விடுமுறை நாட்களில், நானும் எனது மனைவியும் அதிகாலையில் பைக் சவாரி செய்து மகிழ்ந்தோம். ஒரு பாதை எங்களை பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடுகளின் சுற்றுப்புறத்தின் வழியாக அழைத்துச் சென்றது. பல்வேறு நபர்களை நாங்கள் பார்த்தோம்: குடியிருப்பாளர்கள் தங்கள் நாய்களுடன் நடந்து செல்வது, சக பைக் ஓட்டுபவர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் புதிய வீடுகளை கட்டுவது அல்லது நன்கு பராமரிக்கப்பட்ட நிலப்பரப்புகளை பராமரிப்பது. பலதரப்பட்ட மக்களை நான் பார்க்க நேரிட்டபோது, ஒரு மதிப்புமிக்க உண்மை எனக்கு நினைவூட்டப்பட்டது. நமக்குள் நிஜமாகவே எந்த வேறுபாடும் இல்லை. பணக்காரன் அல்லது ஏழை, முதலாளி அல்லது தொழிலாளி வர்க்கம் போன்று எந்த வேறுபாடும் இல்லை. அன்று காலை அந்தத் தெருவில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தோம். “ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்” (நீதிமொழிகள் 22:2). நமக்கும் வேறுபாடுகள் இருப்பினும், நாம் அனைவரும் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம் (ஆதியாகமம் 1:27).

அதுமட்டுமின்றி, தேவனுக்கு முன்பாக நாம் அனைவரும் சமமாக இருக்கிறோம் என்பது, நம்முடைய பொருளாதார, சமூக மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து, நாம் எல்லோரும் பாவிகளாய் இருக்கிறோம் என்பதிலும் ஒரு ஒற்றுமை வெளிப்படுகிறது: “எல்லோரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி” (ரோமர் 3:23). நாமெல்லாரும் கீழ்படியாமையினிமித்தம் பாவஞ்செய்து, அவருக்கு முன்பாக குற்றவாளிகளாய் இருக்கிறோம். நமக்கு இயேசு தேவை.

நாம் அடிக்கடி பல்வேறு காரணங்களுக்காக மக்களை குழுக்களாக பிரிக்கிறோம். ஆனால், உண்மையில், நாம் அனைவரும் மனித இனத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். பாவிகளுக்கும் இரட்சகர் அவசியம் என்பதினால் நாம் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இருந்தாலும், அவருடைய கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் (வச. 24).