
இயேசுவில் வளா்தல்
நான் சிறுவனாயிருக்கும் போது, பெரியவர்களை ஞானிகளென்றும் தோற்கடிக்கப்படாதவர்களென்றும் நினைத்தேன். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும், எனக்கும் நான் வளர்ந்த பிறகு, அன்றன்று நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வரும் என்று நினைத்தேன். இப்படி, "ஒரு நாள்" என் வாழ்வில் பல ஆண்டுகளுக்குப் பின் வந்தது, அது எனக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால், பல முறை, எனக்கு இன்னும் என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதே. குடும்பத்தில் நோய், வேலையில் பிரச்சினைகள் அல்லது ஒரு உறவில் மோதல் வந்தபோது, அந்த நேரத்தில் அவைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாததால், நான் போராட வேண்டியதாயிருந்தது, இவை எனக்கு விட்டு சென்ற ஒரே ஒரு வழி, நான் என் கண்களை மூடி, "ஆண்டவரே, என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக்கு உதவி செய்யும்" என்று மனதில் ஜெபிப்பது மட்டமேயாகும்.
அப்போஸ்தலன் பவுல் இந்த உதவியற்ற உணர்வை அனுபவித்தார். அவர் வாழ்விலிருந்த "முள்" அது சரீர நோயாக இருந்திருக்கலாம், அது அவருக்கு மிகுந்த வலியையும் தவிப்பையும் கொடுத்தது. ஆனால் இந்த முள்ளின் மூலம் தான் பவுல் தேவனின் அன்பும், வாக்குத்தத்தங்களும், மற்றும் ஆசீர்வாதங்களும் தனது பலவீனத்தினால் பாடுகளைச் சகிக்கவும், மேற்கொள்ளவும் போதுமானதாக இருந்ததை அனுபவித்தார் (2 கொரிந்தியர் 12:9). தனிப்பட்ட பலவீனமும் உதவியற்ற தன்மையும் தோல்வி அல்ல என்பதை அவர் கற்றுக்கொண்டார். தேவனை நம்பி அவரிடம் நம்மை அர்ப்பணிக்கையில், இந்த சூழ்நிலைகளில் அவர் கிரியை செய்யும் கருவிகளாக அவைகளை மாற்றுகின்றார் (வ. 9-10).
நாம் வளர்ந்துவிட்டதால், நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நிச்சயமாக, வயதுக்கேற்ற ஞானத்தில் வளர்கிறோம், ஆனால், நமது பலவீனங்கள் நிஜத்தில் நாம் எவ்வளவு பெலனற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன. நம்முடைய உண்மையான பெலன் கிறிஸ்துவில் இருக்கிறது: "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" (வ.10). உண்மையிலேயே "வளர்வது" என்பது நமக்குத் தேவனின் உதவி தேவை என்பதை உணரும்போது வரும் வல்லமையை அறிவது, நம்புவது மற்றும் கீழ்ப்படிவது.

இயேசுவைப் போல நேசித்தல்
இத்தாலியின் காஸ்னிகோவைச் சேர்ந்த டான் குசெப் பெரடெல்லி அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்று கூறப்பட்டது. "சமாதானமும் நன்மையும்" என்று வாழ்த்திக்கொண்டே, டான் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் நகரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்த ஒரு அன்பான மனிதர். அனைவருக்கும் அயராது நன்மைகளைச் செய்து வந்தார். ஆனால், அவரது வாழ்க்கையின் இறுதியில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உடல்நலம் கவலைக்கிடமானது. அவர் வாழ்ந்த அந்தப் பகுதி மக்கள் அவருக்கு உதவ ஒரு சுவாசக் கருவியை வாங்கி கொடுத்தனர். ஆனால், அவரது நிலை மேலும் மோசமடைந்தபோது, அவர் சுவாசக் கருவியைப் பயன்படுத்த மறுத்து, அதை தேவையள்ள ஒரு இளம் நோயாளிக்குப் பயன்படுத்த கேட்டுக்கொண்டார். அவர் மறுத்ததைக் கேட்டது யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனென்றால் பிறரை நேசிப்பதற்காகவே நேசிக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட ஒரு மனிதனுக்கான அவரது குணாதிசயத்தில் அது இருந்தது.
'நேசிக்கப்பட்டதற்காக நேசித்தல்', இதுவே அப்போஸ்தலன் யோவான் தனது சுவிசேஷம் முழுவதிலும் பறைசாற்றும் செய்தி. அன்புகூறப்படுவதும் பிறரிடம் அன்பு கூறுவதும், வானிலையைப் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் ஒலிக்கும் ஒரு ஆலய மணியைப் போன்றதாகும். யோவான் 15-ல், இப்படி அன்பு கூறுபவர்களின் உச்சகட்டம், அது அனைவராலும் விரும்பப்படுவதில்லை, ஆனால் அளவில்லாமல் எல்லோரையும் நேசிப்பதே மிகப்பெரிய அன்பு என்று யோவான் கூறுகிறார்: "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அன்பு ஒருவரிடத்திலுமில்லை."(வ. 13).
மனிதர்களின் தியாக அன்பிற்கான எடுத்துக்காட்டுகள் எப்போதும் ஊக்குவிக்கின்றன. எனினும் தேவனின் மகாபெரிய அன்போடு ஒப்பிடுகையில் அவைகள் மங்கிப்போகின்றது. ஆனால் இயேசுவின் கட்டளையான, "நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது." (வ. 12) என்பது நாம் தவறவிடக்கூடாத அழைப்பு. ஆம், எல்லோரிடமும் அன்பாயிருப்போம்..

