வாழ்க்கை மாற்றும் தெய்வீக பரிசு
நானும் எனது கணவரும் எங்களது இளைஞர் குழுவினரை பாராட்டி அவர்களுக்கு வேதாகமங்களை பரிசளித்தோம். “உங்கள் வாழ்க்கையை மாற்ற கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசுகளைப் பயன்படுத்துவார்” என்று நான் அவர்களுக்குச் சொன்னேன். அன்றிரவு, ஒரு சில மாணவர்கள் யோவானின் சுவிசேஷத்தை ஒன்றாக வாசிக்க தீர்மானித்தனர். எங்கள் வாராந்திர கூட்டங்களில் நாங்கள் அவர்களுக்குக் கற்பித்தபோது, வீட்டில் வேதத்தை வாசிக்க குழுவை தொடர்ந்து உற்சாகப்படுத்தினோம். பத்து ஆண்டுகள் கழித்து, எங்கள் மாணவர் ஒருவரை நான் சந்திக்க நேரிட்டது. அவள் என்னிடத்தில் “நீங்கள் கொடுத்த பைபிளை நான் இன்னும் பயன்படுத்துகிறேன்,” என்று சொன்னாள். அவளுடைய நம்பிக்கை நிரம்பிய வாழ்க்கையில் நான் ஆதாரங்களைக் கண்டேன்.
வேதத்தின் வசனங்களைப் படிக்கவும், நினைவில் வைத்துக்கொள்ளவும் தேவன் தம் ஜனத்திற்கு அதிகாரம் கொடுக்கிறார். வேதவாக்கியங்களின்படி (சங்கீதம் 119:9) வாழ்வதன் மூலம் தூய்மையின் பாதையில் இருக்க அவர் நமக்கு உதவுகிறார். பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவும், நம்மை மாற்றவும் அவர் தம் மாறாத சத்தியங்களைப் பயன்படுத்தும்போது, நாம் அவரைத் தேடிக் கீழ்ப்படிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் (வச. 10-11). தேவனை அறிந்துகொள்ளவும், வேதாகமத்தில் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் உதவும்படி தினமும் தேவனிடத்தில் விண்ணப்பிக்க பிரயாசப்படுவோம் (வச. 12-13).
தேவனுடைய வழியில் வாழ்வதன் விலைமதிப்பற்ற மதிப்பை நாம் அடையாளம் காணும்போது, ஒருவன் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல” (வச. 14-15) அவருடைய ஆலோசனையில் நாம் மகிழ்ச்சியடைய முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (வச. 16) என்று பாடலாம். நம்மை பலப்படுத்த பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, தேவன் நம்முயை வாழ்க்கை மாற்றும் பரிசாக நமக்குக் கொடுத்திருக்கிற வேதத்தை ஜெபத்துடன் வாசிக்கும் ஒவ்வொரு கணத்தையும் நாம் அனுபவிக்க முடியும்.

