கிரியைகளும் சத்தியமும்
நானும் என் கணவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனது தாய் மாமா எனது குடும்ப வரலாற்றை எங்களிடம் கூறினார். எனது தாத்தா பள்ளி ஒன்றின் பள்ளி முதல்வராக இருந்த போதிலும் அந்த வருமானம் அவரது ஏழு பிள்ளைகளுக்கு போதுமானதாக இல்லை என்று விளக்கினார். ஆயினும்கூட, அவர் தனது மூத்த குழந்தைகளின் உயர் கல்வியில் முதலீடு செய்தார், அவர்கள் கல்லூரிக்குச் செல்லும்போது பெரும்பாலும் மாமாக்கள் அல்லது அத்தைகளுடன் தங்கினர். இந்த மூத்தவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியபோது, அவர்கள் தங்கள் இளைய உடன்பிறப்புகளின் கல்விக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர். "நாங்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறோம், உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டால் நீங்கள் எங்களிடம் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும் தயாராக இருக்கிறோம்" என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.
யோவானும் தனது நிருபத்தில், "பிள்ளைகளே" என்று அழைத்தவர்களுக்கு இதே போன்ற அறிவுரைகளை வழங்குகிறார். அவர், "என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" (வ.18) என்று எழுதுகிறார். இயேசு தனக்கென்று ஒன்றும் செய்யாமல் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தபோது நம்மீது கொண்டிருந்த அன்பை அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (வ.16). உண்மையில், "அன்பு இன்னதென்று" (வ.16) என்றால் இயேசுவின் செயலே என்று யோவான் கூறுகிறார். அதை மனதில் கொண்டு யோவான், விசுவாசிகளை தங்கள் "பொருள் உடைமைகளை" ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள அழைத்தார் (வ.17). ஒரு விசுவாசி, இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என்று யோவான் கேட்கிறார்.
தன்னுடைய உடைமைகளைப் பதுக்கி வைப்பது விவேகமானது என்று உலகம் நமக்குச் சொல்கிறது. ஆனால் இவை பிறர்க்குச் சேவை செய்யக் கொடுக்கப்பட்ட வரங்கள் என்று வேதாகமம் சொல்கிறது (1 பேதுரு 4:10). உறவினராகவோ, நண்பராகவோ, சக சீடராகவோ அல்லது அந்நியராகவோ யாரேனும் ஒருவர் தேவையில் இருப்பதைக் கண்டால், செயலாலும் உண்மையாலும் அவர்களை நேசிப்போம். அவ்வாறு செய்வதன் மூலம், நம்மில் இருக்கும் தேவனின் அன்பை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம்.

பிறரை நேசிப்பதன் மூலம் தேவனை நேசி
ஆல்பா குடும்பம் பதின்மூன்று மாத இடைவெளியில் ஒரே மாதிரியான இரண்டு இரட்டையர்களைப் பெற்றெடுக்கும் அரிய நிகழ்வை அனுபவித்தது. அவர்கள் தங்கள் பெற்றார் கடமைகளையும் வேலைகளையும் எப்படி சமாளித்தார்கள்? அவர்கலருகே இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உதவினர். இரண்டு தாத்தா பாட்டிகளும் பகலில் ஒரு இரட்டைக் குழந்தைகளைப் பராமரித்தனர், அதனால் பெற்றோர்கள் வேலை செய்து காப்பீட்டிற்கு பணம் செலுத்தலாம். ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கான அணையாடைகளை வழங்கியது. தம்பதியரின் சக பணியாளர்கள் தங்கள் தனிப்பட்ட விடுப்புநாட்களில் உதவினர். “எங்கள் சுற்றத்தார் இல்லாமல் நாங்கள் அதை செய்திருக்க முடியாது,” என்று அவர்கள் கூறினார்கள். உண்மையில், ஒரு நேரடி நேர்காணலின் போது, சக தொகுப்பாளினி தனது மைக்கைக் கழற்றிவீசி, குறுநடை போடும் குழந்தைக்குப்பின் ஓடினார்; நண்பர்களைப்போல தன் பங்காற்றினார்!
மத்தேயு 25:31-46 இல், நாம் பிறருக்கு சேவை செய்கையில், தேவனைச் சேவிக்கிறோம் என்பதைக் குறிக்க இயேசு ஒரு உவமையைச் சொல்கிறார். பசித்தோருக்கு உணவு, தவித்தோர்க்கு தண்ணீர், வீடற்றவர்களுக்கு உறைவிடம், நிர்வாணிகளுக்கு உடைகள், நோயுற்றோருக்குக் குணமளித்தல் (வ. 35-36) உள்ளிட்ட சேவைச் செயல்களைப் பட்டியலிட்ட பிறகு, இயேசு, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வ.40) என்று முடிக்கிறார்.
