானும் தங்களுடைய படகை விட்டுவிட்டு அவருக்கு பின்சென்றனர் (வச. 22). இயேசு அவர்களுக்கு கொடுத்த ஆச்சரியத்தை பின்பற்றி, எங்கு போகிறோம் என்பதை அறியாமல் அவர்கள் புறப்பட்டு சென்றார்கள். 

தேவன் பெரும்பாலானவர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஊழியம் செய்யும்படிக்கு அழைப்பு விடுக்கிறார். நாம் தரித்திருந்து ஊழியம் செய்கிறோமோ அல்லது வேறிடத்திற்கு புறப்பட்டுபோய் ஊழியம்செய்கிறோமோ, நாம் சற்றும் கற்பனை செய்யாத வழியில் அவர் நம்மை ஆச்சரியத்தினால் நிரப்பி வழிநடத்துவார்.

ஆச்சரியங்களின் தேவன்

கருச்சிதைவு ஏற்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, வலேரி ஒரு சில பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்தாள். சில மைல்களுக்கு அப்பால் இருந்த அவளுடைய ஜெரால்ட் என்னும் கைவினையாளர் ஒருவர் அவள் விற்ற குழந்தை தொட்டிலை ஆர்வத்துடன் வாங்கினார். அதை வாங்கும்போது, வலேரியிடம் பேசிய அவரது மனைவியின் வாயிலாக, வலேரியின் பெரும் இழப்பைக் குறித்து அறிந்துகொண்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் அவளது நிலைமையைக் கேள்விப்பட்ட ஜெரால்ட், தொட்டிலைப் பயன்படுத்தி வலேரிக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, அவர் கண்ணீருடன் ஒரு அழகான பெஞ்சை அவளுக்கு பரிசளித்தார். “இங்கே நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது" என்று வலேரி பெருமிதப்பட்டாள். 

வலேரியைப் போலவே, ரூத்தும் நகோமியும் பெரும் இழப்பை தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. நகோமியின் கணவரும் அவளுடைய இரண்டு குமாரர்களும் மரித்துபோய்விட்டனர். தற்போது அவளும் அவளுடைய மருமகளான ரூத்தும் ஆதரவற்று நிர்க்கதியாய் நிற்கின்றனர் (ரூத் 1:1-5). அங்கே தான் போவாஸ் வருகிறார். போவாஸின் நிலத்தில் சிந்தியிருக்கும் கதிர்களை பொறுக்குவதற்கு போன ரூத்தைக் குறித்து போவாஸ் கேள்விப்படுகிறார். அவள் யார் என்று அறிந்த பின்பு அவளுக்கு தயைபாராட்டுகிறார் (2:5-9). “எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது” (வச. 10) என்று ரூத் ஆச்சரியத்துடன் கேட்கிறாள். அதற்கு போவாஸ்,  “உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், ... எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது” (வச. 11) என்று பதிலளிக்கிறான். 

போவாஸ் ரூத்தை மணந்துகொண்டு, நகோமியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறான் (வச. 4). அவர்களுடைய அந்த திருமணத்தின் மூலம், முற்பிதாவான தாவீது மற்றும் இயேசுகிறிஸ்து அவர்களின் வம்சாவளியில் தோன்றுகின்றனர். ஜெரால்டையும் போவாஸையும் தேவன் பயன்படுத்தி மற்றவர்களின் கண்ணீரை தேவன் துடைப்பார் என்றால், வேதனையில் உள்ளவர்களின் கண்ணீரை துடைக்க தேவன் நம் மூலமாகவும் கிரியை செய்ய முடியும்.