ஒரு தேசிய முகாம்
மேற்கு ஆப்பிரிக்க வானத்துக்கும் எங்களுக்கும் இடையில் எதுவும் இல்லாதபடிக்கு, நட்சத்திரங்களின் கீழ் நாங்கள் முகாமிட்டோம். வறண்ட காலங்களில் கூடாரம் தேவையில்லை. ஆனால் நெருப்பு முக்கியமானது. “நெருப்பை அணைய விடாதே” என்று அப்பா ஒரு குச்சியால் மரக்கட்டைகளைத் தூண்டினார். நெருப்பு வனவிலங்குகளை எங்களுக்கு அருகாமையில் வரவிடாமல் தூரத்தில் வைத்திருந்தது. தேவனுடைய படைப்புகள் அற்புதமானவைகள் தான். ஆனால் உங்கள் முகாமில் சிறுத்தை அல்லது பாம்பு வந்துபோவதை நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீhர்கள்.
அப்பா கானாவின் மேல் பிராந்தியத்தில் ஒரு மிஷனரியாக பணியாற்றினார். அவருக்கு அனைத்து சூழ்நிலைகளிலிருந்தும் பாடத்தை கற்றுக்கொடுக்கும் திறன் இருந்தது. அந்த முகாமும் விதிவிலக்கல்ல.
தேவன் தம் ஜனங்களுக்கும், முகாம்களை போதிக்கிற ஒரு ஸ்தலமாகவே அனுமதித்திருந்தார். வருடத்திற்கு ஒருமுறை, ஒரு வாரம் முழுவதும், இஸ்ரவேலர்கள் “பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும்” (லேவியராகமம் 23:40) வைத்து தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்திருக்க அனுமதிக்கப்பட்டனர். அதற்கு இரண்டு நோக்கங்கள் இருந்தது. தேவன் அவர்களிடம், “நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்” (வச. 42-43) என்று சொல்லுகிறார். ஆனாலும், அந்த நாட்கள் பண்டிகையாய் ஆசரிக்கப்படவேண்டும். “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்” (வச. 40).
முகாமிடுவது என்பது உங்கள் வேடிக்கையான யோசனையாக இருக்காது. ஆனால் தேவன் தனது நன்மையை நினைவுகூர ஒரு மகிழ்ச்சியான வழியாக இஸ்ரவேலருக்கு ஒரு வார முகாமை ஏற்படுத்தினார். விடுமுறை நாட்களின் அர்த்தத்தை நாம் எளிதில் மறந்து விடுகிறோம். நம் பண்டிகைகள் நம் அன்பான தேவனின் தன்மையை நமக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான நினைவூட்டல்களாக இருக்கலாம். அவர் அதில் நமக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறார்.

மகிழ்ச்சியில் ஊழியம் செய்தல்
ஆண்ட்ரூ கார்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலைமை அதிகாரியாக இருந்தார். வெள்ளை மாளிகையில் அவரது பங்கு பற்றிய ஒரு நேர்காணலில் அவர் விளக்கினார். “ஒவ்வொரு பணியாளரின் அலுவலகத்திலும், 'நாங்கள் ஜனாதிபதியின் விருப்பப்படி சேவை செய்கிறோம்” என்று ஒரு வடிவமைக்கப்பட்ட நோக்க அறிக்கை தொங்குகிறது. ஆனால் நாங்கள் ஜனாதிபதியை மகிழ்விக்கவோ அல்லது அவருடைய மகிழ்ச்சியை வெல்லவோ சேவை செய்யவில்லை; மாறாக, அவருடைய வேலையைச் செய்ய அவர் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு சொல்ல நாங்கள் சேவை செய்கிறோம்.” அந்த வேலை, அமெரிக்காவை நேர்த்தியாய் ஆட்சி செய்வதாகும்.
அப்போஸ்தலனாகிய பவுல் அடிக்கடி வற்புறுத்தியபடி, நாம் பல வேளைகளில் ஒருவரையொருவர் ஒற்றுமையில் கட்டியெழுப்புவதை விடுத்து, மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். எபேசியர் 4இல் பவுல், “சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (வச. 11-13) என்று சொல்லுகிறார். 15-16 வசனங்களில், மக்களை பிரியப்படுத்த முயற்சிக்கும் செய்கையை விட்டுவிடும்படிக்கு அறிவுறுத்தி, “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” செயல்பட்டால், “அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது” என்று வலியுறுத்துகிறார்.
இயேசுவின் விசுவாசிகளாக, நாம் மக்களைக் கட்டியெழுப்பவும் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றவும் ஊழியம் செய்கிறோம். நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், அவருடைய திருச்சபையில் ஒற்றுமையை உருவாக்க அவர் நம் மூலம் செயல்படும்போது நாம் தேவனை பிரியப்படுத்துவோம்.

உனக்கென்ன
"அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?" என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.
நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். "எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?" என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).
அதற்கு இயேசு, "உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.

நீ பிரியமானவன்(ள்)
தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.
யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர். பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.
"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).
இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.