நம்முடைய இரக்கத்தை உண்மையாக பெறுவது இயேசுவேயென்று கற்பனை செய்வது, நமது சுற்றுப்புறங்களிலும்; குடும்பங்களிலும்; சபைகளிலும்; உலகிலும் சேவை செய்வதற்கான உண்மையான உந்துதலாகும். பிறரின் தேவைகளுக்கு தியாகமாக நாம் செலவிட அவர் நம்மை உணர்த்துகையில், நாம் அவருக்குச் சேவை செய்கிறோம். நாம் பிறரை நேசிக்கையில், நாம் தேவனை நேசிக்கிறோம்.

கர்த்தருடைய புயத்தில்
அந்தத் துளையிடும் கருவியின் சத்தம் ஐந்து வயது சாராவை பயமுறுத்தியது. அவள் பல் சிகிச்சைக்கான நாற்காலியில் இருந்து குதித்து ஓடி மீண்டும் உள்ளே வருவதற்கு மறுத்துவிட்டாள். சூழ்நிலையைப் புரிந்துகொண்டு தலையசைத்தவாறே, பல் மருத்துவர் அவளுடைய தந்தையைப் பார்த்து, “நீங்கள் நாற்காலியில் ஏறி அமருங்கள்” என்று கூறினார். ஜேசனும், சிகிச்சை எவ்வளவு இலகுவானது என்பதை காண்பிப்பதற்காக மருத்துவர் தன்னை ஏறி அமரும்படிக்கு சொல்லுகிறார் என்று எண்ணி, நாற்காலியில் ஏறி அமர்ந்தார். ஆனால், மருத்துவர் அவளிடம் திரும்பி, “இப்போது மேலே ஏறி அப்பாவின் மடியில் உட்காரு” என்றார். அவளது தந்தை இப்போது அவளை உறுதியளிக்கும் கரங்களில் ஏந்தியிருப்பதால், சாரா முற்றிலும் நிதானமாகிவிட்டாள். இப்போது பல் மருத்துவரால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கமுடிந்தது. அன்று, ஜேசன் தன் பரலோகத் தகப்பனின் பிரசன்னத்தின் ஆறுதலைப் பற்றிய ஓர் சிறந்த பாடத்தைக் கற்றுக்கொண்டார். “சில வேளைகளில் நாம் கடந்துசெல்லவேண்டிய துயரமான பாதையினூடாய் தேவன் நம்மை நடத்திச்செல்வார்.” ஆனால் “நான் உன்னோடேகூட இருக்கிறேன்” என்று அவர் விளங்கப்பண்ணுகிறார்.
சங்கீதம் 91, தேவனுடைய ஆறுதலான பிரசன்னத்தையும் வல்லமையையும் பற்றிக் கூறுகிறது. அவை நம்முடைய சோதனைகளை எதிர்கொள்ள நமக்கு பெலனை அளிக்கிறது. அவருடைய வல்லமையின் கரத்தில் பாதுகாப்பாய் இருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதே போன்று அவரை நேசிப்பவர்களுக்கு “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” (வச. 15) என்று வாக்களிக்கப்படுகிறது. வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பல சவால்கள் மற்றும் சோதனைகள் உள்ளன. மேலும் நாம் தவிர்க்க முடியாமல் வலியையும் துன்பத்தையும் கடந்து செல்லவேண்டியிருக்கும். ஆனால் தேவனுடைய வல்லமையின் கரங்கள் நம்மைச் சுற்றியிருப்பதால், நம் நெருக்கடிகளையும் சூழ்நிலைகளையும் நாம் தாங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் நாம் அவரில் வளரும்போது, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவாராக.
தாராளமான அன்பு
விமானத்தில் என்னருகே அமர்ந்தவள்; தான் மதம் சாராதவள் என்றும், நிறைய கிறிஸ்தவர்கள் வசிக்கும் நகரத்திற்கு குடிபெயர்ந்திருப்பதாகவும் என்னிடம் கூறினாள். அவளது அயலகத்தாரில் அதிகமானோர் திருச்சபையின் வழிபாட்டிற்கு செல்வதாக அவள் குறிப்பிடுகையில், அவளுடைய அனுபவத்தைப் பற்றி நான் கேட்டேன். அவர்களின் பெருந்தன்மைக்கு தன்னால் ஒருபோதும் கைமாறு செய்ய முடியாது என்றார். தனது ஊனமுற்ற தந்தையை புதிய நாட்டிற்கு அழைத்து வந்தபோது, அவளுடைய அண்டை வீட்டார் அவளது வீட்டிற்கு ஒரு சாய்வுதளத்தை உருவாக்கி, மருத்துவமனை படுக்கை மற்றும் மருத்துவப் பொருட்களை தானமாக வழங்கினர். அவள், “கிறிஸ்தவனாக இருப்பது ஒருவரை அன்பானவராக ஆக்குகிறது என்றால், எல்லோரும் கிறிஸ்தவராக வேண்டும்” என்றாள்.