தாழ்மை தரும் உயா்வு
பல ஆசிரியர்களைப் போலவே கேரியும் தனது ஆசிரியர் பணிக்காக, விடைத்தாள்களைத் தரவரிசைப்படுத்துவதில், மற்றும் மாலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேசுவதிலும் பல மணி நேரங்களை செலவழிக்கிறார். இந்த முயற்சியின் பலனைத் தக்கவைக்க, தன்னுடன் பணியாற்றும் பிற ஆசிரிய நண்பர்களின் தோழமை மற்றும் நடைமுறை உதவியைச் சார்ந்துகொள்கிறார். இந்த ஒத்துழைப்பினால் சவால் மிக்க அவருடைய பணி எளிதாக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்களின் சமீபத்திய ஆய்வில், நாம் தாழ்மையுடன் பணிபுரியும் போது ஒத்துழைப்பின் பலன் பெரிதாகிறது என்பதைக் கண்டறிந்துள்ளது. சக பணியாளர்கள் தங்கள் பலவீனங்களை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, மற்றவர்கள் தங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் பாதுகாப்பாக உணர்கிறார்கள், இது குழுவில் உள்ள அனைவருக்கும் திறம்பட உதவுகிறது.
வேதாகமம் குழுவாக ஒத்துழைத்து பணியாற்றுவதைவிட, தாழ்மையின் அவசியத்தை அதிகம் போதிக்கிறது. "கர்த்தருக்குப் பயப்படுதல்" அதாவது தேவனுடைய சௌந்தரியம், வல்லமை மற்றும் மாட்சிமையோடு நம்மை ஒப்பிட்டு, சரியான புரிதலை நாம் கொண்டிருக்கும்போது, அது நமக்கு "ஐசுவரியத்தையும் கனத்தையும் ஜீவனையும்" (நீதிமொழிகள் 22:4) தருகிறது. தாழ்மை, நம்மை உலகத்தின் பார்வையில் மட்டுமல்ல, தேவனின் பார்வையிலும் பயனுள்ளவர்களாய் சமூகத்தில் வாழ வழி நடத்துகிறது. ஏனென்றால் நாம் சகா மனிதர் அனைவருக்கும் பயனளிக்கும் வாழ்வை வாழ விரும்புகிறோம்..
"ஐசுவரியத்தையும், கனத்தையும் ஜீவனையும்" நமக்கென்றே பெறுவதற்காக மட்டும் நாம் தேவனுக்குப் பயப்படுவதில்லை, அப்படியிருந்தால் அது உண்மையான தாழ்மையாக இருக்க முடியாது. மாறாக, "தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலான" (பிலிப்பியர் 2:7) இயேசுவைப் பின்பற்றுகிறோம். எனவே, அவருடைய பணியைச் செய்வதற்கும், அவருக்கு கனத்தைக் கொடுப்பதற்கும், நம்மைச் சுற்றியுள்ளோர்க்கு வாழ்வளிக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதற்கும், தாழ்மையுடன் ஒத்துழைக்கும் ஒரு சரீரத்தின் அவயமாக நாம் மாறலாம்..

அன்பினால் ஊக்கப்படல்
கல்லூரி நாட்களில் ஜிம்மும் லனிடாவும் காதலர்கள். அவர்களின் திருமண வாழ்க்கை பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் லனிடா வித்தியாசமாக நடந்துகொண்டாள், வழிப்பாதைகளையும் பணிநியமனங்களையும் மறந்தாள். அவளுடைய 47ம் வயதில், ஆரம்பக்கால அல்சைமர் நோயால் அவள் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவளது முதன்மை பராமரிப்பாளராகக் கடந்த 10 ஆண்டுகள் இருந்த ஜிம், " நான் அவளை நேசிக்கிறேன் என்று சொன்னதைக் காட்டிலும், அல்சைமர் என் மனைவியைக் கற்பனை செய்ய முடியாத வழிகளில் அன்பு கூறவும் அவளுக்குச் சேவை செய்யவும் எனக்கு வாய்ப்பளித்தது" என்றார்.
பரிசுத்த ஆவியானவரின் வரங்களை விளக்குகையில், பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 13ல் அன்பின் நற்பண்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். கடமைக்காகச் செய்யும் சேவைகளையும், உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் அன்பின் செயல்களையும் வேறுபடுத்துகிறார். பேச்சாற்றல் நல்லது, ஆனால் அன்பில்லாவிடில் சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும்" (வ.1) இருக்கும் என்று பவுல் எழுதினார். "என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." (வ. 3). "அன்பே பெரியது" (வ. 13) என இறுதியில் பவுல் கூறியுள்ளார்..
தன் மனைவியைக் கவனித்துக் கொண்டதினால் அன்பு மற்றும் சேவையைப் பற்றிய ஜிம்மின் புரிதல் ஆழமாயிற்று. ஒவ்வொரு நாளும் அவளுக்கு உதவும் பெலனை, ஆழமான மற்றும் நிலையான அன்பு மட்டுமே அவருக்கு வழங்க முடியும். இறுதியில், தேவன் நம் மீது செலுத்தும் அன்பிலே இந்த முன்மாதிரியான தியாக அன்பை முழுமையாகக் காணலாம்.இந்த அன்பே பிதாவானவர் இயேசுவை நம் பாவங்களுக்காக மரிக்க அனுப்பக் காரணமாயிற்று (யோவான் 3:16). அன்பால் உந்தப்பட்ட இந்த தியாகச் செயல் உலகை நிரந்தரமாக மாற்றிவிட்டது..