இயேசு என்ன நம்பினாரோ அதையே அவள் சொன்னாள், “இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத்தேயு 5:16). பேதுரு இயேசுவின் கட்டளையை கேட்டு அதையே அறிவித்தார், “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேதுரு 2:12).
இயேசுவை விசுவாசிக்காத நம் அயலகத்தாருக்கு நாம் எதை நம்புகிறோம், ஏன் நம்புகிறோம் என்று புரியாமல் இருக்கலாம். நமது தாராளமான அன்பை இன்னும் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத வரை, நமது நம்பிக்கையை திணிக்க வேண்டாம். மேலும் அவள் தன்னுடைய கிறிஸ்தவ அயலகத்தார், தான் அக்கறைகொள்ளவிட்டாலும், “அவர்களில் ஒருவராக” அவளிடம் கரிசனைகொள்வதை கண்டு வியந்தாள். கிறிஸ்துவினிமித்தம் தான் நேசிக்கப்படுவதை அறிந்திருந்தாள், மேலும் தேவனுக்கு நன்றி கூறுகிறாள். அவள் இன்னும் அவரை நம்பவில்லை, ஆனால் மற்றவர்கள் நம்புவதால் அவள் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.

அன்பின் அடுத்த படி
தன் போட்டியாளருக்கு யாராவது உதவ என்ன காரணம்? விஸ்கான்சினில் உள்ள அடோல்போ என்ற உணவக உரிமையாளருக்கு, கோவிட் விதிமுறைகளுக்கு ஏற்ப போராடும் மற்ற உள்ளூர் உணவக உரிமையாளர்களை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இது அமைந்தது. ஒரு தொற்றுநோய் சமயத்தில் வணிகம் செய்வதில் உள்ள சவால்களை அடோல்போ நன்கு அறிந்திருந்தார். மற்றொரு உள்ளூர் வணிகரின் பெருந்தன்மையால் ஊக்கமடைந்த அடோல்போ, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து, இரண்டாயிரம் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள கூப்பன்களை வாங்கினார். அவற்றை தனது வாடிக்கையாளர்களுக்கு, அவரருகே உள்ள மற்ற உணவகங்களில் பயன்படுத்துவதற்காகக் கொடுத்தார். இது அன்பின் வெளிப்பாடாகும், வெறும் வார்த்தைகள் அல்ல கிரியைகள்.
மனிதகுலத்திற்காக தனது வாழ்க்கையை தானே முன்வந்து அர்ப்பணித்த இயேசுவின் வெளிப்படுத்தப்பட்ட அன்பின் மீது (1 யோவான் 3:16) கட்டும்படிக்கு, யோவான் தனது வாசகர்களை அடுத்த படியெடுத்து அன்பை செயல்படுதிட ஊக்கப்படுத்தினார். யோவானை பொறுத்தவரை, “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (வ. 16) என்பது இயேசுவால் எடுத்துக்காட்டப்பட்ட அதே வகையான அன்பை வெளிப்படுத்துவதாகும்; மேலும் இது பெரும்பாலும் அன்றாட, நடைமுறைச் செயல்களின் வடிவத்தை எடுக்கும், அதாவது பொருள் உடைமைகளைப் பகிர்ந்து கொள்வது போன்றது. வார்த்தைகளால் நேசித்தால் போதாது; அன்புக்கு நேர்மையான, அர்த்தமுள்ள செயல்கள் தேவை (வ.18).
அன்பை செயலில் காட்டுவது கடினமாக இருக்கலாம், ஏனென்றால் அதற்கு பெரும்பாலும் தனிப்பட்ட தியாகமும் அல்லது மற்றொரு நபருக்காக நம்மை நாமே விட்டுக்கொடுப்பதும் வேண்டும். தேவனின் ஆவியால் பலப்பட்டு, நம்மீது அவர் வைத்திருக்கும் அளவில்லா அன்பை நினைத்து, அன்பின் அடுத்த படியை நாம் எடுக்க முடியும்.
